4.4 பாண்டியப் பேரரசு (கி.பி. 1200 - 1371)


     மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 - 1218) தன்
ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1186-இல்) மாறவர்மன் விக்கிரம
பாண்டியன் என்ற பாண்டிய அரசனை மதுரை அரியணையில்
அமர்த்தினான். அக்கால கட்டத்தில் பாண்டியர் சோழர்களுக்குத்
திறை செலுத்தும் நிலையில் இருந்தனர். விக்கிரம பாண்டியனின்
மகனான குலசேகர பாண்டியன் குலோத்துங்க சோழனுக்குத் திறை
செலுத்த மறுத்ததால், சோழன் கி.பி. 1203-இல் மதுரை மீது படை
எடுத்தான். இப்படை எடுப்பால் மதுரை நகரம் பெரும்
அழிவிற்கு உள்ளானது. தோல்வியுற்ற குலசேகரன் தன் தேவி
மற்றும் மகனுடன் குலோத்துங்கனிடம் சரண் அடைந்தான். அபயம்
என்று வந்த குலசேகரனுக்கு தகுந்த மரியாதைகளைக்
குலோத்துங்கன் செய்தான். மீண்டும் அவனுக்கு அவ்வரசை
வழங்கினான்.

  • பாண்டியப் பேரரசின் தோற்றம்

     பரந்துபட்ட தமிழகம் முழுவதையும் தங்கள் ஆட்சியின்
கீழ்க்கொணர்ந்து வலிமை மிக்க ஒரு பேரரசாகப் பாண்டியர்
ஆட்சியை     நிறுவிய பெருமை முதலாம் மாறவர்மன்
சுந்தரபாண்டியனுக்கும் (கி.பி. 1216 - 1244), சடையவர்மன் முதலாம்
சுந்தரபாண்டியனுக்கும் (கி.பி. 1250 - 1284) மட்டுமே உரியதாகும்.
‘பூ மருவிய திருமடந்தை’ எனத் தொடங்கும் மாறவர்மன்
சுந்தரனின் கல்வெட்டுகளும், ‘பூமலர் வளர் திகழ்’ என்ற மெய்க்
கீர்த்தியுடன் தொடங்கும் சடையவர்மன் சுந்தரனின்
கல்வெட்டுகளும் அவர்கள் கால வரலாற்று     நிகழ்வுகளை
எடுத்துரைக்கின்றன. மாறவர்மன் சுந்தரனோ 400 ஆண்டுகளுக்கும்
மலோக வலிமையுடன் திகழ்ந்த சோழப்பேரரசை வலிகுன்றச்
செய்தான். சடையவர்மன் சுந்தரனோ சோழராட்சிக்கும், கண்ணனூர்
போசளர் வலிமைக்கும்     முற்றுப்புள்ளி     வைத்ததோடு,
கோப்பெருஞ்சிங்கனைக் கட்டுப்படுத்தி, நெல்லூர் வரை பாண்டியர்
ஆட்சியை நிறுவினான்.

     இவர்களால்தான் வலிவுடைய பாண்டியப் பேரரசு தோற்றம்
பெற்றது.

  • ஆட்சிசெய்த பாண்டியர்கள்

1. முதலாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி. 1190 - 1218)
2. முதலாம் மாறவர்மன் சுந்தரன் (கி.பி. 1216 - 1244)
3. முதலாம் மாறவர்மன் விக்கிரமன் (கி.பி. 1218 - 1232)
4. இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி்.பி. 1237 - 1266)
5. இரண்டாம் மாறவர்மன்சுந்தரன் (கி.பி. 1238 - 1255)
6. முதலாம் சடைய வர்மன் விக்கிரமன் (கி.பி. 1241 - 1254)
7. இரண்டாம் மாறவர்மன் விக்கிரமன் (கி.பி. 1250 - 1276)
8. முதலாம் சடையவர்மன் சுந்தரன் (கி.பி. 1250 - 1284)
9. முதலாம் சடையவர்மன் வீரன் (கி.பி 1253 - 1283)
10. இரண்டாம் சடையவர்மன் வீரன் (கி.பி. 1254 - 1265)
11. இராஜகேசரி வீரபாண்டியன் (கி.பி. 1266 - 1286)
12. முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1268 - 1318)
13. இரண்டாம் சடையவர்மன் சுந்தரன் (கி.பி. 1277 - 1294)
14. மூன்றாம் சடையவர்மன் சுந்தரன் (கி.பி. 1278 - 1301)
15. மூன்றாம் மாறவர்மன் விக்கிரமன் (கி.பி. 1281 - 1289)
16. மூன்றாம் சடையவர்மன் வீரன் (கி.பி. 1297 - 1342)
17. நான்காம் சடையவர்மன் சுந்தரன் (கி.பி. 1303 - 1325)
18. மூன்றாம் மாறவர்மன் சுந்தரன் (கி.பி. 1303 - 1322)
19. ஐந்தாம் சடையவர்மன் சுந்தரன் (கி.பி. 1304 - 1319)
20. முதலாம் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் (கி.பி. 1308 - 1344)
21. முதலாம் சடையவர்மன் ஸ்ரீவல்லபன் (கி.பி. 1308 - 1341)
22. சடையவர்மன் இராஜராஜன் சுந்தரன் (கி.பி. 1310 - 1332)

இவர்களைத் தவிர மேலும் சில பாண்டிய மன்னர்கள்
இக்கால கட்டத்தில் வாழ்ந்திருந்தனர்.

