4.1 தளை இலக்கணம்

    தளை என்பதற்குப் பிணைத்தல் அல்லது கட்டுதல் என்பது
பொருள், சீரும் சீரும் சேர்ந்து ஒலிக்கிற பொழுது தோன்றுவது
தளை. முதற்சீரின் கடைசி அசையும் அடுத்த சீரின் முதல் அசையும்
கூடும் நிலையில்தான் இத் தளை அமைகிறது. முதல் சீர், யாப்பில்
‘நின்றசீர்’ என்னும் சொல்லால் குறிக்கப்படும். அதை அடுத்து
வரும்சீர், ‘வரும்சீர்’ என்று சுட்டப்பெறும். ஓர் அடியில் நான்கு
சீர் உள்ளன என்றால், இவற்றுக்கு இடையே மூன்று தளைகள்
தோன்றும். இதற்கு ஒரு சான்று :

சீர் 1
சீர் 2
சீர் 3
சீர் 4
மலர்மிசை
ஏகினான்
மாணடி
சேர்ந்தார்
ஒரு தளை
ஒரு தளை
ஒரு தளை

    மேற்காணும் முறையில் ஓர் அடியில் மூன்று தளைகள்
தோன்றும். முந்திய செய்யுள் உறுப்புகள் பற்றிய தெளிவான அறிவு
இருந்தால்தான் தளை காண்பது எளிதாகும். அசைக்கு உறுப்பாகும்
எழுத்துகள் பற்றியும், அசை பிரிக்க வேண்டிய முறை குறித்தும்,
சீர்களின் வாய்பாடு குறித்தும் மீளவும் ஒரு முறை நினைவுபடுத்திக்
கொள்ளுங்கள்.

    தளை பார்க்குமிடத்து நின்ற சீரில் இரண்டு கூறுகளை
நோக்க வேண்டும்.

(1)

எத்தனை அசை அதில் உள்ளது என்பது.
(2) கடைசியில் உள்ளது என்ன அசை என்பது,

    ‘மலர் மிசை’ என்னும் சீரில் இரண்டு அசைகள் உள்ளன
‘நிரை நிரை’ என்று

மலர் மிசை
நிரை நிரை

    நிரை நிரை என்பதற்கான வாய்பாடு கருவிளம் என்பது.
அடுத்து, வரும் சீரை (2ஆம்சீர்) நோக்குவோம். ‘ஏகினான்’ என்று
உள்ளது. அதில் ‘ஏ’என்பதை முதல் அசையாகப் பிரிக்க வேண்டும்.

    நின்றசீர் (சீர்1) ‘கருவிளம்’ எனும் வாய்பாடு உடையது, வரும்
சீரின் (சீர்2) முதல் அசை நேரசையாக உள்ளது. இங்குத்
தோன்றும் தளை இயற்சீர் வெண்டளை என்பதாகும். இவ்வாறுதான்
தளை காண வேண்டும்.

    நின்றசீர் என்ன வாய்பாட்டில் இருந்தால் வரும் சீரின்
முதலசையோடு கூடி என்ன தளை பிறக்கும் என இனிக் காண்போம்.

4.1.1 தளை வகைகள்

    தளைகள் ஏழு வகைப்படும். அவை எவ்வாறு பிறக்கின்றன
அல்லது தோன்றுகின்றன என்று இனிக் காண்போம்.

(1)

நேர் ஒன்றாசிரியத்தளை
(2) நிரை ஒன்றாசிரியத்தளை

(3)

இயற்சீர் வெண்டளை
(4) வெண்சீர் வெண்டளை

(5)

கலித்தளை
(6) ஒன்றிய வஞ்சித்தளை
(7) ஒன்றாத வஞ்சித்தளை

1) தேமா, புளிமா என்னும்
ஈரசைச் சீர்கள் இரண்டையும்
மாச்சீர் எனச் சுருக்கமாகக்
கூறலாம். நின்றசீர் மாச்சீராக
இருந்து வரும் சீரின் முதலசை
‘நேர்’ என இருந்தால் அங்குப்
பிறப்பது

நேரொன்றாசிரியத்தளை

மா முன் நேர்
வரின் தோன்றும்.

