கீர்த்தனை, சிற்றிலக்கிய நாடக வகையைச் சார்ந்தது,
கீர்த்தனை என்பது புகழ்பாடல்; இசை மிகுந்து காணப்படுவது.
இசைக்கூறு என்பதன் அடிப்படையிலேயே இது கீர்த்தனை எனப்
பெயர் பெற்றது. இது கதைகூறல் (story telling) முறையில்
அமைந்துவருவது. தொடக்கத்தில் ஒரே ஒரு பாத்திரத்தால்
(performer) மட்டுமே நடத்தத் தக்கதாக இக்கலை
அமைந்திருந்தது. காலப் போக்கில் நாடகமாக மேடையில்
நடித்துக் காட்டுகையில் அது வடிவமாற்றம் கொள்ளத்
தொடங்கியது.
இராம நாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை,
பராங்குச நாடகம் போன்றவை குறிப்பிடத்தக்க கீர்த்தனை நாடக
வடிவங்களாகும்.
கி.பி பதினேழாம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த
சிற்றிலக்கிய நாடக வடிவம் கீர்த்தனையாகும். இசைப்பாடல்கள்
மூலம் இறைவன் புகழ்பாடும் வண்ணம் தோற்றுவிக்கப்பெற்ற
இந்நாடக வடிவம் பிற்காலத்தில் மக்கள் பிரச்சினைகளையும்
முன்வைக்கத் தொடங்கியது.
கீர்த்தனையின் வடிவம் குறித்துக் காண்போம். ‘கீர்த்தனை’
எனப்படும் இசைவடிவங்களைக் கொண்டு கீர்த்தனை இலக்கியம்
ஆக்கப்பட்டுள்ளது. ‘சிந்து’ என்ற
பாடல் வகையே
கீர்த்தனைகளாக வளர்ச்சி பெறலாயின.
கீர்த்தனை என்பது புகழ்பாடல் அல்லது போற்றிப்பாடல்.
எனினும் இது கீர்த்தனை நாடகங்களுக்கு முழுதும்
பொருந்துமாறில்லை. மிகவும் பொருட்செறிவுள்ள செய்திகள்
இவ்வடிவம் மூலம் படைத்தளிக்கப்படுகின்றன. கதை கூறல்
முறையிலும், பாடிச் செல்லும் நிலையிலும் திறம்பட்ட ஒருவரால்
நடத்திக்காட்டப்படும் பொழுது, நாடகக்கூறு மிக்கதாக
விளங்குவதைக் காணலாம். அதனாலேயே இத்தகு கீர்த்தனையை
‘நாடகக்கீர்த்தனை’ என்றும் அழைக்கின்றனர்.
கோயில்களில் நடைபெற்று வந்த புராண, இதிகாச
நாடகங்களே நாளடைவில் கீர்த்தனை நாடகங்களாயின.
தொடக்கத்தில் பலர் கூடும் அவையில் தனியொருவரால் நடத்தப்
பெற்று வந்தது. பின்னர் காலமாற்றத்திற்கேற்ப நாடக வடிவம்
பெற்றது.
மக்களுக்கு அறிமுகமான கதைகளே இவ்வகை நாடகங்களுக்கு
மூலக்கதைகளாகக் கொள்ளப்பட்டன. அறிமுகமான கதைகள்
மக்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தாதிருக்க வேண்டி, இசை
உள்ளிட்ட உத்திகள் மூலமே புதுப்பொலிவினை ஏற்படுத்தினர்.
சான்றாக, இராம நாடகக் கீர்த்தனையில் கொச்சகம், வெண்பா,
வசனம், கலித்துறை, விருத்தம், தோடயம், திரிபதை, தரு போன்ற
கூறுகளைக் கொண்டு இசையூட்டம் செய்யப்பட்டதைக்
கொள்ளலாம். (திரியதை, தரு என்பன இசைப்பாட்டு வகைகள்.)
மேலும் ஆசிரியர் கூற்றுகள் சுவையூட்டத்திற்காக இடம்
பெறும்படி செய்யப் பெற்றுள்ளன.
“இராம நாடகம் சொல்ல”
“இராம நாடகம் சொல்லுவன் நான்” - போன்றவை ஆசிரியக்
கூற்றுகளாக இராம நாடகக் கீர்த்தனையில் பயின்று வருகின்றன.
‘கீர்த்தனை’ நாடகங்களுக்கான கதைகள் ஒன்று போலவே
அமைவதில்லை. கீர்த்தனை என்கிற இசை வடிவத்தில்
அக்கதைகள் கொண்டு வரப்பெற்று, நடத்திக் காட்டப்பெறும்.
இராம நாடகக் கீர்த்தனையும், நந்தனார் சரித்திரக் கீர்த்தனையும்
இரு மாறுபட்ட கதைகளாகும். அவற்றின் கதைகளைச்
சுருக்கமாகக் காண்போம்.
இராம நாடகக் கீர்த்தனை
அருணாசலக்கவிராயர் இதன் ஆசிரியர். இவரால்
இயற்றப்பட்ட இந்நாடகத்தில் திருவரங்கத்தில் கோயில்
கொண்டுள்ள அரங்கநாதர் புகழ் போற்றப்படுகிறது.
