ஒரு மனிதனை, அவன் நல்லவனா, தீயவனா என்பதை
எவற்றை
அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறோம்? அவனது இயல்புகள்,
நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டே குறிப்பிடுகிறோம். நல்ல
இயல்புகள் மிகுதியாக இருந்தால், நல்லவன் என்கிறோம். தீய
பண்புகள் பெரும் அளவில் இருந்தால் தீயவன் என அடையாளம்
காட்டுகிறோம். எனவே ஒருவனது பண்புகளே, ஒருவன்
எத்தகையவன் என்பதனை எடுத்துக்காட்டுகின்றன.
இத்தகைய
அடிப்படையிலேயே, சான்றாண்மை எனும் நல்ல
இயல்புகள் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார். வள்ளுவர் குறிப்பிடும்
சான்றாண்மை பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன.
• சான்றாண்மை
இந்த உலகத்தில், கொடுமைகள் பல செய்கின்ற தீயவர்கள்
பலர்
இருக்கின்றனர். இருப்பினும் இந்த உலகம் நிலைத்து இருக்கிறது.
இதற்கு என்ன காரணம்? இதற்கு விடை தருகிறார், கடலுள் மாய்ந்த
இளம் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னர். புறநானூற்றில் இடம்
பெற்றுள்ள அவரது பாடல் இதற்கு விடை தருகிறது.
தேவர்கள்
இறப்பில்லா வாழ்க்கையை உடையவர்கள். அதற்கு என்ன
காரணம்? அமிழ்தம் எனும் உணவை அவர்கள் உண்கிறார்கள்
என்று குறிப்பிடுவர்.
தேவர்கள்
உண்ணும் உணவாகிய அமிழ்தமே கிடைத்தாலும் தான்
மட்டுமே உண்ணாமல், பிறருக்கும் வழங்கி மகிழ்வர். எத்தகைய
சூழலிலும் கோபம் இல்லாதவர்கள், புகழ் வருவதாக இருந்தால் தம்
உயிரையே கொடுப்பார்கள், உலகமே பரிசாகக் கிடைத்தாலும்
பழிதரும் செயல்களைச் செய்யமாட்டார்கள். இத்தகைய
இயல்புடையோர் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைத்திருக்கிறது
என்று குறி்ப்பிடுகிறார் கடலுள் மாய்ந்த இளம் பெரும்வழுதி.
இத்தகைய சிறப்புடையோரையே வள்ளுவர் சான்றாண்மை கொண்ட
சான்றோர் என்று கூறுகிறார்.
எல்லாரிடத்தும்
அன்பு காட்டுதல், பழி பாவங்களுக்கு வெட்கப்படும்
நாணம், மக்கள் அனைவருக்கும் உதவும் ஒப்புரவு, எளியவரிடம்
இரக்கம்காட்டும் கண்ணோட்டம், எப்பொழுதும் தவறாத வாய்மை,
ஆகிய இவை ஐந்தும் சால்பு என்ற மண்டபத்தைத் தாங்கும்
தூண்களாகும் என்று சான்றாண்மைக்கு விளக்கம் தருகிறார்
வள்ளுவர்.
|