6.5 மாறுபடு புகழ்நிலை அணியும் புகழாப் புகழ்ச்சி அணியும்

6.5.1 மாறுபடு புகழ்நிலை அணி

    தான் கருதிய பொருளை மறைத்து, அதனைப் பழிப்பதன்
பொருட்டு வேறொன்றைப் புகழ்வது, ‘மாறுபடு புகழ்நிலை அணி‘
எனப்படும்.

(எ.கா)
இரவுஅறியா யாவரையும் பின்செல்லா நல்ல
தருநிழலும் தண்ணீரும் புல்லும் - ஒருவர்
படைத்தனவும் கொள்ளாஇப் புள்ளிமான் பார்மேல்
துடைத்தனவே அன்றோ துயர்

    (இரவு - யாசித்தல்; தரு - மரம்; பார் - உலகம்)

பாடல்பொருள்: இப்புள்ளிமான் இரந்துவாழ்வது இல்லை; யாரையும்
வேண்டிப்பின் செல்வதில்லை; பிறர் ஈட்டாத
மரநிழல், தண்ணீர், புல் என்பவற்றையே கொள்ளும்.
ஆகவே இவ்வுலகில் இவை துன்பமற்றவை
அல்லவா!

    யாசித்தல், பிறர்பின் செல்லல், பிறர் உழைப்பில் வாழ்தல்
இல்லாதது என மானைப் புகழ்வதன் மூலம் பிறர்பின் சென்று
இரந்துவாழும், முயற்சியற்றோர் பழிக்கப் படுகின்றனர் என்பதை
உணரலாம். இவ்வாறு வருவதால் இது மாறுபடு புகழ்நிலைஅணி
ஆயிற்று.

6.5.2 புகழாப் புகழ்ச்சி அணி

    ஒன்றைப் பழிப்பது போன்ற முறையில், அதன் மேன்மை
தோன்றக் கூறுவது, புகழாப் புகழ்ச்சிஅணி ஆகும்.

(எ.கா)
பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி


              (தண்டி-84)

(எ.கா)
போர்வேலின் வென்றதூஉம் பல்புகழால்
            போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்தால் தாங்குவதூஉம்-நீர்நாடன்
தேரடிக்கூர் வெம்படையால் காப்பதூஉம்
            செங்கண்மால்
ஓரடிக்கீழ் வைத்த உலகு

    ( நீர்நாடன் - சோழன் ; தேரடி - தேர்ச்சக்கரம் போன்ற ;
செங்கண்மால் - திருமால்)

பாடல்பொருள்: சோழன் வலோல் வென்றும், புகழால் போர்த்தும்,
புயத்தால் தாங்கியும் உலகைக் காக்கின்றான்.
அவன் இவ்வளவு முயன்று தாங்கும் உலகு,
திருமால் தன் ஒரு பாதத்தில் அடக்கிய
உலகாகும்.     இது சோழனின் தன்மையைப்
பழிப்பதுபோல் உள்ளது. எனினும் திருமாலுக்கு
நிகராக உலகம் முழுவதும் காக்கிறான், என
உண்மையில்     சோழனைப்     புகழ்தலே
நோக்கமாகும். ஆதலின் இது புகழாப் புகழ்ச்சி
ஆயிற்று.