|
மணல்பாங்கான
பகுதியில் உள்ள ஊற்றில் அல்லது கிணற்றில்
எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். அதைத் தோண்டத் தோண்ட
மேலும் தண்ணீர் வந்து கொண்டே
இருக்கும். தண்ணீர்
ஊறிக்கொண்டு இருக்கும் அதன் இயல்பை யாராவது
திருட
முடியுமா? அழிக்க முடியுமா? முடியாது.
ஊறும் தன்மை
இயற்கையானது. அதை யாரும் அழிக்க முடியாது. கல்வியின்
தன்மையும் அப்படிப்பட்டதே. எனவே தோண்டத் தோண்ட ஊறும்
ஊற்றுக்கு ஒப்பாகக் கல்வியைக் கூறுகிறார் வள்ளுவர். ஒருவன்
கற்ற கல்வி அவனுக்கு எப்பொழுதும் பயன்பட்டுக் கொண்டே
இருக்கும். ஒருவன், கல்வியால் பெற்ற அறிவு அழிக்க முடியாத
செல்வம் என்கிறார் வள்ளுவர்.
திருவள்ளுவர்
கல்வியால் பெற்ற அறிவை யாராவது அழிக்க
முடிந்ததா? அல்லது திருட முடிந்ததா? அப்படி அழித்திருந்தால்,
இன்று நமக்குத் திருக்குறள் கிடைத்திருக்குமா?
ஒரு
கல்வியாளனது (Educationist) பணத்தை
அல்லது
பொருட்களை வீடு புகுந்து திருடலாம். அவன் எழுதி வெளியிட்ட
நூல்களைக் கூட எரித்து அழிக்கலாம். ஆனால் அவன், தான் கற்ற
கல்வியால் பதித்து வைத்திருக்கும் சிந்தனைகளை யாராலாவது
திருட முடியுமா? அழிக்க முடியுமா? முடியாது. இல்லையா?
வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எல்லாம் மீண்டும் அவர் தனது சிந்தனைகளை
நூலாக வெளியிடலாம். அவர் உயிரோடு இருக்கும்
வரையில் மட்டுமல்ல, அவர் இறந்த பின்னும் கல்வியால் அவர்
பெற்ற அறிவு, அவரது சிந்தனைகள் அழியாது வாழும்.
கிரேக்க
அறிஞன் சாக்ரட்டசின் சிந்தனைகள்
இன்றும்
வாழ்கின்றன. அவன் இறந்து எத்தனையோ நூற்றாண்டுகள்
ஆகிவிட்டன. அவனது சிந்தனைகளை யாராலும்
அழிக்க
முடியவில்லை. இதையே இன்னொரு குறளில், ஏனைய செல்வங்கள்
எல்லாம் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும், அழியும்;
ஆனால்
கல்வியாகிய செல்வம் நம்மை
விட்டுப் பிரியாது.
இன்னொருவருக்குக் கொடுத்தாலும் குறையாது, அழியாது என்று
கூறுகிறார் வள்ளுவர்.
|