கைவினைக்
கலைகளில் பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள்
எளிதில் கிடைப்பவையாகும். ஆற்றோரங்களில் விளையும் மூங்கில்,
கோரைப் புல், வைக்கோல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள களிமண்,
ஆற்று மணல், மலைப் பகுதிகளில் உள்ள மரம், இயற்கைச் சாயம்
என்று அனைத்துப் பொருட்களும் கிராமங்களை ஒட்டிய
பகுதிகளிலேயே கிடைக்கக் கூடியவையாகும். இத்தகைய எளிய
மூலப் பொருட்களே தம்முள் கலந்து கைவினைக் கலைஞர்களின்
கைத்திறத்தால் கண்களைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை
கொள்ளும் கலைப் பொருட்களாக மிளிர்கின்றன. குறிப்பிட்ட
கைவினைக் கலைத் தொழில்கள் குறிப்பிட்ட இனத்தாராலேயே
பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப் பட்டுவருகின்றன. இதனால்
கைவினைக் கலைகள் காலம் கடந்து நிலைத்து வாழும் தன்மையைப்
பெற்று விளங்குகின்றன. மேலும் இக்கலைகளைக் கற்றுக் கொள்வதற்
கென்று பயிற்சிக் கையேடுகளோ, நூல்களோ
இல்லை.
வாய்மொழியாகப் பயிற்றுவிக்கப் பட்டு, ஒன்றைப் போலச்
செய்வதின் வாயிலாகவே வளர்ந்து வருவதும் இக்கலைகளின்
தனிச் சிறப்பாகும்.
|