2.0 பாட முன்னுரை

    புறத்திணையைப் பற்றிய விளக்கங்களை முதற்பாடத்தில்
பார்த்தோம். போர், புறவாழ்வின் ஒரு பகுதியாக அமைந்தது.
போரில் ஈடுபடுவோர் மன்னர்களாக இருந்தாலும் படைவீரர்
பொதுமக்களே. எனவே படை வீரரும் பங்கு கொள்ளும் போர்
நிகழ்வுகளைப் பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது
என்பதை அறிந்து கொண்டோம். அறவழியில் போரை நிகழ்த்த
விரும்பிய அரசன், பகை அரசனுக்குச் செய்தி தெரிவிப்பது போல,
அப்பகையரசன்     நாட்டில்     உள்ள     ஆநிரைகளை
(பசுக்கூட்டங்களை)க் கவர்ந்து வருவான். போரின் போது மக்கள்
தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள். ஐயறிவுடைய
பசுக்கள் இதைச் செய்யமுடியாது ஆகையால், அவற்றுக்குப்
பாதுகாப்பு அளிப்பதும் இந்த நிரை கவர்தலின் நோக்கமாகும்.
இதனால்தான் ஆநிரைகளை ஓட்டிச் செல்லும்போது, அவற்றிற்கு
வேண்டிய உணவும் நீரும் தருவார்கள்; நிழலில் தங்க வைப்பார்கள்.
இப்படித் தொடங்கும் ஆநிரை கவர்தல் ஆகிய செயல் எவ்வாறு
விரிகிறது என்பதைப் பார்ப்போம்.