|
1.3 சிறப்பு - தொல்காப்பியரின் புறத்திணை
தொல்காப்பியர், அன்பினால் நிகழும் அகத்திணை
ஒழுகலாற்றை ஏழு திணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின்
வழியதாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும்
செயல்முறைகளையும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை,
காஞ்சி, பாடாண் என்னும் ஏழு திணைகளாகப் பகுத்து இலக்கணம்
செய்தார். இதனை உரையாசிரியர்கள் “அகங்கை இரண்டென்றால் புறங்கையும் இரண்டே என்றாற் போல, அகத்திணை ஏழனுக்குப் புறத்திணை ஏழென்றலே பொருத்தமுடையது” என்று
தருக்க முறையால் நிறுவினார்கள். (அகங்கை = உள்ளங்கை)
1.3.1 பன்னிரு படலம்
ஆசிரியர் அகத்தியனாரின் மாணாக்கர்கள் தொல்
காப்பியனார் உள்ளிட்ட பன்னிருவர் இருந்தார்கள். அவர்கள்
ஆளுக்கொரு படலமாகப் புறப்பொருள் திணைகள், அவற்றின்
துறைகள் பற்றிய இலக்கணங்களை இயற்றினார்கள். இயற்றிய
அவற்றைத் தொகுத்தார்கள். தொகுத்து, பன்னிரு படலம்
என்ற
பெயரை அந்த நூலுக்குச் சூட்டினார்கள். இந்த இலக்கண நூல்
நமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும், சில நூற்பாக்கள் மட்டும்
காணக்கிடக்கின்றன. இவற்றை, உரையாசிரியப் பெருமக்களின்
நன்கொடைகள் எனலாம்.
1.3.2 புறப்பொருள் வெண்பா மாலை - வழிநூல்
பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பா மாலைக்கு
முதனூல் எனப்படுகின்றது. இதனைப் புறப்பொருள் வெண்பா
மாலையின் சிறப்புப் பாயிரம் அறிவிக்கின்றது.
வெண்பா மாலை என்பது ஆசிரியர் ஐயனாரிதனார் இட்ட
பெயர். வெண்பாமாலை என்னும் பொதுமையினின்றும்
பிரித்தறியப் புறப்பொருள் என்பது முன்னர் இணைக்கப் பெற்றது.
இவ்வாசிரியர்
இந்நூலுக்குப் பெயரிட்ட முறையைச்
சிந்தித்துப் பார்த்தால் பெயர்க்காரணமும் புலனாகும். பொருள்
இலக்கணத்தின் ஒருகூறாகிய புறப்பொருள் பற்றிப் பேசுவதால்
புறப்பொருள் ; பாவகைகளுள் ஒன்றாகிய வெண்பாவால் இயற்றப்
பெற்றது ஆதலால், புறப்பொருள் என்பதனைச் சார்ந்து வெண்பா
என்ற சொல் வைக்கப்பட்டுள்ளது. மாலை என்பதன் பொருள்
வரிசை. பூக்களைக் கொண்டு தொடர்ச்சி அறாமல் ஓர்
ஒழுங்கு முறையில் வரிசையாகத் தொடுப்பதால் உருக்கொள்வது
பூமாலை அல்லவா? அது போல, வெண்பா யாப்பு என்ற பூவைக்
கொண்டு போர் பற்றிய ஒழுகலாறுகளைத் தொடர்ச்சி அறாத
வண்ணம் ஓர் ஒழுங்குறத் தொடுக்கப்பட்டமை கருதி மாலை என்ற
சொல் புறப்பொருள் வெண்பா என்பதன்பின் வைக்கப்பட்டுள்ளது.
எனவே, புறப்பொருள் வெண்பா மாலை எனப் பெயர் பெற்றதன்
காரணம், ‘புறப்பொருளைப் பற்றி வெண்பாவினால் ஓர்
ஒழுங்கமையத் தொடர்ச்சி இற்றுப் போகாத வகையில்,
பூமாலையைப் போல் தொடுக்கப்பட்ட பாமாலை’ என்பதாகும்.
தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் புறப்பொருள்
வெண்பாமாலையை
வழிநூல் என்று குறிப்பிடுகிறார். பன்னிரு
படலம் கிடைக்காததனால் புறப்பொருள் வெண்பா மாலை முதல்
நூல் போலவே கருதப்படுகிறது. இந்நூற் செய்யுட்களை ஆளாத
உரையாசிரியப் பெருமக்கள் ஒருவரும் இலர் என்று உறுதியாகக்
கூறலாம். இலக்கணக் கொத்து என்னும் நூலின் ஆசிரியர் சாமிநாத
தேசிகர், நன்னூலாரையும் நன்னூலையும்,
முன்னோர்
ஒழியப் பின்னோர் பலரினுள்
நன்னூலார் தமக்கு எந்நூ லாரும்
இணையோ என்னும் துணிவே மன்னுக |
என்ற
வகையில் ஏத்துவார். இவ்வகையில் புறப்பொருள் வெண்பா மாலையையும் அதன் ஆசிரியரையும்
போற்றலாம். ஏனெனில், அகப்பொருளில், நாற்கவிராச நம்பியின் அகப்பொருள்
விளக்கம்
என்ற நூலுக்குப் பின்னரும் மாறனகப் பொருள், இலக்கண
விளக்கம், களவியற் காரிகை போன்றன தோன்ற, புறப்பொருள்
வெண்பா மாலைக்குப் பின் புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும்
தனி இலக்கண நூல்கள் எவையும் தோன்றவில்லை என்பது ஒரு
காரணம்; ஐந்திலக்கணம் கூறவந்த பின்னாளைய நூல்களும்
இத்தகைய விரிவையும் சிறப்பையும் கொண்டிருக்கவில்லை
என்பது மற்றொரு காரணம். இவற்றால், இதனது சிறப்புப்
புலப்படுவதை அறியலாம்.
புகழ் பொருந்திய இப் புறப்பொருள் வெண்பா மாலையைத் தொடுத்தவர் - இயற்றியவர்
- சேரவேந்தர் பரம்பரையில்
தோன்றிய ஐயனாரிதனார் என்னும் இயற்பெயரினர் ஆவார். ஆர் - சிறப்புப்
பெயர் விகுதி; புலமை நலம் கருதி
வழங்கப்பட்டுள்ளது. இவர், சேரர் மரபினர் என்பதை,
ஓங்கிய
சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐயனா ரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாஅலின்று விளங்க
வெண்பா மாலை எனப் பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன்
|
என
வரும் சிறப்புப் பாயிரப் பகுதி தெரிவிக்கின்றது.
ஐயனாரிதனார்
சைவ சமயத்தைச்
சார்ந்தவர் ஆவார்.
புறப்பொருள் வெண்பாமாலைக்கு இவர் எழுதியுள்ள கடவுள்
வாழ்த்துப் பாடல்கள்
இரண்டு. இவற்றுள் ஒன்று விநாயகப்
பெருமானைப் பற்றியது; மற்றொன்று சிவபெருமானைப் பற்றியது.
எனவே இவரது சமயம் சைவ சமயம் என்பது புலனாகும்.
ஐயனாரிதனார்
வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கும்
கி.பி.12ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகலாம்.
திரு.கா.சு.பிள்ளையவர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டு என்கின்றார்.
நூற்றாண்டு வரிசையில் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர்
மு.அருணாசலம் அவர்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
என்கின்றார்கள். கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினரான இளம்பூரணர் புறப்பொருள்
வெண்பாமாலைச் செய்யுள்களைத்
தமது உரையிடை ஆளுதலான், இளம்பூரணர்க்கு முன்னவர் இவர் என்பது வெளிப்படை.