4.4.1 சுந்தரபாண்டியன்

     கி.பி.1216- இல் முடிசூடிக் கொண்ட முதலாம் மாறவர்மன்
சுந்தரபாண்டியன் மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பிறகு கி.பி.
1218-இல் சோழநாட்டின் மீது படை எடுத்தான். உறையூரையும்
தஞ்சையையும் எரியூட்டினான். கூடம், மாமதில்கள், கோபுரங்கள்,
ஆடரங்குகள், மாளிகைகள், மண்டபங்கள் எனச் சோழநாட்டில்
இருந்தவை அனைத்தையும் இடித்துத் தள்ளினான். பின்பு
சோழநாட்டு ஆயிரத்தளி அரண்மனை அமர்ந்து வீராபிஷேகம்
செய்து கொண்டான். இவ்வாறு மூன்றாம் இராஜராஜ சோழனை
வெற்றி கண்ட சுந்தரபாண்டியன் தான் மதுரைக்குத் திரும்பும்
வழியில் பொன்னமராவதி எனும் ஊருக்கு வந்தான். அங்கிருந்த
வண்ணம் நாடு இழந்த மூன்றாம் இராஜராஜனை வரவழைத்துச்
சோழநாட்டையும், மணிமுடியையும் அவனுக்கே திருப்பியளித்தான்.
இதனால் சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியன் என்ற சிறப்புப்
பெயரும் பெற்றான். போசள மன்னன் வல்லாளனும், அவன் மகன்
வீரநரசிம்மனும்     சோழன்     மூன்றாம்     இராஜராஜனுக்குப்
பலவாற்றானும் உதவ, கோபமுற்ற சுந்தரபாண்டியன் மேலும்
இருமுறை சோழன் மீது படை எடுத்து வந்து வெற்றி பெற்றான்.
போசளர் தலையீட்டால் சோழனுக்கு நாடாளும் உரிமை கிடைத்தது.

4.4.2 பாண்டிமண்டலத்தில் போசளர்கள்

     திருச்சிக்கு அருகேயுள்ள கண்ணனூர் எனும் ஊரினைத்
தலைமையிடமாகக் கொண்டு கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த
போசளர்கள் தமிழகத்தில் காலூன்றினர். பாண்டியர்களுக்கு
எதிராகச் சோழர்களுக்கு உதவ முற்பட்டதனால் இவர்களது
பலம் மிகுந்தது. கண்ணனூரில் போசளர் ஆட்சியைத்
தோற்றுவித்தவன் வீரநரசிம்மனாவான். இவ்வரசன் கி.பி. 1231- இல்
காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனைத் தோற்கடித்து அவன்
சிறைபிடித்திருந்த மூன்றாம் இராஜராஜ சோழனைச் சிறையிலிருந்து
மீட்டு, அவனைச் சோழர் அரியணையில் அமரச் செய்தான்.
போசள வீரநரசிம்மன் மகனான வீரசோமேஸ்வரன் பாண்டிய
நாட்டை வென்று அவர்களிடமிருந்து திறைபெற்றான். இக்கால
கட்டத்தில் வெட்டப் பெற்ற போசளர் கல்வெட்டுக்கள் பல
பாண்டியநாட்டின் பல்வேறு இடங்களில் காணப்பெறுகின்றன.
பாண்டியர் போசளர்களுடன் நட்புறவுடன் திகழும் நிலை
ஏற்பட்டது.

    போசள வீரசோமேஸ்வரனுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே
இருந்த நட்பு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கி.பி. 1250-இல்
முடிசூடிய இரண்டாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் போசள
மன்னனுடன் பகைமை கொண்டான். அவனது தம்பியான
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1264- இல்
வீரசோமேஸ்வரனைப் போரில் கொன்று, பாண்டிய நாட்டில்
இருந்த போசளர் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டு வந்தான்.

