3.3 அரசுரிமை


     வீரராசேந்திரன் மரணத்திற்குப் பின்பு சோழப் பேரரசனாக
அரசு கட்டிலில் அமர்ந்தவன் முதலாம் இராஜேந்திரசோழனின்
மகள்வழிப் பேரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

3.3.1 முதற்குலோத்துங்கன் (கி.பி.1070-1120)

     'சுங்கம்     தவிர்த்து     இருள்நீக்கி உலகு ஆண்ட
ஸ்ரீகுலோத்துங்க     சோழதேவர்' எனக் கல்வெட்டுகளில்
புகழப்பெறும் குலோத்துங்கசோழன், அதிராசேந்திரசோழனின்
மறைவுக்குப் பின்பு சோழப்பேரரசனாக 'இராசகேசரி' என்ற
பட்டத்துடன் முடிசூடிக்கொண்டான். இவன் கீழைச் சாளுக்கிய
மன்னனான இராசராச நரேந்திரனுக்கும் கங்கைகொண்ட முதலாம்
இராசேந்திரசோழனின் மகள் அம்மங்கைதேவிக்கும் மகனாய்ப்
பிறந்தவன். இவனுக்குத் தந்தைவழி அரசு உரிமை கிட்டவில்லை
எனினும் தாய்வழிச் சோழநாட்டு அரசு உரிமை கிட்டியது.
இளமைப்பருவத்திலிருந்து தாய்மாமன் வீட்டில் வளர்ந்ததாலும்,
அதிராஜேந்திரனுக்குப் பிறகு ஏற்ற ஆண் வாரிசு இல்லாததாலும்
சோழ சிம்மாசனம் இவனுக்கு உரியதாயிற்று.

     இராஜேந்திரன் எனும் இயற்பெயருடைய இம்மன்னவன்,
மகுடாபிஷேகம் செய்து கொள்ளும் போது குலோத்துங்கன் எனும்
பெயர் பெற்றான். இவ்வேந்தனும் முன்னாளைய சோழ
அரசர்கள் போன்றே மேலைச்சாளுக்கிய நாடு, பாண்டிய நாடு,
சேர நாடு, தென் கலிங்கம், வட கலிங்கம் ஆகிய
நாடுகளுடன் போர் தொடுத்துப் பெருவெற்றியடைந்தான்.
ஆனால் இவனுக்கு முன்பு இருந்த சோழ அரசர்கள் ஆதிக்கம்
செலுத்திய ஈழம், வேங்கி நாடு, கங்கபாடி நாடு ஆகியவற்றின்
உரிமைகளை இழந்தான். சீனநாடு, கடாரம், காம்போஜம்
போன்ற வெளிநாடுகளுடன் நட்புறவும் வணிகத் தொடர்பும்
கொண்டு திகழ்ந்தான். வடபுலத்துக் கன்னோசி மன்னனுடன்
நட்புறவு கொண்டு விளங்கினான்.

     மாமன்னன்     இராசராசன் போன்றே இம்மன்னவனும்
சோழநாடு முழுவதையும் அளக்கும்படி செய்து, விளைநிலங்கனின்
பரப்பை உள்ளவாறு உணர்ந்து சில வரிè¬÷ ஒழுங்குபடுத்தினான்.
முத்தமிழும் செழிக்கச் செய்த இம்மன்னவன், சிறந்த
கலாரசிகனாய், அனைத்துச் சமயங்களிடத்தும்     ஈடுபாடு
உடையவனாய் விளங்கினான். தன் நாட்டின் மக்கள் நலன் கருதி,
சுங்க வரியை நீக்கினான். இவனது வீரத்தைப் புகழ்ந்து
ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி எனும் அருந்தமிழ் நூலை
இயற்றினார். தமிழில் மலர்ந்த முதல் பரணி இலக்கியம்
இதுவாகும். முதற்குலோத்துங்கனின் தானைத்தலைவர்களுள்
குறிப்பிடத்தக்கவன் கருணாகரத்தொண்டைமான் என்பவனாவான்.

  • விக்கிரம சோழன் (கி.பி.1118-1136)

     கி.பி.1118இல் இளவரசுப் பட்டமேற்ற முதற்குலோத்துங்கனின்
மகனான விக்கிரமசோழன், ஏறத்தாழ கி.பி.1120இல் தன்
தந்தையின் மறைவுக்குப் பின்பு பரகேசரி என்ற பட்டத்துடன்
பேரரசனாக முடிசூடிக்கொண்டான். வேங்கி நாடும், கங்கபாடியும்
இவனது ஆளுகையின்கீழ் வந்தன. சிறந்த நல்லாட்சி செய்த
இப்பெருவேந்தன், தில்லைத்திருக்கோயில் திருப்பணிகள் பல
புரிந்து பெரும்புகழ் எய்தினான். கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
இவனது     புகழை 'விக்கிரம சோழனுலா' எனும் நூலாகப்
பாடியுள்ளார்.

