2.1 சிற்றிலக்கிய நாடக வகைகள்

சங்கம் மருவிய காலத்தைத் தொடர்ந்து கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டு முதற்கொண்டு சுமார் 430 ஆண்டுகள் (கி.பி. 850 -
1280) தமிழகத்தில் சோழர் ஆட்சி நடைபெற்று வந்தது.
இக்காலத்தில் நாடகம், சிற்பம் உள்ளிட்ட கலைகள்
வளம்பெற்றன. இராஜராஜேசுவர நாடகம் உள்ளிட்ட பல
நாடகங்கள் மேடையில் நடிக்கப்பட்டன. ஆனால் சோழர்
ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் அமைதியற்ற நிலை உருவாயிற்று.
ஆட்சி மாற்றங்களும், மோதல்களும் கலவரங்களை ஏற்படுத்தின.
நாட்டின் சிறு சிறு பகுதிகளுக்குள்ளேயே பிரிவினைகள்
தோன்றின. மக்கள் தொடர்பில் இடைவெளி நிலவியது.
ஒவ்வொரு பிரிவினரும் பகுதிவாரியாகத் தங்களுக்கான வாழ்க்கை
முறையினை முடிவு செய்யத் தொடங்கினர். தங்கள்
வட்டத்திற்குள் அமைதியினை ஏற்படுத்தும் முயற்சியையும்
மேற்கொண்டனர். அதற்கேற்பத்     தங்கள் எல்லைக்குள்
செயல்படத் தக்க சிறு சிறு கலை இலக்கிய வடிவங்களை
உருவாக்கத் தொடங்கினர். இவ்வகையில் உருப்பெற்றவையே
சிற்றிலக்கியங்களாக வளரலாயின. தமிழ் நாடகமும் இசையோடு
இயைந்து சிற்றிலக்கிய நாடக வடிவம் பெற்று உலா வரத்
தொடங்கியது.

இவ்வகையில் நொண்டி, கீர்த்தனை, பள்ளு, குறவஞ்சி
ஆகியன குறிப்பிடத்தக்க சிற்றிலக்கிய நாடக வகைகளாகக்
கொள்ளத் தக்கனவாகும். அவை குறித்துக் காண்போம்.