5.1 காஞ்சித் திணை

     காஞ்சித் திணையாவது, ‘வேகும் சினத்தையுடைய பகை
மன்னனாகிய வஞ்சி வேந்தன் போர் மேற்கொண்டு தன்
நாட்டின்கண் வந்துவிட, அந்நாட்டிற்குரிய காஞ்சி மன்னன்
காஞ்சிமாலையைச் சூடிக்கொண்டு தனது காவல் இடத்தைக் காக்க
நினைந்தது’ என்பர்.

    வேம்சின மாற்றான் விடுதர வேந்தன்
    காஞ்சி சூடிக் கடிமனை கருதின்று

  • கொளுப் பொருளும் கொளுவும்

    அருவரை பாய்ந்துஇறுதும் என்பார்பண்டு இன்றுஇப்
    பெருவரைச் சீறூர் கருதிச் - செருவெய்யோன்
    காஞ்சி மலையக் கடைக்கணித்து நிற்பதோ
    தோம்செய் மறவர் தொழில்?


வெண்பாவின் கருத்து


    காஞ்சி மறவர்கள், தமது வீரத்தை நிலைநாட்டுதற்குரிய
போரினை வாய்க்கப் பெற்றிலாமையால், மலையினின்று வீழ்ந்தேனும்
இறப்போம் என்றிருந்த நிலையில், காஞ்சி மன்னன் தனது
மலையகத்துச் சீறூரைக் காக்கக் காஞ்சிப் பூவைச் சூடி
மலைந்தான். (சீறூர் = மலைப்பகுதியில் உள்ள சிறிய ஊர்) அது
கண்ட மறவர்கள் போர்க்கென அணிவகுத்து நிற்கவில்லை;
பகைவரைத் தாக்கச் சென்று விட்டனர். ‘எள்’ என்றால்,
‘எண்ணெய்’ ஆகின்றனர்.

திணைமைதி

    வெம்சின வேந்தன் படை வந்தமை கண்டு, போர் விரும்பும்
காஞ்சி மன்னன் சீறூரைக் காக்க அடையாளப் பூவைச் சூடிச்
சென்றான். அவனது மறவர்கள் அணிவகுப்பது குற்றமென்று
எண்ணிப் பகைவரை எதிர்க்கச் சென்றனர் என்பதால் திணைப்
பொருளாகிய     எதிர்     ஊன்றல் உறுதிப்படுத்தப்படுகிறது.
(அணிவகுத்து நிற்பதால் காலம் கரையும். காலம் தாழ்த்தல் தவறு
என்று கருதி வீரர்கள் உடனே போருக்குச் சென்றனர் என்பது
இதன் கருத்து.)

5.1.1 காஞ்சித்திணை - வளர்ச்சி

    காஞ்சி என்றதொரு திணையைத் தொல்காப்பியர் கொண்டுள்ளார். அதில் அவர் கூறுவது நிலையாமையையே. இந்த நிலையாமையை ஆசிரியர்
தொல்காப்பியனார் உணர்த்துவதற்குக் கொண்ட துறைகள்
பெரும்பான்மையும் எதிர் ஊன்றிய போர்க்கள நிகழ்ச்சிகளாகவே
அமைகின்றன எனின், அது மிகையாகாது. செல்வம் - அரசாள்
செல்வம் - யாக்கை - இளமை ஆகிய இவை ஒட்டு மொத்தமாக ஒரே
நேரத்தில் சாயும் இடம் போர்க்களம் அல்லது வேறு இடம் எது?
நிலையாமை என்றும் அறத்தை எதிர் ஊன்றலாகிய மறத்தில் வைத்துக்
காட்டுவது பண்டைய இலக்கணிகளின் கொள்கையாக இருந்து
வந்துள்ளது. இது, பின்னாளில் எதிர் ஊன்றல் காஞ்சி என வளர்ந்தது;
வஞ்சித் திணைக்கு மறுதலைத் திணையாக எண்ணப் பெற்றது.

    வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே

என்பது பன்னிரு படலம். பன்னிருபடலம தோன்றிய காலத்தில்
வஞ்சியும் காஞ்சியும் இருவேறு போர் ஒழுக்கங்களாக
வழங்கியமை கருதியே இளங்கோவடிகளாரும்.

     தென்திசை என்றன் வஞ்சியொடு வடதிசை
    நின்றுஎதிர் ஊன்றிய நீள்பெருங் காஞ்சியும்
    . . . . . . . . . . . . . . . . . . . . என்
    வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும்

            - (சிலம்பு, காட்சி, 135-149)


எனச் சேரன் செங்குட்டுவன் கூற்றில் வைத்துக் காட்டுகின்றார்.

    தொல்காப்பியரின் காஞ்சித் துறைகளுள் மறக்கூறுகள்
அமைந்த துறைகளையும், பன்னிருபடலம், சிலப்பதிகாரம்
ஆகியவற்றுள் இடம் பெற்ற செய்திகளையும் கொண்டு
ஐயனாரிதனார் காஞ்சித் திணையைப் படைத்துள்ளார். மேலும்,
தொல்காப்பியர் நிலையாமையை நவிலும் அறக்கூறுகள் பற்றிய
துறைகளைப் பொதுவியல் படலத்துள் காட்டியுள்ளார்

  • பெருந்திணைப் புறன் காஞ்சி

    காஞ்சி என்னும் திணை, பெருந்திணை என்ற
அகத்திணைக்குப் புறன் என்பர் தொல்காப்பியர்.

    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே

5.1.2 காஞ்சித் திணைத் துறைகள்

    காஞ்சித் திணையோடு, அதன் துறைகளாகிய ,

(1)
காஞ்சி அதிர்வு
(2)
தழிஞ்சி
(3)
படை வழக்கு
(4)
பெருங்காஞ்சி
(5)
வாள் செலவு
(6)
குடை செலவு
(7)
வஞ்சினக் காஞ்சி
(8)
பூக்கோள் நிலை
(9)
தலைக்காஞ்சி
(10)
தலைமாராயம்
(11)
தலையொடு முடிதல்
(12)
மறக்காஞ்சி
(13)
பேய்நிலை
(14)
பேய்க் காஞ்சி
(15)
தொட்ட காஞ்சி
(16)
தொடாக் காஞ்சி
(17)
மன்னைக் காஞ்சி
(18)
கட்காஞ்சி
(19)
ஆஞ்சிக் காஞ்சி
(20)
மகட்பாற் காஞ்சி
(21)
முனைகடி முன்னிருப்பு


என்னும் இருபத்தொன்றனையும் சேர்க்க, காஞ்சித் திணை
இருபத்திரண்டாம் என்று அறிஞர் சொல்லுவர்.

காஞ்சி; காஞ்சி அதிர்வே, தழிஞ்சி,
பெரும்படை வழக்கொடு, பெருங்காஞ் சிய்யே,
வாள்செலவு என்றா, குடையது செலவே,
வஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலையே,
புகழ்த்தலைக் காஞ்சி, தலைமா ராயம்,
தலையொடு முடிதல், மறப்பெயர்க் காஞ்சி,
மாற்றரும் பேய்நிலை, பேய்க்காஞ் சிய்யே,
தொட்ட காஞ்சி, தொடாக்காஞ் சிய்யே,
மன்னைக் காஞ்சி, கட்காஞ் சிய்யே,
ஆஞ்சிக் காஞ்சி, மகட்பாற் காஞ்சி,
முனைகடி முன்னிருப்பு, உளப்படத் தொகைஇ
எண்ணிய வகையான் இருபத்திஇ ரண்டும்
கண்ணிய காஞ்சித் துறையென மொழிப.
(புறப்பொருள் வெண்பா மாலை-4)