3.3.2 இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150)

     கி.பி.1133இல் இளவரசுப்     பட்டமேற்ற இரண்டாம்
குலோத்துங்கன் விக்கிரம சோழனின் மகனாவான். கி.பி.1135இல்
விக்கிரமசோழன்     இறந்தபிறகு பேரரசனானான். இவனது
ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க வெளிநாட்டுப் போர்கள்
ஏற்படவில்லை. சோழநாடு வளமோடும், அமைதியோடும்
திகழ்ந்தது.     அரசன் தில்லைப்பெருங்கோயிலுக்குப் பல
திருப்பணிகள் செய்து புகழ்பெற்றான். பல்கலைப் புலமை பெற்ற
இவ்வேந்தன்,     எல்லாச் சமயங்களிடத்தும் அன்புடன்
திகழ்ந்தான். இவனது     மதியமைச்சராகத்     திகழ்ந்த
சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய
புராணத்தையும்,     அவைக்களப்புலவரான     ஒட்டக்கூத்தர்
குலோத்துங்கசோழன்     உலா எனும் நூலையும் எழுதி,
சமயத்திற்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தனர். கி.பி.1150இல்
மறைந்த இப்பெருவேந்தனுக்கு 'அநபாயன்' என்ற
சிறப்புப்பெயர் ஒன்றுண்டு.

  • இரண்டாம் இராசராசசோழன் (கி.பி.1146-1163)

     இரண்டாம்     குலோத்துங்கனின் மகனான இரண்டாம்
இராசராசன் கி.பி.1146இல் இளவரசுப் பட்டத்தைப்பெற்றான்;
கி.பி.1150இல் தந்தையின் மறைவுக்குப் பிறகு பேரரசனாகச்
சோழநாட்டு அரியணையில் பரகேசரி எனும் பட்டத்துடன்
அமர்ந்தான். மலையமலைக்குப் பக்கத்தில் காவிரி அடைப்புண்டு
நீர் வரத்துச் சுருங்கியபோது, தன் வீரர்கள் துணையுடன்
அம்மலையை வெட்டி காவிரிக்கு வழிகண்டான். இவனது
ஆட்சிக்காலத்தில் போர்கள் இல்லாமல் நாடு அமைதியுடன்
திகழ்ந்தது. குடந்தைக்கு அருகில் (தாராசுரம் எனும் ஊரில்)
இராஜராஜேச்சரம் எனும் பெருங்கோயிலை எடுத்துப் புகழ்
பெற்றான். இவனது புகழை ஒட்டக்கூத்தர் 'இராசராச
சோழனுலா' எனும் பெயரில் நூலாக யாத்துள்ளார்.
இராசராசசோழனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த அவர்
தக்கயாகப்பரணி எனும் பெருநூலைப் பாடித் தமிழுக்கு வளம்
சேர்த்துள்ளார்.

• இரண்டாம் இராசாதிராசசோழன் (கி.பி.1163-1178)


     இரண்டாம் இராசராசசோழனால் கி.பி.1163இல் இளவரசுப்
பட்டம் கட்டப்பெற்ற இராசாதிராசன், விக்கிரமசோழனின்
பெயரனும், நெறியுடைப்பெருமாள் என்பானின் புதல்வனுமாவான்.
கி.பி.1166இல் பேரரசனாக 'இராசகேசரி' எனும் பட்டத்துடன்
முடிசூட்டப்பெற்றான். பாண்டி நாட்டுப்போர், ஈழத்துப்போர்
ஆகியவற்றில் பங்குகொண்டான். இரண்டாம் இராசராசனின் மகன்
சிறுவனாய் இருந்தமையால்      இராசாதிராசன்     சோழ
சக்கரவர்த்தியாக முடிசூடும் சூழல் ஏற்பட்டது.

3.3.3 மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1218)

     இரண்டாம்     இராசராசனின்     மகனான மூன்றாம்
குலோத்துங்கன் கி.பி.1178இல் பரகேசரி என்ற பட்டத்துடன் சோழ
சக்கரவர்த்தியாக முடிபுனைந்துகொண்டான். இவனது ஆட்சி
கி.பி.1218 வரை நீடித்தது. இவன் மும்முறை பாண்டிய
நாட்டோடு போர் தொடுத்தவன். ஈழம், மற்றும் வட புல
நாடுகள் சிலவற்றையும் வென்று தனது ஆட்சிப்பரப்பை
விரிவுபடுத்தினான். திரிபுவனம் எனும் ஊரினை நிர்மாணம் செய்து
திரிபுவனவீரேச்சுரம் எனும் பெருங்கோயிலையும் எடுப்பித்தான்.
மிகச்சிறந்த ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வரிசையில்
இவனும் குறிப்பிடத்தக்கவனாவான். மூன்றாம் குலேத்துங்கனுக்குப்
பிறகு சோழர் வலிமை குன்றலாயிற்று.

