3.4 அமைச்சருக்குத் தகாதவை

எவை, எவை அமைச்சருக்கு உரிய தகுதிகள், எவை, எவை
கடமைகள், எவை எவை ஆற்றல்கள் என்று வரையறை செய்த
வள்ளுவர் எவை எவை அமைச்சருக்கு உரியவைகளாக இருக்கக்
கூடாது என்பதனையும் வரையறை செய்கிறார்.

இதுவரையிலும் மன்னனது ஆட்சிக்கு - ஆட்சியின் வெற்றிக்கு
உறுதுணையாக அமையும் அமைச்சர்களின் இயல்புகளை வள்ளுவர்
குறிப்பிட்டார். அமைச்சு என்ற அதிகாரத்தின் இறுதி இரண்டு
பாடல்களிலும், அரசனின் அருகில் இருந்து அவனுக்குக் கேடு
விளைவிக்கும் அமைச்சர்களின் இயல்புகளைக் கூறுகின்றார்.


3.4.1 கேடு கருதுதல்

அரசாட்சியில், அரசனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அங்கமாக
இருப்பவன் அமைச்சன். அரசனின் நம்பிக்கைக்கு உரியவனாக
இருப்பவன் அமைச்சன். அரசின் இரகசியங்களை எல்லாம்
அறிந்தவனும் அவனே. அரசனின் இன்ப துன்பங்களில் பங்கு
கொள்பவனும் அமைச்சன். இத்தகைய பொறுப்பு வாய்ந்த
அமைச்சன் உடன் இருந்தே கெடுக்கும் சூழ்ச்சி உடையவனாக
இருந்தால் அந்த ஆட்சி எவ்வாறு சீர்குலையும் என்பதை
நன்கு உணர்ந்தவர் வள்ளுவர். எனவே, அமைச்சருக்கு இருக்க
வேண்டியவை இவை எனச் சுட்டிய வள்ளுவர், கூடாதவை
இவை என்பதையும் சுட்டுகின்றார். அவ்வாறு கூறும்போது,
உடனிருந்து தீயதை எண்ணுவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.


• குடிலனின் வஞ்சகம்

மன்னனுக்குத் துணையாக இருக்கும் அமைச்சன், வஞ்சகனாக
இருந்தால் ஓர் அரசனுக்கும், நாட்டிற்கும் தீங்கு ஏற்படும்
என்பதைப் பற்றி மனோன்மணியம் எனும் தமிழ் நாடகநூல் மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

பாண்டிய நாட்டு மன்னன் சீவக வழுதி. மனத்துக்கண் மாசு
இல்லாதவன். ஆனால் அவனது முதல் அமைச்சனாகிய குடிலன்
மனத்தூய்மை இல்லாத தீயவன். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று
கூறும் வஞ்சகன். மன்னனிடம் நல்லவன் போல் நடித்து அவனை
ஏமாற்றுகிறவன். ஆனால் மன்னன் அவனை முழுமையாக
நம்பினான்.

சீவக வழுதி, தன் மகள் மனோன்மணியைச் சேர மன்னன்
புருசோத்தமனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினான்.
அதற்குக் குடிலன் தன்மகன் பலதேவனையே தூது அனுப்ப,
மன்னனை வயப்படுத்தி அதற்குரிய ஏற்பாடு செய்கிறான். மன்னன்
மகள் மனோன்மணியைத் தன் மகன் பலதேவனுக்குத் திருமணம்
செய்துவைத்துப் பாண்டிய நாட்டைத் தானே ஆளவேண்டும் என்ற
ஆசை குடிலனுக்கு     உண்டு.     எனவே, மனத்திற்குள்
மனோன்மணிக்கும் புருசோத்தமனுக்கும் திருமணம் நடக்கக் கூடாது
என்பது குடிலனின் எண்ணம். திருமணத்தூது சென்ற தன்
மகனிடம் எப்படியாவது சேரனின் சினத்தைத் தூண்டி போருக்குத்
தூண்டுமாறு சூழ்ச்சி செய்தான். அதற்கு ஏற்ப தூது சென்ற
பலதேவனின் சதியால், சேரநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும்
திருமணம் நடப்பதற்குப் பதிலாகப் போர் நிகழ்ந்தது. போரில்
சீவகவழுதி தோல்வி அடைந்தான்.

எனவே, நன்மை செய்வதுபோல், உடனிருந்தே தீமை செய்யும்
இயல்பு கொண்டோரை அமைச்சனாக ஏற்றுக் கொள்ளக் கூடாது
என்று வள்ளுவர் எச்சரிக்கை செய்கிறார்.


பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்ஓர்
எழுபது கோடி உறும்


(குறள்: 639)


(பழுது = தீமை, தெவ் = பகைவர், உறும் = அமையும்)

நன்மை செய்கிறவன் போல் அருகில் இருந்துகொண்டு தீமை
செய்யும் அமைச்சன், அரசன் பக்கத்தில் இருப்பது, எழுபது கோடி
பகைவர்கள் சூழ்ந்து கொண்டதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.


பகைவன் கண்ணுக்குப் புலப்படுகின்றான். பகைவன் எனத் தன்னை
அடையாளம் காட்டுபவன் தன் எதிரே நிற்பவன். எனவே
அவனால் கேடு அல்லது அழிவு வரும் என்று எதிர்பார்த்துச்
செயல்படலாம். ஆனால் நம்பிக்கைக்கு உரியவனான தன்னோடு
இருக்கும் அமைச்சனால் ஏற்படும் தீமையைக் காண்பது அரிது.
கணிப்பதும் அரிது.

எனவே, கண்ணுக்குப்     புலப்படும் பகைவனிடம் இருந்து
தப்பினாலும் பக்கத்திலிருந்து, பழுது எண்ணும் அமைச்சனால்
வரும் கேட்டிலிருந்து தப்பமுடியாது. அதனால் இத்தகைய
இயல்பு கொண்டோரை அமைச்சனாகக் கொள்ளக் கூடாது
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.


3.4.2 ஆற்றல் இல்லாமை

அமைச்சனுக்கு உரிய எல்லாத் தகுதிகளும், கடமை உணர்வும்
இருந்தாலும் அதைச் செயல்படுத்தும் ஆற்றல் அமைச்சனுக்கு
இருக்க வேண்டும் என்று முன்பு வலியுறுத்தினார் வள்ளுவர்.
எனவே, அத்தகைய ஆற்றல் இல்லாதவன் அமைச்சனாக
இருப்பதினால் எந்தப் பயனும் இல்லை என்கிறார்.


முறைப்படச் சூழ்ந்தும், முடிவிலவே செய்வர்
திறம்பாடு இலாஅ தவர்


(குறள்: 640)


(முறைப்பட = ஒழுங்குபட, சூழ்ந்து = ஆய்ந்து,
முடிவிலவே
= முற்றுப் பெறாதவை, திறம்பாடு = ஆற்றல்)

தான் செய்ய வேண்டிய செயலை ஒழுங்குபட எண்ணித்
திட்டமிட்டிருந்தாலும், அதை முடிப்பதற்கு உரிய ஆற்றல்
இல்லாதவர் அதை வெற்றி பெறுமாறு செய்ய மாட்டார். மாறாகத்
தோல்வி அடையுமாறே செய்வார். அத்தகையோர் அமைச்சராக
இருப்பதால் நன்மைக்குப் பதிலாகத் தீமையே விளையும் என்கிறார் வள்ளுவர்.