4.3 குடிமையும் பெருமையும்


    பிறர் போற்றும்படியான, சீர்மைகள் அல்லது சிறப்புகள் அனைத்தும்
ஒருவனுக்கு உரிய பெருமைகளாகக் கருதப்படுகின்றன. அல்லது,
பிறர் போற்றும்படியான இயல்புகள் தன்னிடம் இருப்பதை நினைத்து
ஒருவன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நல்ல குடியில் பிறந்த
ஒருவனிடம் பிறர் போற்றும்படியான பெருமைக்குரிய நல்ல
இயல்புகள் நிறைந்திருக்கும் என்கிறார் வள்ளுவர்.

4.3.1 ஆண் கற்பு


    சமூகவியலாளர்களின் கருத்தின்படி, உலகளாவிய நிலையில் ஆண்
ஆளுமைச் சமுதாய (male dominated society) அமைப்பே
தொன்று தொட்டு நிலவி வருகிறது. பெண்ணுரிமைக் குரல்
என்பதுவும், சமத்துவம் என்பதுவும் பிற்காலத்தில் எழுந்தவையே.

    ஆண் ஆளுமைச் சமுதாயத்திலும் பெண்ணின் கற்பே
வற்புறுத்தப்பட்டது;     எதிர்பார்க்கப்பட்டது.     முதலாளிகள்
சமுதாயத்திலும் (Feudal Society). முடியாட்சியின் தொடக்கக்
காலத்திலும், குறிப்பாகக் கற்பொழுக்கம் பெண்களிடம்
வற்புறுத்தப்பட்டதுபோல் ஆடவரிடம் வற்புறுத்தப்படவில்லை.
வள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சிக் காலம் எனலாம். ஆடவர்
ஒழுக்கம் பற்றி வரையறை செய்யப்படாத காலம். ஆனால்,
வள்ளுவர் அதைப்பற்றி அப்பொழுதே சிந்தித்துள்ளார். கற்பு
என்பது இருபாலருக்கும் (Both sex) உரியது என்று
எண்ணியுள்ளார். எனவே,


ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு



(குறள்: 974)


(ஒருமை = ஒருவனையே கணவனாக நினைக்கும்,
கொண்டு
= காத்துக் கொண்டு)

என்று குறிப்பிடுகிறார்.

• ஆடவர் ஒழுக்கம்

    ஒரே கணவனைக் காதலித்துத் தம் கற்பைக் காத்துக் கொள்ளும்
குல மகளிர்போல, ஓர் ஆடவனும், ஒரே மனைவியைக் காதலித்துத்
தன் கற்பைக் காத்துக் கொள்ளுவது பெருமை தரக்கூடியது.

    ஆடவருக்கும் மகளிருக்கும் கற்பு என்பது பொதுவானது என்பது
வள்ளுவரின் கருத்து.

    சாதிய அடிப்படையிலான இந்திய சமுதாய அமைப்பில் வாழ்ந்த
வள்ளுவர், ‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ (குறள்: 972) என்று
ஒரு புரட்சிகரமான கருத்தை வழங்கினார். அதேபோல், ஆண்
ஆளுமை உடைய சமுதாயத்தில் வாழ்ந்த வள்ளுவர், ‘ஆணுக்கு
ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி’ என்ற நிலை கூடாது என்று
கருதியிருக்கிறார். எனவே, தெய்வத்தைத் தொழாமல், கணவனையே
தொழும் கற்புடைய பெண்ணைப் பற்றிக் கூறிய வள்ளுவர்,
ஆடவரும் தம் கற்பைக் காப்பாற்றும் பண்பு வேண்டும் என்று
கருதியுள்ளார். மேலும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்டைத்
தமிழ் மரபு வழி வந்த வள்ளுவர் அதை நடைமுறைப்படுத்த
விழைந்திருக்கிறார் என்பது புலப்படும்.

