4.6 வெற்றியும் தோல்வியும்

     போரில் ஒருவர்தானே வெல்ல முடியும். தோற்றால்?
அவற்றைப் பார்ப்போம்.

4.6.1 கொடை வஞ்சி

    போர்க்களத்துள் புகுந்து வெ
்றி எய்திய மன்னரைப் பாடும்
வழக்கம் முன்னாளில் பாணரிடைக் காணப்பட்ட ஒன
்றாகும்.
தனது வெற்றியைப் பாடி இசைத்த பாணர்க்கு மன்னன்
வழங்கும் பரிசில் கொடைப் பொருள் ஆகும். பெற்ற பரிசிலைப்
பற்றியது கொடை வஞ்சி எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    உச்சம், மந்தம், சமம் ஆகிய மூன்று இசைநிலைகளையும்
அளந்து அறிந்து பாடிய பாணர்களுக்கு வஞ்சி வேந்தன் பரிசில்
கொடுத்ததைச் சொல்வது கொடை வஞ்சித் துறை யாகும்.

    நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப்
    பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று


எடுத்துக்காட்டு வெண்பா

    சுற்றிய சுற்றமுடன் மயங்கித் தம்வயிறு
    எற்றி மடவார் இரிந்தோட - முற்றிக்
    குரிசில் அடையாரைக் கொண்டகூட்டு எல்லாம்
    பரிசில் முகந்தன பாண்


எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து


    பகைவர் நாட்டை வளைத்துக் கைப்பற்றிய எல்லா
வளங்களையும் போர்க் களத்தில் பாடும் பாணர்கள் பெறப்
பரிசிலாகக் கொடுத்தான் வஞ்சிவேந்தன் என்பதாகும்.

  • துறைப் பொருத்தம்

    அடையாரது ( பகைவரது ) நாட்டில் கொண்ட பொருள்களை
வஞ்சிவேந்தன் வழங்கப் பாணர் முகந்து கொண்டனர் என்பதனுள்
‘பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டியமை’ காணப்படுகின்றது. ‘பாண்’
என்பது பாணரைக் குறித்தது. இவ்வகையால் துறைப் பொருள்
பொருந்துவதைக் காணலாம்.

4.6.2 குறுவஞ்சி

    போர் என மேற்சென்ற செயல் முற்றுப் பெறாமல் மீளுவது,
செயற்பாட்டில் சிறுமையாதலின் (குறை ஏற்பட்டதால்), குறுவஞ்சி
எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும

    சினத்தொடு எழுந்த வஞ்சி வேந்தனுக்குத் திறைப் பொருள்
கொடுத்து, அந்நாட்டு வேந்தன் தன் குடிகளுக்கு அருள் செய்து
காத்தது குறுவஞ்சியாம். மேற் செல்வதாகிய போர்த் தொழில்
குறுகும் நிலைமையைத் திறைப் பொருள் செய்தது என்பது
குறிப்பு.

    மடுத்துஎழுந்த மறவேந்தர்க்குக்
    கொடுத்தளித்துக் குடிஓம்பின்று


(ஓம்புதல்
= காத்தல்)

எடுத்துக்காட்டு வெண்பா

    தாள்தாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான்
    வாள்தானை வெள்ளம் வர,அஞ்சி - மீட்டான்
    மலையா மறமன்னன் மால்வரையே போலும்
    கொலை யானைப் பாய்மாக் கொடுத்து.

வெண்பாவின் பொருள்


    பகை மன்னன் வீரமுடைய அரசனே. எனினும் அவன்
வஞ்சி வேந்தனொடு மேலும் மலையவில்லை. காரணம்,
வஞ்சிவேந்தனின் வாள்மறவர்படை வெள்ளமென வரக் கண்டு
அஞ்சியமையே ஆகும். தீயில் அழியவிருக்கும் நாட்டை மீட்டுத்
தன்நிழல் வாழ் குடிகளைக் காத்தளிக்கப் பகை மன்னன், மலை
போலும் பெரிய யானைப் படையையும், பாய்கின்ற புரவிப்
படையையும் திறைப் பொருள்களாகக் கொடுத்தான். கொடுக்கக்
கொண்ட வஞ்சி வேந்தன் போரைக் கைவிட்டான்.

    பகைமன்னன் ‘யானைப் பாய்மாக் கொடுத்து மீட்டான்’
என்பது, ‘கொடுத்தளித்துக் குடியோம்பியமையை’ அறிவிக்கிறது.

  • இதுவும்அது (குறுவஞ்சி)

    குறுமை - வஞ்சிப் போர் நிகழ்வுகளில் குறுமை (குறைவு).
போர்ச் செயலைத் தவிர்த்து இருந்த மன்னனின் பாசறையின்
தன்மையைக் கூறுதல் பற்றிக் குறுவஞ்சி எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    பகைவரது நாட்டினைச் சூழ்ந்த காவற்காட்டில் புதிதாகக்
கட்டப்பட்ட ஊராதலின் கட்டூர். கட்டூராவது பாசறை. வஞ்சி
வேந்தன் படையிறங்கியிருந்த இப்பாசறையின் நிலையைக்
கூறுவதும் குறுவஞ்சி எனப் பெறும்.

    கட்டூரது வகைகூறினும்
    அத்துறைக்கு உரித்தாகும்.

எடுத்துக்காட்டு வெண்பா

     அவிழ்மலர்க் கோதையர் ஆட ஒருபால்,
    இமிழ் முழவம் யாழோடு இயம்பக் - கவிழ்மணிய
    காய்கடா யானை ஒருபால், களித்துஅதிரும்
    ஆய்கழலான் கட்டூர் அகத்து.

எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்

    பகை மன்னன் திறைப் பொருளை வழங்க, பெற்றுக்
கொண்ட வஞ்சி வேந்தனின் பாசறையிடத்தே போர்க்கான
ஆயத்தங்கள் குறுகின. ஆங்கே, களிப்புக்கு இடந்தருவனவே
நிகழ்ந்தன. ஒருசார் (ஒருபக்கம்), மலர் சூடிய விறலியர் ஆடிக்
கொண்டிருந்தனர். அவர்தம் ஆடலுக்கேற்ப மத்தளமும் யாழும்
ஒத்திசைத்தன. ஒருசார், மணிகளையும் சினத்திற்கு அடையாளமான
மதநீரையும் உடைய யானைகள் களித்துப் பிளிறிக்கொண்டிருந்தன.

    போர் தவிர்ந்ததனால், பாசறை, விறலியர் ஆடலையும்,
களிறுகளின் களிப்பால் எழும் பிளிறலையும் உடையதாயிற்று.