4.0 பாட முன்னுரை

பல்லவர்களும் பாண்டியர்களும் குடைவரைகளையும்
கட்டட வகைக் கோயில்களையும் கட்டினர். குடைவரைக்
கோயில்கள் அமைக்கும் மரபு மறையும் காலத்தில் சோழர்கள்
கட்டுமானக் கோயில்களைக் கட்டத் தொடங்கினர். சோழர்களது
பெரும்பாலான கோயில்கள் காவிரியாற்றின் இருகரைகளிலுமே
அமைந்துள்ளன. இவர்களது கோயிற் கட்டடக் கலையும்
சிற்பக் கலையும் பல்லவ பாண்டியர் கலைகளில் இருந்து
வளர்ச்சி அடைந்தவை ஆகும். சோழர்கள் மிக உயர்ந்த
விமானங்களைக் கட்டினர்.     கோபுரங்களைச் சிறியதாக
அமைத்தனர். பரிவார தேவதைகளுக்கு முக்கியத்துவம்
அளித்தனர். பெரும்பான்மையும் கோயிலின் அனைத்துப்
பகுதிகளையும் கல்லினால் கட்டினர்.

சோழர்கள் கட்டடத்திற்கும்     சிற்பத்திற்கும் அதிக
முக்கியத்துவம் அளித்தனர். ஆனால் ஓவியக் கலைக்கு
முக்கியத்துவம் அளிக்கவில்லை. எனவே சோழர்கால ஓவியங்கள்
மிகக் குறைவாகவே நமக்குக் கிடைத்துள்ளன. இந்தப் பாடத்தில்
சோழர் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பற்றிக் காணலாம்.