5.5 தமிழிசைத் தொண்டு

    இறைவனை இசையால் பாடித் துதிப்பதையே தம்
வாழ்க்கையின் பயனாக வாழ்ந்து காட்டினார் கோபாலகிருஷ்ணர்.
இறுதி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். சிவ வழிபாட்டில்
சிறிதும் பிழைபடாது சீலமுடையவராக வாழ்ந்தார்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் மாசற்ற தொண்டினால் தமிழிசை
வளம்பெற்றது. நாட்டில் பக்தி நெறி தழைத்தது.

இவர் மறைந்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றும்
அவரது கீர்த்தனைகள் அழியாப் புகழோடு தமிழ் மக்களிடையே
பயிலப்படுகின்றன. மனதைச் சிவ உணர்வில் உருக வைக்கும்
அவரது கீர்த்தனை ஒன்றை இப்பொழுது கேட்போமா?

இராகம் : தேவகாந்தாரி
தாளம்: ஆதி

பல்லவி

எந்நேரமும் உந்தன் சந்திதியிலே நான்
இருக்க வேண்டும் ஐயா - பொன்னையா

அநுபல்லவி

தென்னஞ்சோலை தழைக்கும் தென் புலியூர்
பொன்னம்பலத்து அரசே என் அரசே
                 (எந்நேரமும்)

சரணம்

சிவ மருவும் தெருவும் திருக்கூட்டமும்
தேவருலகில் கிடையாத அதிசயமும்
பாலகிருஷ்ணன் பணியும் பாதம் பவமெனும்
பயங்கள் தீர்ந்து மலர்கள் தூவிக் கொண்டு
                 (எந்நேரமும்)

இராகம் : கருநாடக தேவகந்தாரி
தாளம்: ஆதி

பல்லவி

எப்படிப்பாடினரோ? எப்படிப்பாடினரோ?
அடியார் அப்படிப்பாட நான் ஆசைகொண்டேன் சிவமே

அநுபல்லவி

அப்பரும் சுந்தரரும் ஆளுடையப் பிள்ளையும்
அருள்மணி வாசகரும் பொருளணர்ந்து உன்னையே
                 (எப்படி)

சரணம்

குருமணி சங்கரரும் தாயுமாணவரும்
அருணகிரி நாதரும் அருள்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கன்னித்தமிழ்ச் சொல்லினால் இனிதுனை அனுதினமும்
                

5.5.1 புகழ் பெற்ற கீர்த்தனைகள்

    கோபாலகிருஷ்ண பாரதியாரின்     கீர்த்தனைகள்
எளிமையானவை. கருத்தாழம் மிக்கவை. இனிய இசை
நயமுடையவை. இயல்பாக இறை உணர்வைத் தூண்டுபவை.
இக்காரணங்களால் இவரது பல கீர்த்தனைகள் பிரபலமடைந்தன.

இசை அரங்கு, பரத நாட்டிய அரங்கு, பஜனை ஆகிய
நிகழ்ச்சிகளில் கோபாலகிருஷ்ண பாரதியார்     பாடல்கள்
இன்றளவும் இடம்பெறுகின்றன. சில பிரபலமான கீர்த்தனைகளின்
விவரங்களைக் காண்போமா?

பாடல் இராகம் தாளம்
அரகரசிவ சங்கர...... நாட்டை.... ரூபகம்
அறிவுடையோர்..... சக்ரவாகம்... ஜம்பை
ஆடியதாண்டவம்...... பிலஹரி.... சாபு
எப்போ வருவாரோ..... கமாஸ்.... ஆதி
கனகசபாபதிக்கு.... அடாணா.... ரூபகம்
சிவலோக...... நாதநாமக்கிரியா ரூபகம்
தில்லைச் சிதம்பரம்.... பூர்வகல்யாணி சாபு
நடனமாடினார்..... வசந்தா.... கண்டசாபு
சபாபதிக்கு..... ஆபோகி.... ரூபகம்