5.0 பாட முன்னுரை

     ஒரு மன்னன் மற்றொரு மன்னனோடு போர் புரிய
வரும்போது, அம்மன்னன் வாளா இருத்தல் ஆகாது. அவன்,
தன்னுடைய நாட்டைக் காக்கும் கடப்பாடு உடையவனாகின்றான்.
காத்துக்கொள்வது, அரசியல் கற்பும் ஆகும். ஆதலால், தன்
படைகொண்டு மேல்வந்த மன்னனை எதிர் ஊன்றல் காஞ்சிப்
போர் எனப்பட்டது.

    வட்கார் மேற்செல்வது வஞ்சியாம்; உட்காது,
    எதிர் ஊன்றல் காஞ்சி


என்பது பழம்பாடல் ஒன்றன் அடி . இவ் எதிர் ஊன்றல்
ஒழுக்கத்தின்போது மறவர்கள் காஞ்சிப் பூவைச் சூடிக்கொள்வர்.
காஞ்சி என்பது ஒரு மரம். இங்குக் காஞ்சி என்பது பூவினை
உணர்த்தாமல், அதனைச் சூடிக் கடைப்பிடிக்கும் போர்
ஒழுக்கத்தை உணர்த்தியது. காஞ்சி - ஆகுபெயர். காஞ்சியின்
இலக்கணத்தை உணர்த்தும் சிறு பிரிவு, காஞ்சிப் படலம்.