  • மூன்றாம் இராசராசசோழன் (கி.பி.1216-1256)

     கி.பி.1216இல் இளவரசனாக முடிசூடிய மூன்றாம் இராசராசன்,
தன் தந்தை குலோத்துங்கனின் மறைவிற்குப் பிறகு, கி.பி.1218இல்
பேரரசனாக அரியணையில் அமர்ந்தான். பரகேசரி என்ற
பட்டத்துடன் விளங்கிய இவனது ஆட்சிக்காலத்தில் தெற்கில்
சுந்தரபாண்டியனும்,     வடக்கே     காடவ     மன்னன்
கோப்பெருஞ்சிங்கனும், வடமேற்கே ஹொய்சள அரசும் மிக
வலிமையுடன் திகழ்ந்ததால் இவனது வலிமை குன்றியது.
சோழ அரசுக்குக் கட்டுப்பட்டுத் திகழ்ந்த மகத நாட்டு
வாணகோவரையர், திருமுனைப்பாடி நாட்டுக் காடவராயர்
போன்றோர் இராசராசனுடன் பகைமை கொண்டனர். கி.பி.1219இல்
மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து
வந்து வெற்றி கண்டு, தலைநகரங்களை அழித்து எரியூட்டினான்.
துவாரசமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த
போசளர்கள் (ஹொய்சளர்) இராசராசனுக்கு உதவ முன் வரவே,
சுந்தரபாண்டியன் சோழப்பேரரசை மீண்டும் சோழனுக்கே திருப்பி
அளித்தான். பின்னர் கி.பி.1231இல் இரண்டாம் முறையாக,
சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படை எடுத்து
வெற்றிகண்டான். தோல்வியுற்ற     இராசராசன் உதவிகோரி
குந்தளநாடு நோக்கிச் சென்றபோது வழியில் காடவ மன்னன்
கோப்பெருஞ்சிங்கனால் சிறைபிடிக்கப்பட்டான். இச்செய்தி அறிந்த
போசள மன்னன் வீரநரசிம்மன் பெரும்படையுடன் வந்து
சேந்தமங்கலம் சிறையிலிருந்த சோழனை மீட்டு, மீண்டும் சோழ
சிம்மாசனத்தில் அமருமாறு செய்தான். சோழ நாட்டில்
கலகங்களும், துரோகச்செயல்கள் பலவும் நிகழ்ந்தன. கி.பி.1256
வரை கடும் சோதனைகளுக்கிடையே இவனது ஆட்சி
தொடர்ந்தது. கி.பி.1246இல்     தன் மகன் மூன்றாம்
இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான்.

  • மூன்றாம் இராசேந்திரசோழன் (கி.பி.1246-1279)

     மூன்றாம்     இராசராசனின் புதல்வனான மூன்றாம்
இராசேந்திரன் கி.பி.1246இல் இளவரசுப் பட்டம் ஏற்றுப் பின்பு
தன் தந்தையின் ஆட்சிக்குப் பிறகு, 'பரகேசரி' என்ற
பட்டத்துடன் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். இவன்
தந்தை காலத்தில்     இழந்திருந்த செல்வாக்கைத் தன்
வீரத்தால் மீண்டும் நிலைநிறுத்த முயன்றான். பாண்டிய மன்னன்
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை வென்று, தனக்குக்
கப்பம் செலுத்துமாறு செய்தான். இவனுக்குப் போசள மன்னன்
வீரசோமேஸ்வரனுடன் மாறிமாறி நட்பும் பகைமையும்
ஏற்பட்டன. தெலுங்கச் சோழர்களின் உதவி இவனுக்கு
பலமளித்தது. போசள மன்னன் வீரராமநாதன் இவனது நாட்டின்
ஒரு பகுதியான கண்ணனூரில் தங்கி ஆட்சி புரியத்
தொடங்கினான். கி.பி.1257இல் முதலாம்     சடையவர்மன்
சுந்தரபாண்டியனின் எழுச்சியால் இவன் பாண்டியனுக்குக் கப்பம்
செலுத்தும் அவல நிலை ஏற்பட்டது. கி.பி.1279இல் இவனது
மரணத்தோடு சோழராட்சி முடிவுற்றது.