இராமயணத்தைத் தழுவி இந்நாடகம் ஆக்கப்பட்டுள்ளது.
இராமநாடகக் கதை, இராமாயணக்கதையினின்று
சிறிதும்
மாறுபடாமல் அமைக்கப்பெற்றுள்ளது. மக்கள் மிகவும் மதிக்கின்ற,
அறிந்த கதையாக இராமாயணக்கதை இருப்பதால் அதனை
மாற்றம் செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்
கூடும் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகும்.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபால கிருட்டிண பாரதியாரால் எழுதப் பெற்றுள்ள
இக்கீர்த்தனை நாடகம் நந்தன் என்பவனின்
கதையைக் கூறுகிறது.
பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள திருநாளைப்போவார்
புராணக் கதையே, இக்கீர்த்தனை நாடகத்துக்கான
அடிப்படையாக
அமைந்துள்ளது.
தாழ்ந்த குடியில் பிறந்த நந்தன் உயர்சாதியினருக்கு அடிமை
வேலை பார்த்து வருகிறான். சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள்
கட்டுண்ட நந்தன், எந்தத் திருத்தலத்திற்கும் சென்று வழிபட
இயலாத நிலையில் இருக்கிறான். ஆனால் உயர் குலத்தவர்
வழிபடும் இடத்தில் சென்று கடவுளை வழிபட்டே தீருவது
என்பதில் நந்தன் உறுதியாக இருக்கிறான். சமுதாய அவலங்களை
எதிர்த்துப் போராடுகிறான்.
முதியவர் ஒருவர் நந்தனைத் திருத்த
முயற்சி மேற்கொள்கிறார். ஆனால் அவர் நந்தனின்
கோட்பாடுகளுக்கு ஆதரவாளராக மாறுகிறார்.
நந்தன், திருப்புன்கூர் சென்று அங்குள்ள சிவனை வழிபட
எண்ணுகிறான். அந்தச் சமுதாயத்தில்
நந்தன் வழிபடுவதே தவறு,
தீட்டு, கொடுமை என்ற நிலை இருந்ததால் வெளியில் நின்று
சிவனைப்
பார்த்துத் திரும்புகிறான். கோயிலுக்கான இறைப்
பணிகளை மிக்க ஈடுபாட்டோடு மேற்கொள்கிறான்.
தில்லை சென்று சிவனை வழிபடுவதே அவனது இறுதி
ஆசையாக இருக்கிறது. இதை, அவனது பண்ணையார்
எதிர்க்கிறார். இறுதியாக, பண்ணை வேலைகள் அனைத்தையும்
முடித்து விட்டுச்செல்ல அனுமதிக்கிறார். இறையருளால்
அனைத்துப் பணிகளையும் முடித்து விட்டுத் தூங்கச் செல்கிறான்.
மறுநாள் விழித்துப்பார்க்கும்போது முற்றிய விளை மணிகளுடன்
பூத்துக் குலுங்கிய வயற்காட்டைக் கண்டான். உயர்ந்த குடியைச்
சார்ந்த அவனது பண்ணையார் இவ்வாச்சரியத்தைப் பார்த்து,
நந்தனின் கால்களில் வீழ்ந்து பணிந்தார். தில்லை செல்ல
நந்தனுக்கு அனுமதி அளித்தார். எனினும் உயர்ந்த சாதி (குடி)
மக்கள் ஒன்று சேர்ந்து தரிசன முயற்சியை எதிர்த்தனர். எனினும்
கடவுள் அவர்களின் கனவில் தோன்றித் தீயால் நந்தனை
தூய்மைப்படுத்துமாறு கூறினார். அதன் படி நந்தன் சிவ தரிசனம்
கண்டான். இவ்வாறு கதை முடிவடைகிறது.
கருத்து நிலையில் கீர்த்தனை நாடகங்கள் எவற்றை
முக்கியப்படுத்துகின்றன எனப் பார்ப்போம்.
இசை கலந்த ஒரு கலையாகக் கீர்த்தனையை மக்களுக்கு
வழங்கும் போது இசையின் மேல் மக்களுக்கு ஒரு ஈடுபாடு
ஏற்படுவதுடன், சில கருத்துக்களும் அவர்களின் மனதில் இடம்
பெற வழி ஏற்பட்டது.
இராமநாடகக் கீர்த்தனையைப் பொருத்த வரையில் அது
காப்பியக் கதையையே எளிய வடிவில் மக்களுக்கு எடுத்துச்
சொல்லியிருக்கிறது. எனவே இக்கீர்த்தனையில் கிளைக்
கதைகளும், அறக்கருத்துக்களுமே முதலிடம் பெற்றிருக்கின்றன.