1.3.3 போரும் உலக இயற்கையும்
எல்லாக் காலங்களிலும் உலகின் எங்கேயோ ஒரு மூலையில்
போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போரில்லாத உலகம்
இல்லை. போர்ப் பண்பு உயிரிகளின் குணமாக உள்ளது.
போராட்டம் என்பது உயிரிகளின் இயற்கையான ஒரு பகுதி.
‘பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவது அன்று
தொன்றியல் வாழ்க்கை’ என்றாற்போலவே போர் புரிவதையும்
உலகத்தின் இயற்கையாகவே நம்முடைய சங்கப் புலவர்களும்
கருதியுள்ளனர். இதனை, இடைக்குன்றூர்கிழாரின் புறநானூற்று
அடிகள் மொழிகின்றன/ மெய்ப்பிக்கின்றன.
ஒருவனை
ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று;இவ் வுலகத்து இயற்கை (76)
|
போர்
உணர்வை- வீரரின் மறப்பண்பைச் சங்கப் புலவர்கள்
பலரும் பாராட்டியுள்ளமைக்குச் சான்றுகள் தொகைநூல்களுள்
பலவாகக் காணப்படுகின்றன. ஏன்? இசைப்
பாணர்கள்
போர்க்களத்திற்கே சென்று பாராட்டிப் பாடியிருப்பதும்
நாம்
அறிவது தானே!
போர், சமுதாயத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டுள்ளது.
கருதவில்லையென்றால், அகவாழ்க்கையுள் கற்புக்காலப்
பிரிவுகளுள் பகைவயின் பிரிவு, துணைவயின் பிரிவு ஆகியன
இடம் பெற்றிருக்குமோ?
மழையின்மை, பெருமழை, கடல் சீற்றம் போலும்
இயற்கை
நிகழ்வுகளால் மன்னனின் கருவூலம் காலியாகும் போது
மன்னனுக்குக் கைகொடுப்பது ‘தெறுபொருள்’ (திறைப் பொருள்)
ஒன்றே. அறம் கூற வந்த வள்ளுவரே மன்னர்க்குத் தெறுபொருள்
வேண்டும் என்பதன் வாயிலாகப் போருக்குப் பச்சைக்
கொடி
அசைத்து விடுகின்றார்.
உறுபொருளும்
உல்கு பொருளும் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் - (756) |
தெறுபொருள் பொன்னாசையைக்
குறிப்பது. ஏனைய
மண்ணாசை பெண்ணாசைகள் கூடப் போர்க்குரிய காரணங்களாகி
விடுகின்றன. பெரும்பான்மையும் இந்த மூன்று காரணங்களாலேயே
போர் நடந்திருப்பதைத் தமிழிலக்கியங்கள் குறிக்கின்றன.
- போர்க்கான சிறப்புக் காரணங்கள்
தமிழகத்துப் போர்களுக்குரிய பொதுக் காரணங்களாக,
தமிழ்நூல்களின் துணைகொண்டு கீழ்க்காணும் வகையில்
பட்டியலிடுகிறார்
முனைவர் ந.சுப்பிரமணியன் அவர்கள்.
(1) போர் மாந்தனுடைய இயற்கைச் செயல்.
(2)
அரச குலப் பகைமைகள்
(3)
வெற்றியையும் நாடு பிடித்தலையும்
பெரிதும் விரும்புதல்
(4) பிறரிடத்து
அதிகாரம், பெருமை, செல்வம், புகழ்
என்பவை இருத்தலைப்
பொறுக்கமுடியாத மனநிலை.
(5) மறக்குலத்தால்
உந்தப்பெற்ற மறவுணர்ச்சி.
(6) போர்க்களத்தில்
இறந்துபட்டோர் துறக்கம் அடைவர்
என்ற நம்பிக்கை.
(7) மகட்கொடை
(பெண் கொடுக்க) மறுத்தலால் ஏற்படும் மனத்தாங்கல்.
(8)
படையும் போர் மரபுகளும்
மன்னனுடைய புகழை
மிகுவிக்கும் என்னும் எண்ணம்.
