4.4 தொடை இலக்கணம்

    எழுத்தோடு எழுத்து சேர்ந்து அசைகள் அமைகின்றன.
அசையோடு அசை சேர்ந்து சீர்கள் அமைகின்றன. சீரோடு சீர்
சேர்ந்து தளைகளும் அடிகளும் அமைகின்றன. இவ்வாறு அமையும்
பல அடிகளால் ஒரு பா உருவாகிறது. பா என்பதும், பாட்டு
என்பதும், செய்யுள் என்பதும் மிகுந்த பொருள் வேறுபாடு ஏதும்
இல்லாமல் இங்குப் பயன்படுத்தப் பெறுகிறது.

    தொடுத்தல் என்பதிலிருந்து தொடை என்னும் சொல்
பிறந்துள்ளது. ஓசை ஒழுங்கோடு தொடுக்கப்படுவதால் இதை நம்
முன்னோர் தொடை எனக் குறித்தனர். மாலை என்பதைக் குறிக்கத்
தமிழில் ‘தொடையல்’ என்றும் ஒரு சொல் உள்ளது என்பதும் இங்கு
நினைத்தற்குரியது.

    தொடை என்னும் செய்யுள் உறுப்பு பாடலில் உள்ள
அடிகள்தோறும் ஒரு குறிப்பிட்ட வகையிலான ஓசை இயைபு
(இயைபு = பொருத்தம்) வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி
அமைகிறது. இது பற்றி இனிக் காண்போம்.

4.4.1 தொடை வகைகள

    செய்யுள் உறுப்பாகிய தொடை என்பது எட்டு வகைப்படும்.
அவையாவன : மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண்,
இரட்டை, அந்தாதி, செந்தொடை ஆகியனவாகும். இவை எட்டையும்
முதல் தொடைகள் என்னும் பெயரால் சுட்டுவதுண்டு.

    இவை ஒரு பாடலில் அமைந்திருந்தால் வெவ்வேறு வகையான
ஓசை நலன் பொருந்தியதாக அமைந்து, பாடல் கேட்போருக்கு
இனிமை தரும். மேலும் பயிலும் பாவானது ஒருவர் சிந்தையைக்
கவர்ந்து எளிதில் மறவாதபடி அமையும். இனி இவற்றுக்கான
இலக்கணத்தைக் காண்போம்.

  • மோனைத்தொடை - பாடலின் ஒவ்வோர் அடியிலும் முதல்
             எழுத்து ஒன்றி (பொருந்தி) வருவது.

    மோனை - சான்று : உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
    உணர வேண்டு மடி
    உள்ளத்தில் காண்பாய் எனில் - கோயில்
    உள்ளேயும் காண்பா யடி

  • எதுகைத்தொடை -
  • பாடலில் இரண்டாவது எழுத்தெல்லாம்
    அடிகள் தோறும் ஒன்றி வருவது. முதல்
    எழுத்தும் குறிலாகவோ, நெடிலாகவோ
    தொடர்ந்து அமைய வேண்டும்.
        

    எதுகை - சான்று : வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப்
            பணிபூண்டு
    வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள்
            - பிள்ளைமொழி
    வெள்ளைக் கவிகண்டு வெள்ளையென்
            றெண்ணாமல்
    உள்ளத்தில் கொள்வாள் உவந்து

  • இயைபுத்தொடை - பாடலில் அடிகள் தோறும் கடைசி
             எழுத்துகள் ஒன்றி வருவது.

  • இயைபு - சான்று : வெய்யிற் கேற்ற நிழலுண்டு வீசும்
         தென்றல்
    காற்றுண்டு
    கையில் கம்பன் கவியுண்டு கலசம்
         நிறைய மதுவுண்டு
    தெய்வகீதம் பலஉண்டு தெரிந்து பாட
         நீயுண்டு.

  • முரண்தொடை - பாடலில் அடுத்தடுத்த அடிகளின் முதல்
             சீர்கள் முரண்பட்டு வருவது.

