4.5 குடிமையும் குற்றமும்


    தவறு செய்வது மனித இயல்பு. சிலர், தான் செய்வது தவறா
அல்லது சரியா என்று கூடத் தெரியாமல் தவறு செய்வார்கள். இது
அறியாமையால் செய்யக் கூடிய தவறு. மன்னிக்கக் கூடியது. சிலர்
சூழல்களினால் தவறு செய்வார்கள். அதுவும் மன்னிக்கும்
தன்மையது. இப்படி மக்களில் பலர் தவறு செய்கின்றார்கள். ஆயின்
இவரது குற்றங்கள் ஆயிரத்தில் ஒன்றாகப் பிறர் கண்ணில்படாமல்
போய்விடுகின்றன. ஆனால், நல்ல குடியில் பிறந்தோரை
எல்லோரும் அறிவர். அவர்கள் புகழ் மணக்க உலக மக்களின்
மனத்தில் வாழ்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தவறு செய்தால்
அது மக்கள் கவனத்தை எளிதில் கவரும். அவர்கள் செய்வது
சிறு தவறாக இருந்தாலும், அது மிகப் பெரிய தவறாகத் தோன்றும்.

    இதேபோல, கற்புடைமையும் நற்குடிப் பிறந்தோரின் இயல்புகளில்
ஒன்று. நல்ல குடியில் பிறந்த ஒருவர் அன்பில்லாதவராக இருந்தால்
அவரது குடிப்பிறப்பையே ஐயுறுவர்.

4.5.1 குற்றம்


    குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர் ஒருவர் தவறு
செய்தால், அதைப் பார்த்து யாரும் வியப்படைவதில்லை. ஆனால்
தவறுகள் எதுவும் செய்யாத நல்ல குடியில் பிறந்த ஒருவன் ஒரு
சிறு தவறு செய்தாலும் அதைப்பார்த்து வியப்படைவார்கள்; ‘இவரா
இப்படிச்     செய்தார்?’     என்று     அதிர்ச்சியடைவார்கள்;
வருத்தப்படுவார்கள். அது ஒரு பெரும் தவறாகவே புலப்படும்.

• வெண்ணிற ஆடையும் அழுக்கும்

    பலநிறங்களாலான ஓர் ஆடையில் ஒரு சிறு கறை அல்லது அழுக்கு
இருந்தாலும் அது பிறர் கண்ணில் எளிதில் புலப்படாது. ஆனால்,
தூய வெண்மையான ஆடையில் ஒரு சிறு கரும்புள்ளி இருந்தாலும்
அது எல்லோர் கண்ணுக்கும் உடனே தெரிந்து விடும். அத்தகைய
ஆடையை அணிந்திருப்பவரைப் பார்ப்பவரெல்லாம், ‘உங்கள்
ஆடையில் ஒரு கறுப்புப் புள்ளி இருக்கிறது’ என்று சுட்டிக்
காட்டுவார்கள். இதற்கு என்ன காரணம்? தூய வெண்மை நிறப்
பின்புலத்தில் ஒரு சிறு புள்ளி இருந்தால் கூட அது பிறர் கண்ணுக்கு
எளிதில் தெரிந்து விடுகிறது. எனவேதான், வெள்ளை ஆடை
அணிந்தவர்கள் தம் ஆடையில் ஏதாவது கறை அல்லது அழுக்குப்
பட்டுவிடக் கூடாது என்று மிகவும் முன்னெச்சரிக்கையாக
இருப்பார்கள். அடிக்கடி தம் ஆடையைக் கவனித்துக் கொள்வர்.
ஓர் இடத்தில் அமர்வதாக இருந்தால்கூட மிகவும் கவனத்துடன்
செயல்படுவர். ஒருசிறு அழுக்கு அல்லது புள்ளி கூட அந்த
வெள்ளை ஆடையின் தோற்றப் பொலிவினையே கெடுத்துவிடும்.
மிகவும் விரும்பி, மகிழ்ச்சியுடன் வெள்ளை ஆடை அணிந்தவர்கள்
ஆடையில் ஒரு சிறு அழுக்குப் படிந்திருந்தாலும், அதைப் பார்த்துப்
பார்த்து அவர் அடையும் துன்பத்தை நாம் நேரடியாகப்
பார்த்திருக்கிறோம்.

    நல்ல குடியில் பிறந்தவர்கள் தூய வெண்மை ஆடை அணிந்தவர்கள்
போன்றவராவர். வெண்மை ஆடை அவர்களது நல்ல பண்புகளைப்
போன்றது. எனவே, நல்ல குடியில் பிறந்தோர் ஒரு சிறு தவறு
செய்தாலும் அது வெண்ணிற ஆடையில் உள்ள அழுக்குப் போல
உலகிலுள்ள எல்லோரது கண்களுக்கும் தெரிந்து விடுகிறது என்கிறார்
வள்ளுவர். இதை ஓர் உவமை வாயிலாக விளக்குகிறார்.


குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து



(குறள்: 957)


(கண் = இடத்தில், விசும்பு = வானம், மதி = நிலவு,
மறு
= களங்கம்)

    உயர்ந்த குடியில் பிறந்த ஒருவர் செய்யும் குற்றம் வானத்திலுள்ள
நிலவில் பொருந்தியிருக்கும் களங்கம் போல் எல்லார் கண்ணுக்கும்
புலப்படுமாறு உயர்ந்து விளங்கித் தோன்றும்.

    நினைத்த இடத்திலிருந்து அண்ணாந்து பார்த்தால் எல்லோர்
கண்ணுக்கும் புலப்படுவது நிலவு. எளிதில் எல்லோர் கண்ணிலும்
அது படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த நிலவு ஒளியையும்,
குளிர்ச்சியையும் வழங்குகிறது. இதனால் மக்கள் நன்மை
அடைகின்றனர். மக்கள் நாள்தோறும் நிலவைப் பார்ப்பதில்
மகிழ்ச்சியடைகின்றனர். அதைப்போல, மக்களுக்கு நன்மை
செய்கின்ற, நல்ல குடியைச் சார்ந்தவர்கள், எல்லோர் கண்ணுக்கும்
புலப்படுவர். அவர்களைப் பார்ப்பதிலும், அவர்களோடு பேசுவதிலும்
மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு மக்களின்
கவனத்தில் இருக்கும் நல்ல குடியைச் சார்ந்தவர் ஒரு சிறு தவறு
செய்தாலும் அது எல்லோருக்கும் தெரிந்து விடும். இதைத்தான்
வள்ளுவர் ஓர் அழகிய உவமையால் குறிப்பிட்டுள்ளார்.

4.5.2 அன்பின்மை


    நாம் பிறரிடம் அன்புடையவர்களாக இருந்தால் அவர்கள் நம்முடன்
நட்புடையவர்களாக அமைவார்கள். (குறள் : 74) எனவே அன்பு
என்பது மனித உறவின் அடிப்படை. மேலும் பிறரிடம்
அன்புடையவராய்ப் பொருந்தி வாழ்வதே வாழ்க்கையின் பயன்
(குறள் : 75) என்று கூறுகிறார் வள்ளுவர். ஆனால் இத்தகைய
சிறப்பு வாய்ந்த அன்பின் பெருமையை உணராது, அன்பிலாதவராய்
இருப்பின் அவர்கள் வாழ்க்கை எத்தகையதாக அமையும்
என்பதையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    பொதுவாக, நல்ல குடியில் பிறந்தவர்கள் நல்ல பண்புகள்
உடையவர்களாகத்     திகழ்வார்கள்.     எல்லோரிடமும்
அன்புடையவர்களாகக் காணப்படுவர். ஆனால், இவற்றிற்கு மாறாக,
பிறரிடம் அன்பு இல்லாதவர்களாகக் காணப்பட்டால், அவர்கள் நல்ல
குடியைச் சார்ந்தவர்கள்தானா என்பதே ஐயத்திற்கு உரியதாகிவிடும்
என்கிறார் வள்ளுவர். இதனை,


நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்



(குறள்: 958)


(கண் = இடம், நார் = அன்பு, இன்மை = இல்லாமை)

என்ற குறளில் குறிப்பிடுகிறார்.

    சிறப்புடைய நல்ல குடியில் பிறந்தவனிடத்தில் அன்பில்லாவிட்டால்
உலகம் அவனையும் அவன் குடிப்பிறப்பையும் பற்றி ஐயம்
கொள்ளும் என்பது இதன் பொருள்.

    ஒருவர் நம்மிடம் நல்ல பண்புடன் நடந்து கொண்டால், அவரைப்
பாராட்டும்பொழுது, அவர் பிறந்த குடியையும் சுட்டிக் காட்டிப்
பாராட்டுவோம். எனவே, ஒருவரது நடவடிக்கைகளைப் பற்றிக்
குறிப்பிடும்போது அவர் தோன்றிய குடியோடு தொடர்புபடுத்திக்
குறிப்பிடுவது மரபு. நல்ல குடிப்பிறந்தோரிடம் சில இயல்புகள்
அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நம் எதிர்பார்ப்பிற்கு
ஏற்ப அவர்கள் இயல்புகள் இல்லாவிட்டால், அவர்களைப் பற்றிய
நம்பிக்கையை இழந்து விடுகிறோம். நம்பிக்கையை இழக்கும்போது
அவர்கள்மீது ஐயம் வருகிறது. இந்த நடைமுறை உண்மையைத்தான்
வள்ளுவர், நல்ல குடியில் பிறந்தோன் அன்பு இல்லாதவனாக
இருந்தால், அவன் நல்ல குடியைச் சேர்ந்தவன்தானா என்ற ஐயம்
ஏற்படும் என்கிறார்.

    நல்ல குடியில் தோன்றியவன் நற்பண்புகள் பல பெற்றிருப்பதோடு,
எல்லோரிடமும் அன்பாக இருப்பான் என்கிறார் வள்ளுவர்.