4.4.3 சோழப்பேரரசும் பாண்டியப்பேரரசும்

    கி.பி. 1250-இல் முடிசூடிக்கொண்ட முதலாம் சடையவர்மன்
சுந்தர பாண்டியன் கி.பி. 1257-இல் சோழநாட்டின் மீது படை
எடுத்து மூன்றாம் இராஜேந்திர சோழனைப் போரில் வென்று,
அவனைத் தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகச் செய்தான்.
பின்னர் கி.பி. 1264-இல் போசள மன்னன் வீரசோமேஸ்வரனைக்
கண்ணனூரில் (திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம்) சமர்புரிந்து
கொன்றான்.     அடுத்து,     சேந்தமங்கலம்     சென்று,
தொண்டைமண்டலத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்த காடவர்
கோமான் கோப்பெருஞ்சிங்கனை வென்று, அவனைத் தன்
மலோதிக்கத்தின் கீழ்க்கொணர்ந்தான்.     கொங்குநாட்டையும்
கைப்பற்றினான். இறுதியில்      தெலுங்குச்     சோழனாகிய
கண்டகோபாலனையும் போரிற்கொன்று அவனது தலைநகராகிய
நெல்லூரில் (ஆந்திர மாநிலம்) வீராபிடேகம் செய்து கொண்டான்.
எனவே சடையவர்மன் முதலாம் சுந்தரபாண்டியனின் பேரரசு
தெற்கே குமரிமுனையிலிருந்து வடக்கே கிருஷ்ணை என்ற பேராறு
வரையில் பரவியிருந்தது. இவனது காலத்தில்தான் முழுத்தமிழகமும்
பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டுத் திகழ்ந்தது. கி.பி. 1279-இல்
மூன்றாம் இராஜேந்திரன் இறந்த பிறகு சோழராட்சி முடிவு
பெற்றது.

4.4.4 முகமதியர் படை எடுப்பும் பாண்டியர் வீழ்ச்சியும்

     தில்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் தளபதியான
மாலிக்காபூர் என்பான் தென்னாட்டின் மீது படை எடுத்தான்.
அவனது படை கி.பி. 1311-இல் கர்நாடக மாநிலம் துவார சமுத்திரம்
எனும் இடத்தில் முகாமிட்டிருந்தது. அக்கால     கட்டத்தில்
மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த
வீரபாண்டியனுக்கும், அவனது      தாயத்தார்களாகிய பிற
பாண்டியர்களுக்கும்     இடையே     ஏற்பட்ட     பூசல்களைப்
பயன்படுத்திக் கொண்டு, மாலிக்காபூரின் படை தமிழகத்திற்குள்
நுழைந்து சூறையாடியது. பாண்டியர்களைக் கொன்று பெரும்
செல்வத்துடன் அவனது     படை தில்லி திரும்பியது.
இந்நிகழ்ச்சிகளை மாலிக்காபூருடன் பயணித்த அமீர்குஸ்ரு என்பார்
நாட்குறிப்புகளுடன் பதிவு செய்துள்ளார்.

     மீண்டும் 1318-இல் குஸ்ரூகான் என்பவன் தில்லியிலிருந்து
புறப்பட்டுத் தமிழகம் வந்து கொள்ளையடித்தான். இதனால்
பாண்டிநாடு உள்ளிட்ட தமிழகம் பெரும் செல்வங்களை இழந்தது.
பின்பு 1323-இல் உலூகான் எனும் தில்லி சுல்தானிய இளவரசன்
மதுரை நகரைப் பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றி, சுல்தானியர்
ஆட்சியை அங்கு ஏற்படுத்தினான். விஜயநகர அரசன்
வீரகம்பணனின் தென்னகப் படை எடுப்பு நிகழ்ந்த கி.பி. 1371
வரை, பாண்டிநாடு மதுரை சுல்தானியர் வசம் திகழ்ந்தது. மதுரை
சுல்தானியர் வருகையோடு பாண்டியப் பேரரசு என்ற உயர்நிலை
தாழ்வுற்றது.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

சங்ககாலத்திற்குப் பிற்பட்ட பாண்டியரின்
ஆட்சிக் காலத்தை எவ்வாறு பகுக்கலாம்?

(விடை)
2) பரம வைணவனாகத் திகழ்ந்த பாண்டியப்
பேரரசன் யார்? அவன் காலத்தில்
தோற்றுவிக்கப்பெற்ற குடைவரைக் கோயில்கள்
யாவை?
(விடை)
3) மணிவாசகர் காலத்தில் திகழ்ந்த பாண்டியப்
பேரரசன் எனப் பெரும்பாலான வரலாற்று
ஆசிரியர்களால் குறிப்பிடப்பெறும் பாண்டியன்
யார்? அவன் சோழநாட்டில் யாருடன் போரிட்டுத்
தோற்றான்?
(விடை)
4) பாண்டியப் பேரரசு விரிவு அடையக் காரணமாகத்
திகழ்ந்த இரண்டு பாண்டிய அரசர்கள் யாவர்?
அவர்களுடைய மெய்க்கீ்ர்த்திகள் ( கல்வெட்டுப்
பாடலின் தொடக்க வரி)     எவ்வாறு
தொடங்குகின்றன?
(விடை)
5) பாண்டியப் பேரரசு எதனால் வீழ்ச்சியுற்றது? (விடை)