(9)
நடுகல்லில் நிற்றல் வேண்டும் என்னும் அவா. (நடுகல் =
போரில் இறந்தவரின் நினைவாக நடப்படும் கல். அதில்
அவர் பெயரும் பெருமையும் பொறிக்கப்பட்டிருக்கும்.)
(10)
கடிமரம் (காவல் மரம்)
புனிதமானது என்ற எண்ணம்
(11) எல்லைகள்
நிர்ணயிக்கப்படாத சிறுநாடுகள் இருந்தமை;
சிற்றரசர்கள் முடியுடைய வேந்தர்களுக்குக்
கீழ்ப்படிந்தவர்கள் என்ற மனப்பான்மை. திறை
செலுத்தும்படி வற்புறுத்தல், நிர்ணயிக்கப்படாத
திறைப்பொருள் அளவு முதலியன.
(12)
ஆதிக்க மனப்பான்மை முடிமன்னர்களிடம் இருந்தமை.
(13)
போர், போரை விளைவித்தல்
திடுதிப்பென்று
தாக்குவதற்கு இன்றுபோல் அன்று குண்டு
பொழியும் பீரங்கிகள் இல்லை ; அணுகுண்டுகள் இல்லை ;
ஏவுகணைகளும் இல்லை. அவர்களிடம் முன்னர்க் கூறியதுபோல
அறத்திற்கும் ஏனை மறத்திற்கும் துணையாக நிற்கும் அன்புதான்
இருந்தது. அவ்வன்பு அறவழியில் போரியற்ற அவர்களைச்
செலுத்தியது. அறவழியிலேயே போரிட்டனர். பொதுமக்கட்கு ஏதம்
வரலாகாது என்பது அவர்களின் கொள்கை. ஆதலால், தங்கள்
இகலை வெளிப்படுத்த ஆநிரையைக் கவர்ந்தனர். முற்றுகைப்
போரில் காவல் மரங்களை ெவட்டினர்; சிலசமயம், பகை
மன்னனின் மகளை மணத்தில் பெற வற்புறுத்தினர் அவ்வளவே.
‘இன்ன
நாளில் இன்ன போர்க்களத்தில் அரசர் இருவரும்
போர் புரிய இருக்கின்றோம். இன்ன
இன்னவர்கள்
போர்க்களத்தினின்றும் விலகிச் சில காத தூரம் சென்று இருங்கள்’
என்று சொல்லிக் கொட்டும் முரசொலியைக் கேட்டு மக்கள்
விலகுவர்; சில காதம் ஏகுவர். ஆநிரைகளால் ஏகல் இயலுமா?
அவை நாட்டிற்காகப் பால் சுரப்பன; மன்னனது அரண்மனைக்கும்
அவனுடைய பரிசனங்களின் (ஏவல் செய்வோர்) மனைக்கும் வளம்
பயப்பன ; திருக்கோயில் பூசனைக்கான ஐந்து பொருள்களை
நல்குவன; தொழத்தக்கனவாகக் கருதப்படுவன ; செல்வமென
(மாடென)க் கருதப்படுவன ; யாவற்றுக்கும் மலோகப் ‘பொதுத்தாய்’
எனக் கருதப்பட்டு வருவன. ஆம். பால்நினைந்து ஊட்டுகின்ற
ஈன்ற தாய், நமக்குச் சிறப்புத் தாய்; உலகக் குழந்தைகள்
அனைத்துக்கும் தமது பாலைச் சுரத்தலால் ஆன் பொதுத்தாய்
தானே. ஆன் இனம் பால் சுரக்க ஆன்ஏறு வேண்டுமல்லவா?
ஆவினத்தின் பயன்பாட்டைக் கருதியதால்தான் ஆநிரை
கவர்தல் மேற்கொள்ளப்பட்டது என்று எண்ணுவதில் தவறில்லை.