அவை காப்பியங்களைப் படித்துப் புரிந்து கொள்ள இயலாத
பாமர மக்களும் உயர்ந்த கருத்துக்களை எளிதில் புரிந்து
கொள்ளத் துணை புரிந்துள்ளன.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனையில் அதன் ஆசிரியர்
கோபாலகிருட்டிண பாரதி தெளிவான, திட்டமிடப் பெற்ற
கருத்துகளைச் சமுதாயத்திற்கு முன்மொழிந்திருக்கிறார். உயர்ந்த
சாதியினர் உணர்ந்து கொள்ளத்தக்க வகையில் அவர்களின்
அடக்கு முறைகளையும், சமூக
அவலங்களையும்
அம்பலப்படுத்தியிருக்கிறார்.
தமது விளைநிலத்தில் ஆச்சரியப்படத்தக்க விளைச்சலை ஒரே
நாளில் கண்டு மகிழ்ந்த மேல்குடி மனிதன் அதற்குக் காரணமான
தாழ்ந்த குடியைச் சேர்ந்த நந்தனின் காலில் விழுவதாகப்
படைக்கப்பட்டுள்ள காட்சி மிகப்பெரிய சமூகக் கருத்தினை
எடுத்துரைக்கிறது. தாழ்ந்த குடி மக்களின் அற்புத சக்தியின்
வெளிப்பாடாகவே இது சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
தாம் உயர்ந்த சாதியில் பிறந்த போதும், தாழ்ந்த குடி
மக்களுக்கான போராட்டக் கருத்துகளை நந்தனார் சரித்திரக்
கீர்த்தனை நாடகத்தில் கோபால
கிருட்டிண பாரதி
விதைத்திருக்கிறார். சமூகப் புரட்சியே ஆசிரியரின் கனவாக
இருந்துள்ளமை பல இடங்களில் வெளிப்படுகின்றது. ‘சமத்துவம்’
என்னும் உயரிய குறிக்கோளை உணர்த்திடும் வண்ணம்
கருத்துகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சமூகத்தில்
உள்ள மூடப் பழக்க வழக்கங்களையும் அவர் கடிந்து கூறத்
தவறவில்லை.
ஒரேயொரு திறமைவாய்ந்த இசைக்கலைஞரே முழு
நாடகத்தையும் நடத்திச் செல்லும் வண்ணம் கீர்த்தனை
நாடகங்கள் அமையுமென்பதை அறிவோம்.
உரிய
இசைக்கருவிகள் முழங்க, கதை வளர்ந்து செல்வதாக அமையும்.
கதையின் பாடுபொருளுக்கேற்பவும், உட்பொருளுக்கேற்பவும்
இராகம் அல்லது பண்கள் இசைக்கப் பெறும். இராகங்களில்
வேறுபாட்டை ஏற்படுத்தி நிகழ்வினைப் பொலிவுபெறச் செய்யும்
வழக்கமும் உண்டு. இதனால் கீர்த்தனையை இன்னிசைப் பொழிவு
அல்லது காலட்சேபம் என்றும் பெயரிட்டு அழைப்பதை நாம்
அறியலாம்.
அறிமுகமான கதைகளாக இருப்பதால் கீர்த்தனைகள்
செல்வாக்குப் பெறத் தொடங்கின. படைப்பாளனின் கலைத்திறம்
கீர்த்தனையை மக்கள் விரும்பி ஏற்கும் கலையாக மாற்றியது.
காலம் செல்லச் செல்ல, கீர்த்தனைகள் பலர் சேர்ந்து நடிக்கும்
நாடகமாக உருமாற்றம் பெற்று வருவதைக் காண்கிறோம்.
சான்றாக, கோபாலகிருட்டிண பாரதியின் நந்தனார் சரித்திரக்
கீர்த்தனை இன்று பல கலைஞர்கள் பங்கேற்று நடிக்கும்
வண்ணம் மாற்றம் செய்யப் பெற்றுள்ளது.
கீர்த்தனை வடிவிலான நாடகத்தின் பங்களிப்பு என்னென்ன
என்பதைக்
காண்போம்.
கடினமான காப்பியங்களைக்கூட இசை கலந்து எளிய
நடையில் மக்களிடம் கொண்டு செல்லக் கீர்த்தனை என்ற நாடக
வடிவம் பயன்பட்டிருக்கிறது. இராமநாடகக் கீர்த்தனை
இவ்வகையில் சிறப்பான செயலைச் செய்துள்ளது.
சமூக சீர்திருத்தத்திற்குத் தேவையான செயல்பாட்டையும்
கீர்த்தனை நாடகம்
செய்யத் தவறவில்லை. காலத்திற்கேற்ப
சமூகத் தேவைகளை உரியவகையில் கீர்த்தனை நாடக
வடிவம்
மூலம் ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை வலியுறுத்திக் கூறியுள்ள
சமூகச் சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்தும் வண்ணம்
அமைந்துள்ளனவல்லவா?
சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள்,
மூடப்பழக்கங்கள் போன்றவற்றால் ஏற்படும் தீய விளைவுகளை
வெளிப்படுத்தியும், அவற்றைத் தெரிந்து போராட
வேண்டுமென்ற உணர்வினை இடம்பெறச் செய்தும்
சமூகப்புரட்சிக்கு வித்திட்டுள்ள நிலை
குறிப்பிடத்தக்கதாகும்.
|