2.6 அடைதல்

     அடுத்த நிலை அடைதல். இதில் தலைத்தோற்றம்,
தந்துநிறை
ஆகிய துறைகள் அடங்கும்.

2.6.1 தலைத்தோற்றம்

    தலை - இடம் ; தோற்றம் - தோன்றுதல். வீரர் வரவை
எதிர்பார்ப்பவர்கள் காணும்படியாக ஊரின் அருகே வீரர்கள்
தோன்றுவது தலைத்தோற்றம் என்னும் பெயர் பெற்றது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

    வெட்சி மறவன் ஆநிரைகளைக் கைப்பற்றிக் கொண்டு
வருவதை அறிந்து அவனுடைய சுற்றத்தினர் மகிழ்ந்ததை
மொழிவது தலைத் தோற்றம் என்னும் துறையாகும்.

உரவெய்யோன் இனம்தழீஇ
வரவு உணர்ந்து கிளைமகிழ்ந்தன்று.

2.6.2 தந்துநிறை

    ஊருக்கு முன்னால் உள்ள வெளியிடத்தில் காத்திருந்த
ஊரார் காணும்படி கைப்பற்றிய ஆநிரையைத் தந்து நிறுத்தலின்
தந்துநிறை என்னும் பெயர் பெற்றது.

  • கொளுவின் பொருளும் கொளுவும்

    ஊரில் உள்ளோர் கண்டு மகிழ, கவர்ந்து வந்த ஆநிரை
களை வெட்சி மறவர்கள் ஊர் அம்பலத்தே கொண்டு வந்து
நிறுத்துவது தந்து நிறையாம்.

வார் வலந்த துடிவிம்ம
ஊர்புகல நிரைஉய்த்தன்று.