• வள்ளுவர் நோக்கில் பாரதி

    வள்ளுவரின் இந்தக் கருத்தை வழிமொழிவதுபோல் பாரதியாரும்,


    கற்புநிலை என்று சொல்ல வந்தால் இரு
    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

(பெண்கள் விடுதலைக்கும்மி: 17-18)


(இருகட்சி = ஆண், பெண் என்ற இருதரப்பினருக்கும்)

என்று கூறுகின்றார். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியாரின்
இந்தக் கருத்து மிகவும் புரட்சிகரமானதாகப் பாராட்டப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர், ஆடவர்
கற்பைப் பற்றிக் கூறிய இந்தக் கருத்து எவ்வளவு புரட்சிகரமானது
என்பதனையும் எண்ணிப்பாருங்கள்!


4.3.2 பணிவு


    தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாத மென்மைத்தன்மையைப்
பணிவு என்பர். இத்தகைய தன்மை யாரிடம் இருக்கும்? நல்ல
பண்புகளைக் கொண்ட, நல்ல குடியில் தோன்றியவர்களிடம்
இருக்கும் என்கிறார் வள்ளுவர்.

• நெற்கதிர்களின் பணிவு

    வயல்களில் நெற்கதிர்களின் தலைகள் தரையோடு சாய்ந்திருக்கும்,
சில கதிர்களின் தலைகள் மட்டும் நிமிர்ந்து நிற்கும். எது
சாய்ந்திருக்கும்? எது நிமிர்ந்து நிற்கும்? கூர்ந்து கவனித்துப்
பார்த்திருக்கிறீர்களா? அதிக அளவில் விளைந்த நெற்களை உடைய
கதிர்கள் தரையோடு சாய்ந்திருக்கும். நெற்கள் இன்றி, பதர்களைக்
கொண்ட கதிர்கள் நிமிர்ந்து நிற்கும். இதைப்போல்தான்
மனிதர்களிலும், இவ்விரு நிலையினர் உள்ளனர் என்கிறார்
வள்ளுவர்.

    பல நல்ல பண்புகள் உடையவன் பணிவுடன், அடக்கம்
உடையவனாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். எந்தப் பண்பும்
இல்லாதவன், யாருக்கும் பணியாதவனாய் தன்னைத்தானே
வெளிப்படுத்திக் கொள்கிறவனாக இருப்பதையும் பார்க்கிறோம்.
இத்தகைய இயல்பே, அவர்கள் பண்பையும், அவர்கள் தோன்றிய
குடும்பத்தின் பெருமையையும் வெளிப்படுத்தும் என்கிறார் வள்ளுவர்,


பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து



(குறள்: 978)


(சிறுமை = கீழ் நிலை, அணியும் = பாராட்டிக் கொள்ளும்)

பெருமை உடையவர் என்று கருதத் தக்கவர்கள் எல்லாக்
காலத்திலும், செருக்கு இல்லாமல் பணிவுடன் செயல்படுவர்.
ஆனால், சிறுமை உடையவர் தம்மைத்தாமே மெச்சி,
உயர்வுபடுத்தித் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வர் என்பது
இந்தக் குறளின் பொருள்.

    இன்னொரு இடத்தில் (குறள்: 125), பணிதல் எல்லார்க்கும் நல்லது.
ஆயினும் அப்பண்பு செல்வம் உடையவர்க்கு இன்னும் ஒரு
செல்வம் போல் அமைகின்றது என்று கூறுகிறார் வள்ளுவர்.
குடிப்பெருமை உடையாரே பணிவு உடையோராக இருப்பர்; அது
அவர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் தன்மை உடையது
என்கிறார் வள்ளுவர்.

    ஒருவன், நல்ல குடும்பத்தைச் சார்ந்தவன் என்பது, அவன்
வெளிப்படுத்தும் பண்பின் பெருமையால் வெளிப்படும் என்பது
வள்ளுவர் கருத்து.