3.0 பாட முன்னுரை

திருவள்ளுவர் முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்தவர். முடியாட்சிக் கால
அரசியல் அமைப்பில் ஆட்சியின் தலைவன் அரசன். அவனுக்கு
அறிவுரை கூறும் ஆசானாகவும், அரசனின் எண்ணங்களைச்
செயல்படுத்தும் செயல் வீரனாகவும் திகழ்பவன் அமைச்சன். எனவே,
நாட்டுப்பற்றுடன், அரசனின்     நம்பிக்கைக்கு உரியவனாகவும்
மதிநுட்பம் வாய்ந்தவனாகவும் இருந்தவர்களையே அமைச்சராக
அரசன் தேர்ந்தெடுத்தான். ஓர் அரசனின் ஆட்சித் திறனுக்கும்
வெற்றிக்கும், அவனுக்குத்     துணையாக அமைந்திருக்கும்
அமைச்சனின் பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது. இவை பற்றிய
வள்ளுவரின் கருத்துகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.