2) கருவிளம், கூவிளம் என்னும்
ஈரசைச் சீர்கள் இரண்டையும்
விளச்சீர் எனச் சுருக்கமாகக்
கூறலாம். நின்றசீர் விளச்சீராக
இருந்து, வரும் சீரின் முதலசை
‘நிரை’ என இருந்தால் அங்குப்
பிறப்பது

நிரையொன்றாசிரியத்
    தளை

விள முன் நிரை வரின்
    தோன்றும்.

3) மாச்சீர்     முன் ‘நிரை’
வரினும் விளச்சீர் முன் ‘நேர்’
வரினும் அங்குப் பிறப்பது

இயற்சீர் வெண்டளை
‘மா’ முன் நிரை வரின்,
‘விள’ முன் நேர் வரின்,
தோன்றும்.
4) நேரசையில்     முடியும்
மூவசைச் சீர் நான்கும் காய்
என     முடியும் வாய்பாடு
உடையன. காய்ச்சீர் நின்றசீராக
இருந்து வரும்சீரின் முதலசை
‘நேர்’ என இருந்தால் அங்குப்
பிறப்பது
வெண்சீர் வெண்டளை

காய் முன் நேர் வரின்
தோன்றும்.
5) நேர் அசையில் முடியும்
மூவசைச்சீர் நான்கும், காய்ச்சீர்
எனப்படும். காய்ச்சீர், நின்றசீராக
இருக்க வரும்சீரின் முதலசை
‘நிரை’ என இருப்பின் அங்குப்
பிறப்பது
கலித்தளை

காய், முன் நிரை
வரின் தோன்றும்
6) நிரையசையில் முடியும்
மூவசைச்சீர் நான்கும் கனிச்சீர்
எனப்படும். இவை நின்றசீராக
இருக்க, வரும்சீரின் முதலசை
நிரை என இருப்பின் அங்குப்
பிறப்பது

ஒன்றிய வஞ்சித்தளை

கனி முன் நிரை
வரின் தோன்றும்

7) கனிச்சீர் நின்றசீராக இருக்க
வரும்சீரின் முதலசை நேர் என
இருப்பின் அங்குப் பிறப்பது
ஒன்றாத வஞ்சித்தளை
கனி முன் நேர் வரின்
தோன்றும்

  • தளை பார்க்கும் பொழுது நினைவிற் கொள்ள வேண்டிய
    சில செய்திகள்.
  •     முதற்சீரை நோக்க 2 ஆம் சீர் வரும்சீர் ; 2 ஆம் சீரே
    மூன்றாம் சீரை நோக்க நின்றசீராகிவிடும். இவ்வாறு, அடுத்தடுத்த
    சீர்களை முன்சீரை நோக்க வரும்சீராகவும், பின்சீரை நோக்க
    நின்றசீராகவும் கருத வேண்டும்.

        எப்பொழுதும் நின்றசீரில் எத்தனை அசைகள் உள்ளன,
    ஈற்றசை யாது என்று காண வேண்டும். வரும்சீரைப் பொறுத்த
    மட்டில் முதல் அசை யாதுஎனப் பார்த்தால் போதும்.

    4.1.2 பாக்களுக்குரிய தளைகள்

        மேற்கண்ட ஏழு தளைகளுள் முதல் இரண்டு தளைகளும்
    ஆசிரியப்பாவிற்கு உரியன. அடுத்த இரண்டு தளைகளும்
    வெண்பாவிற்கு உரியன. ஐந்தாவது தளை கலிப்பாவிற்கு உரியது.
    இறுதி இரண்டு தளைகளும் வஞ்சிப்பாவிற்கு உரியன. இவை பற்றி
    விரிவாகக் காண்போம்.

  • பாவும் தளையும்

  • (1) ஆசிரியப்பா - நேர்ஒன்று ஆசிரியத்தளை
    நிரை ஒன்று ஆசிரியத்தளை
    (2) வெண்பா - இயற்சீர் வெண்டளை
    வெண்சீர் வெண்டளை
    (3) கலிப்பா - கலித்தளை
    (4) வஞ்சிப்பா - ஒன்றிய வஞ்சித்தளை
    ஒன்றாத வஞ்சித்தளை