3.3 அமைச்சர் - கடமைகள்

அமைச்சருக்கு உரிய தகுதிகளையும். ஆற்றலையும் குறிப்பிட்ட
வள்ளுவர், தகுதியும் ஆற்றலும் வாய்ந்த அமைச்சர்களுக்கு எனச்
சில கடமைகள் உள்ளன என்பதையும் குறிப்பிடுகிறார். தம்
கடமைகளை உணர்ந்து செயல்படும் அமைச்சனே, ஒரு நல்ல
ஆட்சி உருவாவதற்குக் காரணமாய் அமைவான் என்பது
வள்ளுவரின் நம்பிக்கை.


3.3.1 அறிந்து செயல்படல்

‘ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும்’ என்பது தமிழில் உள்ள
ஒரு பழமொழி. ஒருவன் எவ்வளவுதான் அறிவாளியாக
இருந்தாலும், ஊர்மக்களைப் பகைத்துக் கொண்டால், அவன்
முழுமையாக அழிந்து விடுவான் என்பது இதன் பொருள். இங்கு ஊர் என்று குறிப்பிடுவது, ஊரில் பிறருக்கு எடுத்துக்காட்டாய்
வாழும் நல்லவர்களையே குறிப்பிடுவர். ஒரு நிலத்தில் வாழும்
நல்லவர்களாலேயே, அந்நிலம் சிறப்படையும் என்கிறார்
ஒளவையார்.


    நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ
    அவலாகு ஒன்றோ, மிசையாகு ஒன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை, வாழிய நிலனே

(புறம் : 187)


(நாடாகு ஒன்றோ = நாடாக இருந்தால் என்ன,
காடாகு ஒன்றோ
= காடாக இருந்தால் என்ன,
அவலாகு ஒன்றோ
= பள்ளமானால் என்ன,
மிசையாகு ஒன்றோ
= மேடாக இருந்தால் என்ன,
எவ்வழி
= எந்த இடத்தில், நல்லை = நல்லது)

எனவே நல்லவர்களாகிய சான்றோர்களின் அறிவுரையின்படி
நடந்தால், மேம்பாடு அடையலாம். இதனாலேதான் வள்ளுவர்
அமைச்சருக்குக் கூறும் கடமைகளில் ஒன்றாக நல்லவர்களைச்
சார்ந்து வாழுதலைக் கூறுகிறார். அரசனுக்குத் துணையாக
அமையும் அமைச்சன், தான் கற்ற நூல் அறிவால், வினை
செய்யும் திறங்களைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறையை
அதாவது உலகிலுள்ள சான்றோர்கள் வழியை அறிந்து அதற்கு
ஏற்பச் செயல்படவேண்டும் என்று குறிப்பிடுகிறார். இதையே தன் கடமையாகவும் அமைச்சன் கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.


செயற்கை அறிந்தக் கடைத்தும், உலகத்து
இயற்கை அறிந்து, செயல்


(குறள்: 637)


(செயற்கை = நூல்அறிவு, கடைத்து = இடத்து,
இயற்கை
= உலகியல்)

தன் முயற்சியால், செயற்கையாக அமைந்திருக்கும் பலநூல்களைக்
கற்றுத் தன் அறிவைப் பெருக்கியிருந்தாலும், உலகத்தில்
இயல்பாகவே அமைந்திருக்கும் நல்லோர்களாகிய சான்றோர்களின் நெறிமுறைக்குப் பொருந்துமாறு செயல்படுவது அமைச்சனின்
கடமையாகும்.


3.3.2 அறிவுரை கூறல்

சிலநேரங்களில், நம்மைவிட வயதிலோ, பணியிலோ, சிறப்புகளிலோ
மேல்நிலையில் உள்ளவர்களிடம், நாம் நினைக்கின்ற சில
கருத்துகளைச் சொல்லுவதற்குத் தயங்குவோம். அவர்கள் செய்வது
அல்லது அவர்கள் நினைப்பது தவறான ஒன்று என்பது நமக்குத்
தெரியும். இருப்பினும், அவர்கள் தகுதி என்ன? நம் தகுதி என்ன,
இதைச் சொன்னால் நம்மைத் தவறாகக் கருதி விடுவார்களோ
என்று பயப்படுவோம்.     இந்தப்     பயமே, தயக்கமே
அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக அமையும்
என்கிறார் வள்ளுவர்.

ஆட்சியில் அமர்ந்திருக்கும் மன்னன் நல்லது எது, தீயது எது
என்பனவற்றை அறியாதவனாக இருக்கலாம். பிறர் கூறும்
அறிவுரைகளை ஏற்காத தன்மை உடையவனாக இருக்கலாம்.
இருந்தாலும், அரசனுக்குப் பக்கத்தில் துணையாக இருக்கும்
அமைச்சன் உறுதி பயக்கக்கூடிய அறிவுரையைத் தயங்காமல்
எடுத்துக் கூறவேண்டும். அது ஒரு நல்ல அமைச்சனுக்கு உரிய கடமைகளுள் ஒன்று என்பது வள்ளுவர் கருத்து.


அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்


(குறள்: 638)


(அறிகொன்று = அறிய வேண்டியதை, உறுதி = நலம் பயக்கும்,
உழை = பக்கம்)

தன் அறியாமையாலோ, உதாசீனப்போக்காலோ, மன்னன் ஆட்சி
தொடர்பாக அறிய வேண்டிய சிலவற்றை அறியாமல் இருக்கலாம்.
அவன் அறியாமையைச் சுட்டிக் காட்டினால் சினங்கொள்வானோ
என்று தயங்கக் கூடாது. தயங்கினால், மன்னன் தவறு செய்வதற்கு
வாய்ப்பு ஏற்படும். அது அவன் ஆட்சியை, அவன் நாட்டைப்
பாதிக்கும். எனவே ஒரு நல்ல கடமை உணர்வு கொண்ட
அமைச்சன், நன்மை பயக்கக்கூடிய நல்ல அறிவுரைகளைத்
துணிவுடன் அரசனுக்குக் கூறவேண்டும் என்கிறார் வள்ளுவர்.