கூத்து,
ஆட்டம், நடனம், ஆடல், விளையாட்டு, வேடிக்கை
போன்ற சொற்கள் கலைகளைச் சுட்டும் வகையில் பயன்படுத்தப்
படுகின்றன. கூத்து என்ற சொல்லே கலைகளைக் குறிக்கப் பயன்பட்ட
மிகப் பழமையான சொல்லாகும். இன்னும் கூடக் கூத்து என்ற
பெயரிலேயே பல கலைகள் வழங்கப் படுகின்றன. சங்க காலத்தில்
நிகழ்ந்த கூத்துகளை வேத்தியல் கூத்து (அரசவையில் ஆடப்படுவது),
பொதுவியல் கூத்து (பொது இடங்களில் ஆடப்படுவது) என்றும்;
கூத்தில் ஈடுபட்டோரைக் கூத்தர், பாணர், பொருநர், விறலியர்
என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைக் காணலாம். இன்றும் கூடக்
கலைகளில் பங்கு பெறுவோரைக் கூத்தாடி என்று அழைக்கும் வழக்கம்
உள்ளது. சிலப்பதிகாரத்திலும் பல்வேறு வகையான ஆடல்களையும்
கூத்துகளையும் இளங்கோவடிகள் சொல்லிச் செல்கின்றார். இலக்கியங்கள்
குறிப்பிடும் பொதுவியல் கூத்தே நாட்டுப்புற நிகழ்த்து கலைகளாக
வளர்ச்சி பெற்று இன்று ஆடப்பட்டு வருகின்றன எனலாம்.
|
நாட்டுப்புற
மண்ணில் முகிழ்த்து, மண்ணின் மணத்தோடு நாட்டுப்புற
மக்களால், கலைஞர்களால் மரபு வழியாக நிகழ்த்திக் காட்டப்படும்
கலைகளே நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் எனப்படும். இந்தியா
கிராமங்களில் வாழ்கிறது என்று அண்ணல் காந்தியடிகள்
கூறியதைப்போல, நாட்டுப்புற நிகழ்த்து கலைகளும் கிராமப்
புறங்களில்தான் நிகழ்த்தப் பட்டும் பாதுகாக்கப் பட்டும் வாழ்ந்து
வருகின்றன.
|