5.5 வாய்மை


    வாய்மை என்றால் என்ன என்பதற்குப் பல விளக்கங்கள்
கொடுக்கலாம். ஆனால் பொய்யாமையே வாய்மை என்கிறார்
வள்ளுவர். எப்பொழுதும் எந்தச் சூழலிலும் பொய் பேசாதிருத்தல்
வாய்மை எனப்படும்.

    ‘பொய்’ என்றால் அது தீமையின் அடிப்படை. ஒருவனைப்
பொய்யன் என்று சொன்ன உடனே அவன் தீயவன் என்று
அடையாளம் காட்டப்படுகிறான். எனவே பொய், பொய் பேசுதல்
என்பவை தீமையின் அடையாளங்களே. ஆனாலும், பேசுகின்ற
பொய்யால் ஒரு நன்மை கிடைக்குமானால், அதையும் வாய்மையைச்
சார்ந்தது என்று ஏற்றுக் கொள்ளலாம் என வள்ளுவர்
குறிப்பிடுகிறார்.     சமயங்களும்,     சமயத்     தலைவர்களும்,
அறநெறியாளர்களும்     எந்தச் சூழலிலும்,     எதற்காகவும்
பொய்பேசாதீர் என்கின்றனர். ஆனால் வள்ளுவர் பொய் பேசலாம்
என்கிறார். குற்றம் (தீமை) கலவாத நன்மை பயப்பதாக இருந்தால்
பொய் பேசலாம் என்கிறார் வள்ளுவர். வாழ்க்கையில் ஏதாவது
ஒரு சூழலில் பொய்பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதைத்
தவிர்க்க இயலாது. இந்த நடைமுறை உண்மையை நன்கு
உணர்ந்தவர் வள்ளுவர். எனவே தான், ‘பொய் பேசுவதால்
நன்மை ஏற்படுமானால் பொய்’ பேசுவதில் தவறு இல்லை
என்கிறார். இங்கே ‘நன்மை’ என்பது எவருக்குமே தீங்கு
விளைக்காத ஒன்று என்பதாகும்.

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்



(குறள்: 292)


(புரை = குற்றம்)

வாய்மை என்றால் என்ன என்பதற்கு வள்ளுவர் கூறும் விளக்கம்
இரண்டு. ஒன்று பொய் சொல்லாமை. இன்னொன்று, சூழலின்
காரணமாகச் சொல்லப்படும் பொய்யால் நன்மை விளையுமானால்
அதுவும் வாய்மை ஆகும்.


5.5.1 உலகத்தார் உள்ளமும் சான்றோரும்


    ‘பொய்’ பேசுவது ஒரு தீமையாக, ஒரு பாவமாகக் கருதப்படுகிறது.
எனவே எல்லா மதங்களும் ‘பொய் பேசாதே’ என்று
சொல்லுகின்றன. பிறருக்குத் தீங்கு செய்யும் பொய்யை மனத்தளவில்
கூட நினைக்கக் கூடாது என்பதே இதன் அடிப்படை.

    மனத்தளவில் நினைப்பது செயல்படுத்தாத வரையிலும் பிறருக்குத்
தெரியாது. நம் எண்ணத்தைச் செயல்படுத்தும் பொழுதுதான், நாம்
எத்தகைய எண்ணம் கொண்டிருக்கிறோம் என்பது பிறருக்குப்
புலப்படும். இருப்பினும் ‘மனத்தளவில்’ என்று சொல்வதற்குக்
காரணம் என்ன? அந்த எண்ணமே, சிந்தனையே, கேட்டின்,
தீமையின் தொடக்கம். தீய சிந்தனை தீய செயலுக்கு வித்திடுகிறது.
இதை முளையிலேயே கிள்ளி் எறிய வேண்டும் என்று
எண்ணுகின்றனர், பெரியோர். இத்தகைய எண்ணம் உடையவர்கள்
சான்றோர்கள். மனத்தளவில் கூடத் தீங்கு நினைக்காத, பொய்
சொல்ல விரும்பாத தன்மையை உடைய இத்தகைய சான்றோர்கள்,
உலகத்தில் உள்ளோர் உள்ளத்தில் எல்லாம் நிலைத்து இருப்பார்கள்
என்கிறார் வள்ளுவர்.


உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்”



(குறள்: 294)


(ஒழுகின் = செயல்பட்டால்)

மனத்தூய்மையே சமயங்கள் வலியுறுத்தும் அறம். ஒரு மனிதனின்
நன்மைக்கும் தீமைக்கும் அடிப்படை அமைப்பது அவனது மனம்.
மனத்தை ஒரு நிலைப் படுத்தி விட்டால், தீய சிந்தனைகளிலிருந்து
விடுபடலாம். எனவே, தீங்கு நினைக்காத மனத்தைப் பெற முயல
வேண்டும். அத்தகைய மனம் பெற்றோர் சான்றோர். அவர்களை
உலகிலுள்ள அனைவரும் தம் மனத்தில் கொள்வார்கள்.