  • முரண் -சான்று :

    இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்
    நிலவுக் குவித் தன்ன வெண்மணல் ஒருசிறை

    இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
    பொன்னின் அன்ன நுண்தாது உறைக்கும்


  • அளபெடைத்தொடை - பாடல் அடிகளில் முதற்சீர்கள் எல்லாம்
             அளபெடுத்து வருவது.
  • அளபெடை -
    சான்று :
    ஆஅ வளிய அலவன்தன் பார்ப்பினோடு
    ஈஇ ரிரையுங்கொண் டீரளைப் பள்ளியுள்
    தூஉந் திரையலைப்பத் துஞ்சாது
         இறைவன்தோள்

    மேஎ வலைப்பட்ட நம்போல் நறு நுதால்

  • அந்தாதித்தொடை - ஓர் அடியின் இறுதிச்சீரோ, அசையோ,
             எழுத்தோ அடுத்த அடியின் முதலாக
             வருமாறு எழுதுவது. அந்தம் (முடிவு)
             ஆதியாக (அடுத்த அடியின் முதலாக)த்
             தொடுப்பது.
  • அந்தாதி -
    சான்று :
    உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி
    மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
    முக்குடை நீழற் பொற்புடை ஆசனம்
    ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்

  • இரட்டைத்தொடை - பாடலில் ஓர் அடி முழுதும் ஒரே
                சொல்லே வரத் தொடுப்பது இரட்டைத்
                தொடை.

  • இரட்டை - சான்று : ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
    விளக்கி்னிற் சீறெரி ஒக்குமே ஒக்கும்
    குளக்கொட்டிப் பூவின் நிறம்.

  • செந்தொடை - மோனை     முதலாகிய     தொடையும்,
            தொடை விகற்பமும் (விகற்பம் = வேறுபாடு)
            போல் அமையாமல் வேறுபடத் தொடுப்பது.

    செந்தொடை -
    சான்று
    :
    பூத்த வேங்கை வியன்சினை யேறி
    மயிலினம் அகவும் நாடன்
    நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே

    4.4.2 விகற்பத்துக்குரிய தொடைகள்

         மேற்கண்ட எட்டும் முதல் தொடைகள் எனப்படும். இவற்றை
    அடி மோனைத் தொடை, அடி எதுகைத் தொடை என்பது போலவும்
    குறிப்பிடுவர். இவற்றுள் முதலில் உள்ள ஐந்து தொடைகளான
    மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றுக்கு
    மட்டும் தொடை விகற்பங்கள் உண்டு. ஏனைய அந்தாதித் தொடை,
    இரட்டைத் தொடை, செந்தொடை ஆகிய மூன்றுக்கும் தொடை
    விகற்பம் கூறப் பெறவில்லை. எனவே முதலில் உள்ள ஐந்து முதல்
    தொடைகளுக்கு மட்டும் விகற்பங்கள் உண்டு என்பதை நினைவிற்
    கொள்க. தொடை விகற்பம் என்பது நான்கு சீர் உள்ள அடி
    ஒவ்வொன்றிலும் காணுதற்குரியது. தொடைவிகற்பம் பற்றிப் பின்னர்
    விரிவாகப் படிக்கலாம்.

  • பயில்முறைப் பயிற்சி - 2

    1.

    ஒரே எழுத்தில் தொடங்கும் சொற்கள் பத்தினை எழுதிப்
    பார்க்கவும்.


    2.

    எதுகை ஒத்துவருமாறு (க், ச், த், ட், ப், ற்
    ஆகியனவற்றுக்கு) ஆறு சொற்களை எழுதிப் பழகுக.
    முதல் எழுத்து எல்லாச் சொற்களுக்கும் குறிலாகவோ
    அல்லது நெடிலாகவோ இருக்குமாறு பார்த்துக் கொள்க.

    (எ-டு) சுக்கு, சிக்கு, திக்கு, முக்கு, மக்கு, விக்கு


    3.

    முரண் தொடை அமையுமாறு நான்கு நான்கு சொற்களைத்
    தொகுத்து எழுதிப் பழகுக.

    (எ-டு) ஒளி, இருள், விருப்பு, வெறுப்பு, மேடு, பள்ளம்


    4.
    இரட்டைத் தொடைக்கு இரண்டு சான்றுகள் தரப்பட்டுள்ளன.
    ஆமாம், ஆமாம், ஆமாம், ஆமாம் ; இல்லை, இல்லை,
    இல்லை, இல்லை இவை போல் சிலவற்றை நீங்களும்
    எழுதிப் பார்க்கலாம்.