|
2.3
வெட்சியின் இலக்கணமும் வகையும்
பகை மன்னனுடன் போர்புரியக் கருதிய
அரசன் (வெட்சி
மன்னன்) தன்னுடைய படைவீரரை (வெட்சி மறவரை) ஏவி, பகை
மன்னனது நாட்டில் காவலில் உள்ள ஆநிரையைக் கைப்பற்றிக்
கொண்டு வருவதாகிய ஒழுக்கம் வெட்சி
எனப்படும்.
அவ்வீரர்கள் வெட்சிப் பூவைச் சூடிச் செல்வர்.
வெட்சி இருவகைப்படும். அவை : (1)
மன்னுறு தொழில்,
(2) தன்னுறு தொழில் என்பனவாம்.
2.3.1 உறுதொழில் - விளக்கம்
மன்னனுக்கும் அவன் வழிநடத்தும் மறவர்க்கும்
பொருந்துவது ஆனிரை கோடல்.(ஆன்
+ நிரை = ஆனிரை;
கோடல் = கொள்ளுதல்) காரணம், அஃது அறவழியின்
பாற்பட்டது என்பதேயாம்.
அறவழியில் போர் புரிய விரும்பும்
மன்னனுக்கு முதலில் உறுவதாகிய தொழில் அல்லது உற்ற (ஏற்ற
அல்லது உரிய)
தொழில் எது? அஃது ஆனிரை கவர்தலே. எனவே, அது
உறுதொழில் எனப்பட்டது.
2.3.2 வெட்சி வகை - மன்னுறு தொழில்
நாடு கொள்ள விரும்பும் வேந்தனின்
ஆணை வழி
(கட்டளையின்படி) வெட்சி மறவர், பகை மன்னனின் நாட்டின்
கண் காவற்காட்டில் இருக்கும் ஆநிரையைக் கவர்தல் மன்னுறு
தொழில்.
வெட்சி மன்னன்,
வீரச் செருக்கு உடையவனாகிய மறவன்
ஒருவன் தனது அம்பின் கூர்மையை ஆராய்வதைக் கண்டான்.
கண்டு, ‘காளை போன்றவனே ! பகைவரது போர்முனை கலங்கி
அலறும்படியாகச் சென்று அவர்களுடைய ஏறுகளோடு கூடிய
பசுத்திரளைக் கைப்பற்றிக் கொண்டு வருவாயாக’ என்று
கட்டளையிட்டான். அக்கட்டளைச் சொல் அந்த வெட்சி
மறவனுக்கு மூண்டு எரிகின்ற நெருப்பில் மரத்தை வெட்டிப்
போட்டது போன்று ஆயிற்று. இது மன்னுறு தொழில்
ஆகும்.
2.3.3 வெட்சி வகை - தன்னுறு தொழில்
மன்னன், குறிப்பில் குறிப்பை உணரும் வீரர்களை
உடையவன். இவர்கள் மன்னனின் குறிப்புவழித் தொழில்
படுபவர்கள். இவர்கள் அரசனது ஆணையில்லாத போதும்
அவனது குறிப்புவழிச் சென்று ஆத்திரளைக் கவர்வார்கள். இது
தன்னுறு தொழில் ஆகும்.
|