4.0 பாட முன்னுரை

     மாணாக்கர்களே ! இதுவரை, போர் ஒழுக்கங்கள் சிலவற்றையும்,
அவற்றுக்குரிய அடையாளப் பூக்களைத் தம்குடிப் பூவுடன்
சூடிக்கொள்ளும் மரபையும் பார்த்து வந்தோம் அல்லவா?
இப்போது, வஞ்சித் திணையைப் (ஒழுக்கத்தைப்) பற்றிப்
பார்ப்போம்.

    போர்ப் பகுதிகளுள் ஒன்று வஞ்சி. தன்னை மதியாத
அரசனது நாட்டைக் கைப்பற்றக் கருதி, வஞ்சிப் பூவைச் சூடி,
அவன்மேல் போர் தொடுப்பதைச் சொல்வதாகும், இது. இதனை
வட்கார் மேற்செல்வது வஞ்சி (பகைவர்மீது படையெடுப்பது
வஞ்சி ) என்னும் பழம்பாடல் அடியொன்று அறிவிக்கின்றது. போர்
மேற்செல்லும் மறவர்கள் வஞ்சிப் பூவைச் சூடிக் கொள்வதைச்
சிலப்பதிகாரமும் சொல்லுகின்றது.

    பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி
    வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து
- (சிலம்பு. கால்கோள் - 50, 51)

    நாட்டைக் கைப்பற்றக் கருதிய மறவர்கள் சூடிய வஞ்சிப்பூ,
மரப்பூவா, கொடிப்பூவா என்பது தெரியவில்லை.

    வஞ்சி வேந்தன் யார்? இது குறித்து இருவேறு கருத்துகள்
உலவுகின்றன. மண் ஆசையால் போரினைச் செய்ய வரும்
வேந்தன், அவனைத் தன் நாட்டு எல்லைக்குள் புகாதபடி தடுத்து
போரிடும் வேந்தன் ஆகிய இரு வேந்தரும் வஞ்சி வேந்தர்
என்பதாகவே     இளம்பூரணரும்     நச்சினார்க்கினியரும்
எண்ணுகின்றனர். (இவ்விருவரும் தொல்காப்பிய உரையாசிரியர்கள்
என்பது நினைவிருக்கிறதல்லவா?) இது ஒரு கருத்து , ஆனால்
இதற்கு மாறாக ,

    வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் ; உட்காது
    எதிரூன்றல் காஞ்சி.

என்று பழைய பாடல் ஒன்று கூறியுள்ளது. இதன்படி போரினைச்
செய்ய வரும் வேந்தனே வஞ்சி வேந்தன்; அவனை உள்ளே
உள்ளே புகாதபடி தடுத்துப் போரிடும் வேந்தனோ காஞ்சி
வேந்தன
என்பாகும் . இது மற்றொரு கருத்து. இக்கருத்தை
மனதில் கொண்டே ஐயனாரிதனார் வஞ்சி படையெடுத்தல என்றும்,
காஞ்சி தடுத்து (எதிர்த்து) நிற்றல் என்றும் கொண்டார் எனத்
துணியலாம். காஞ்சித் திணையைப் பற்றிப் பிறகு பார்க்கலாம்.

    முல்லைத்திணையின் புறன் வஞ்சி. கார்காலத்தில் மழைநீர்
பள்ளங்களில் தேங்கும். ஆகையால், தமது கன்றுகாலிகளை
மேய்க்கும் ஆயர் மேட்டுப்புலங்களை நாடிச் செல்வர். மாலையில்
வீடு திரும்புவர். மாலை வரையில் ஆயருடைய வருகையை
எண்ணி ஆற்றியிருப்பது (பொறுத்துக் கொண்டிருப்பது) ஆய
மகளிர் ஒழுக்கம். ஆய்மகள் இல்லில் இருந்தும், ஆயர்மகன்
மேட்டுப்புலத்தில் ஆநிரைகளோடு தங்கியிருந்தும் பிரிவை ஆற்றி
வாழ்வர். இவ்வாறே, பிறர் மண்ணை நச்சிய வேந்தரும்
வீரரொடும் பாசறை இடத்துத் தங்கி ஆற்றியிருப்பர். அவர்
தேவியரும், அவர்கள் வினைமுற்றி மீளும் வரையில் இல்லிடத்தே
தோழியரொடும் கூடி ஆற்றியிருப்பர். இவ்வகையால், முல்லையின்
புறனாக வஞ்சி ஒழுக்கம் ஒப்புமைப்பட்டு நிற்கின்றது.

     தன்னை மதியாத அரசனது நாட்டைக் கைக்கொள்ளக்
கருதிக் குடிப்பூவொடும் போர் அடையாளப் பூவாம் வஞ்சிப்
பூவைச் சூடிக்கொண்டு அவன்மேல்     மற்றொரு வேந்தன்
படையெடுத்துச் செல்லுவது வஞ்சித் திணை. இவ்வஞ்சி
ஒழுக்கத்தின் இலக்கணத்தை இயம்பும் இயல் வஞ்சிப் படலம்.
இனி, இவ்வியல் தரும் விளக்கங்களைக் காண்போம்.