5.7 உருவக அணியின் வகைகள்

    உருவகஅணி பதினைந்து வகைப்படும். அவை, தொகை, வகை,
தொகைவிரி, இயைபு, இயைபிலி, வியநிலை, சிறப்பு, விரூபகம்,
சமாதானம், உருவகம், ஏகாங்கம், அனேகாங்கம், முற்று, அவயவம்,
அவயவி ஆகியவற்றுடன் கூடிவரும் உருவக நிலைகள் ஆகும்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

5.7.1 தொகை உருவகம்

    உவமை, பொருள் ஆகியவற்றை ஒற்றுமைப்படுத்தும் ‘ஆகிய‘
‘ஆக‘ என்னும் தொடர்புச் சொற்கள் தொக்கு (மறைந்து) வருவது
தொகை உருவகம் ஆகும்.

    தொகை உருவகம் - அங்கை மலரும் அடித்தளிரும்

    அங்கை ஆகிய மலரும், (அங்கை - உள்ளங்கை) அடியாகிய
தளிரும் என வரவேண்டியது, ஆகிய என்னும் சொல் மறைந்து
வந்தது.

5.7.2 விரி உருவகம்

    தொடர்புச் சொற்கள் விரிந்து (வெளிப்பட) வருவது விரி
உருவகம்
எனவும் கூறப்படும்.

    விரி உருவகம் - அங்கை மலரா அடி தளிரா

    மலரா, தளிரா என ஆக என்னும் சொல் வெளிப்பட வந்தது.
(ஆக என்பது ‘ஆ‘ என வந்தது)

5.7.3 தொகை விரி உருவகம்

    ஒரு பாடலில் ஆகிய, ஆக என்னும் சொற்கள் தொக்கும்
விரிந்தும் வருவது தொகை விரி உருவகம் எனப்படும்.

தொகை விரி உருவகம்

வையம் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று

    (தகழி - அகல் ; வார் - நீண்ட ; சுடர்ஆழியான் - சக்கரம்
உடைய திருமால்; இடராழி - துன்பக்கடல்)

பொருள்:

உலகமே அகலாகவும் கடலே எண்ணெயாகவும்,
கதிரவனே விளக்காகவும் கொண்டு என் துன்பக்கடல்
வற்றட்டும் என்று என் சொல்மாலையைத் திருமால்
அடியில் சேர்ப்பித்தேன்.

    தகழியாக, நெய்யாக என ‘ஆக‘ எனும்சொல் விரிந்தும், இடர்
ஆகிய ஆழி என வரவேண்டியது இடராழி எனத் தொக்கும் வந்தது.
எனவே தொகை விரி உருவகம் ஆனது.

5.7.4 ஏகாங்க உருவகம்

    ஒரு பொருளின் ஏதேனும் ஓர் உறுப்பை உருவகம் செய்து,
பிறவற்றை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகாங்க உருவகம்
எனப்படும். இது ஏகதேச உருவகம் எனவும் கூறப்படும்.

(ஏகாங்க உருவகம் - ஏக அங்க உருவகம்)

(எ.கா)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

    இதில் பிறவியைக் கடலாக உருவகித்து, இறைவன்
திருவடியைத் தெப்பமாக உருவகிக்காமையால் இது ஏகாங்க
(ஏகதேச) உருவக
மாகும்.