4.1 பாண்டியர்


     சங்க காலத்தில் (கிமு. 3-ஆம் நூற்றாண்டு - கி.பி.
3-ஆம் நூற்றாண்டு ) தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்கள்
வரிசையில் பாண்டிய மரபினரும் திகழ்ந்தனர் என்பதை முன்னர்க்
கண்டோம். கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் மத்தி்யில் களப்பிரர்
என்போர் மதுரையைக் கைக்கொண்டு ஆளத் தொடங்கினர்
என்பதையும்     அறிந்தோம். இதற்குப் பிறகு     (300
ஆண்டுகளுக்குப்பின்) ஏறத்தாழ கி.பி. 550-இல் மீண்டும்
பாண்டியர்கள் எழுச்சி பெற்று, தென் தமிழகத்தை ஆளத்
தொடங்கினர். இடையிடையே மற்ற மரபு      அரசர்களின்
தாக்குதல்களால் பாண்டியர் வலிமை குன்றினாலும் கி.பி.1650-ஆம்
ஆண்டு வரை பாண்டியர் ஆட்சி தொடர்ந்தது. இக்கால
கட்டத்தை

(1) முற்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 550 - 1000)
(2) இடைக்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 1000 - 1200)
(3) பாண்டியப் பேரரசு (கி.பி. 1200 - 1371)
(4) பிற்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 1371 - 1650)

என நான்கு பகுப்புகளாகக் காணலாம்.

    பாண்டியர் தென்பாண்டி நாட்டை ஆட்சி செய்த காலத்தில்
தமிழகத்தில் பிற மரபு மன்னர்களின் ஆட்சியும் ஆங்காங்கே
தொடர்ந்தன.

4.1.1 வரலாற்று மூலங்கள்

     சங்க காலப் பாண்டியர்களின் வரலாற்றை அறிய, சங்கத்தமிழ்
நூல்களும், குறைந்த அளவில் சங்ககாலப் பாண்டியர் காசுகளும்
கிடைக்கின்றன.ஆனால் சங்க காலத்திற்குப் பின் வந்த பாண்டியர்
வரலாறு அறிய வேள்விக்குடிச் செப்பேடு, ஸ்ரீவரமங்கலச்
செப்பேடு, சின்னமனூர்ச் சிறிய செப்பேடு மற்றும் சின்னமனூர்ப்
பெரிய செப்பேட்டுத் தொகுதிகள், தளவாய்புரச் செப்பேடு,
சிவகாசி சாசனம் போன்ற செப்பேட்டுச் சாசனங்களும், நூற்றுக்
கணக்கான கல்வெட்டுச் சாசனங்களும், பாண்டிய அரசர்கள்
வெளியிட்ட காசுகளும் சமகாலத்துச் சான்றுகளாக (contemporary)
விளங்குகின்றன. இவை தவிர தேவாரம், திருவாசகம்,
திவ்யபிரபந்தம், பெரியபுராணம் போன்ற சமய இலக்கியங்களும்;
பாண்டிக்கோவை , பாண்டிய குலோதயம் (வடமொழி) போன்ற
நூல்களும் பாண்டியர் வரலாறு அறியத் துணை புரிகின்றன.