கொள்ளப்பட்டமை, அவற்றைத் துன்புறுத்தவோ, இந்நாள் போல
வெட்டிச் சமைக்கவோ அல்ல. கவர்ந்த
வீரர் அவற்றைக்
காத்தனர் ; வரும்வழியில் துன்புறுத்தாது செலுத்தினர். இதனைத்
தொல்காப்பியரின் ‘நோயின்றுய்த்தல்’ என்னும் வெட்சித்
துறையும், வெண்பா மாலையின் ‘சுரத்து உய்த்தல்’ என்னும்
வெட்சித்துறையும் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் ‘நிரை
கவர்தல்’ என்பது பழங்காலத்தில்
ஒரு பயனுடைய
இராணுவ
முன்னிகழ்ச்சி எனலாம்.
போர்
‘மறம்’ என்றாலும் அதனை நிகழ்த்துவதில் அறம்
மேற்கொள்ளப்பட்டது. போர் அறத்தை,
ஆவும்
ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் மக்கட்
பெறாதோ ரும்எம் அம்புகடி விடுதும்
நும்அரண் சேர்மின்
|
என்ற
எச்சரிக்கை மொழிகளில் காண்கின்றோம். இவ்வெச்சரிக்கை
ஆவொழிந்த பார்ப்பனர் - பெண்டிர் - பிணியுடையார் - மக்கட்
பெறாதார் ஆகியோருக்குப் பொருந்தும். ஆவுக்குப் பொருந்துமா?
பொருந்தாது. அவற்றை உடையவனுக்கு இட்ட எச்சரிக்கையாகவே
கொள்ளல் வேண்டும்.
இப்பாதுகாப்பு, போரின் முன்நிகழ்வு.
இவ்வாறே, போர்க்களத்தின்கண் மேற்கொள்ள வேண்டிய
அறநெறியும் உண்டு.
இவ்வற நெறியான் காக்கப்பட வேண்டியவர்களைச் சிலம்பு
அறிவிக்கின்றது.
சடையினர்,
உடையினர், சாம்பல் பூச்சினர்,
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்,
பாடு பாணியர், பல்இயத் தோளினர்,
ஆடு கூத்தர் ஆகி எங்கணும்
ஏந்துவாள் ஒழியத் தாந்துறை போகி
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர
- (சிலம்பு-26 ; 225-230) |
என்ற
சிலம்பின் அடிகளும், மேலும்,
பார்ப்பார்
அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி
- (மதுரைக்காண்டம், வஞ்சினமாலை, அடி, 52-54) |
என்னும்
இவரைத் தவிர்ந்த தீயவர்கள் மேல் தீ செல்லட்டும்
என்ற
கண்ணகியாரின் ஆணையும் காட்டும்.
திணை
என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அவற்றுள்
ஒன்று ஒழுக்கம், ஒழுகலாறு என்பது. ஆற்றொழுக்கு எப்போதும்
ஒரே சீராக இருப்பதுபோல, வாழ்வில் அமைய வேண்டிய
நல்லவற்றை ஒழுகலாறு என்ற பெயரால் குறிப்பிட்டனர். பரந்து
ஓடும் ஆற்றில் எவ்விடத்திலும் நீரை அடையலாம். எனினும், சில
இடங்களைப் படைத்துக் கொண்டு அவற்றைத் துறையெனக் கூறி,
அவ் விடத்தில் நீரை முகப்பதும், படிந்து நீராடுவதும் காண்
கின்றோம். அவை படித்துறை எனப் பெறும்.
இவ்வாறே
புறத்திணை ஒழுக்கமெனும் ஆற்றுக்கு, பிரிவு-கூறு-பகுதி என்ற பொருள்களத் தருவதாய துறை யென்னும் படிநிலைகளை (Steps)
அமைத்துக் கொண்டனர். இன்ன நிகழ்வின் பின்னர் இன்னது
நிகழும் என்ற வளர்ச்சிப் படிநிலைகளே துறை
எனலாம்.
|