5.3 காஞ்சிப் போருக்கு முந்தை நிகழ்ச்சிகள்

     வாள்செலவு, குடைசெலவு, வஞ்சினக் காஞ்சி, பூக்கோள்
நிலை, தலைக்காஞ்சி, தலைமாராயம், தலையொடு முடிதல்
ஆகியவை பற்றி இனிப் பார்ப்போம்.

5.3.1 வாள்செலவு

    நல்ல முழுத்தத்தில் (நேரத்தில்) வாளினைப் போர்க்களம்
நோக்கிச் செல்ல விடும் செயலைக் கூறுவதனால், வாள் செலவு
எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    வெல்லுதற்கரிய போர்முனையில் நின்று வஞ்சி வேந்தன்,
‘தன்னோடு போர்க்கு வருக!’ எனக் கூவி அழைத்த பின், காஞ்சி
மன்னன் போர்முனை நோக்கி வாளினைப் போக விடுவதைப்
பற்றிச் சொல்வது வாள் செலவு என்னும் துறையாம்.

    அருமுனையான் அறைகூவினபின்
    செருமுனைமேல் வாள்சென்றன்று


எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து


    புரவிப் படையை உடைய காஞ்சி மன்னன், பகைவர்கள்
தன்னை வருத்துவதற்கென வந்த பின்னரே வாளினைப் புறவீடு
செய்தான் என்பதாம்.

துறையமைதி

    வஞ்சி வேந்தன், தன் பாசறையை விட்டு வந்த பின்னரே
காஞ்சியான், அவனுடைய வாளினைப் புறவீடு செய்தான்
என்பதனால், துறைப் பொருத்தம் தெளிவாகின்றது.

5.3.2 குடை செலவு

    வெண் கொற்றக் குடையைப் புறவீடு செய்தல் பற்றிக் குடை
செலவு
என்னும் பெயர் பெற்றது இத்துறை.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    கொதிக்கும்     நெருப்பைப்     போல் வெம்மையைப்
பகைவர்க்குப் பயப்பவன் காஞ்சி வேந்தன். அவன், பழைய
குடியில் பிறந்துவந்த காஞ்சி மறவர்கள் முன்னாகச் சூழ்ந்து
செல்லத், தனது வெண் கொற்றக் குடையைப் பகைவர்தம் பாசறை
நோக்கிச் செல்லவிட்டான். செல்லவிட்ட அதனைச் சொல்வது,
குடை செலவு ஆகும்.

    முதுகுடி மறவர் முன்னுறச் சூழக்
    கொதிஅழல் வேலோன் குடைசென் றன்று.

எடுத்துக்காட்டு வெண்பா

    . . . . . . . . நண்ணார்மேற் செல்கஎன்று
    கூட்டிநாள் கொண்டான் குடை.

என்று குறிப்பிடுகிறது.

எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்

    காஞ்சி மன்னன், வஞ்சி வேந்தனுடன் இன்ன நாளில் இன்ன
இடத்தில் போரிடுவேன் என
நாளும் களமும் குறிப்பிட்டு, எழுதிய
ஓலையில் தனது இலச்சினையைப் பதித்
து, அதனை அவ்வஞ்சி
வேந்தன்பால் அனுப்பிய பின்பு நல்ல நாளில் குடையைப் புறவீடு
செய்தான்.

துறையமைதி

    ‘வெய்யோன் . . .’, ‘கூட்டி நாள் கொண்டான் குடை’
என்றதில், துறைக் கருத்துப் பொருந்தி வருமாறு விளங்குகின்றது.


5.3.3 வஞ்சினக் காஞ்சி

    ‘இன்னது செய்யத் தவறினால் இன்னவாறு ஆகக் கடவேன்’
என்பது சூளுரை. இவ்வுரை, மிக்க சினம் காரணமாக எழுவது.
காஞ்சி மன்னன் வஞ்சினம் உரைப்பதைப் பேசுவதால் வஞ்சினக்
காஞ்சி
என்னும் பெயரதாயிற்று இத்துறை.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    காஞ்சி வேந்தன் கொடிய சினத்தினன். அவன் சினந்து,
தனக்கு வேற்றவராகிய (பகைவராகிய) வஞ்சியாரை அடிபணியச்
செய்வதாகச் சூளுரை கூறிய வகையை மொழிந்தது வஞ்சினக்
காஞ்சி
என்னும் துறையாம்.

    வெம்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப
    வஞ்சினம் கூறிய வகைமொழிந் தன்று.

எடுத்துக்காட்டு வெண்பா

    இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை
    வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும்
    அரண்அவியப் பாயும் அடையார்முன் நிற்பேன்
    முரண்அவிய முன்முன் மொழிந்து.


(பகலோன் = கதிரவன்; ஒன்னார் = பகைவர்)

எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்

    பகைவராகிய வஞ்சி மறவரை இன்று பகலவன் மறைவதற்கு
முன்னதாகவே எனது வேற்படை கொண்டு வெல்வேன்; வென்று
போர்க்களத்தைக் கைப்பற்றுவேன். கூறிய கால எல்லைக்குள்
வென்று, களத்தைக் கைப்பற்றாது, எனது வேலினை உயர்த்திப்
பிடிப்பேனாயின், மாற்றாரது அரண் அழியும்படி தாக்கும்
வஞ்சியார் முன்பு எனது முரண் (பகைமை) அவிய எல்லாக்
காலமும் பணிமொழி கூறி, தாழ்ந்து நிற்கும் இழிநிலையைப்
பெறுபவனாக நான் ஆவேன் எனக் காஞ்சியான் வஞ்சினம்
மொழிகின்றான்.

துறையமைதி

    ‘இன்னது பிழைப்பின் இன்னவாறு ஆகக் கடவேன்’ என்பது
வஞ்சின மொழியென்று முன்னரே பார்த்தோம். இம்மொழி, ‘இன்று
பகலோன் . . . . மொழிந்து’ என்பதனுள் பொதிந்துள்ளது;
இதனால், இத்துறையாவதை அறியலாம்.

5.3.4 பூக்கோள் நிலை

    பூவினைக் கொடுக்கக் கொள்வது, பூக்கோள். வஞ்சியாரின்
போரை எதிர்கொள்வதற்காகக் காஞ்சி மன்னன் பூவினைக்
கொடுக்க, அவன் மறவர் அதனைப் பெற்றுக் கொள்ளும் நிலை,
பூக்கோள் நிலை எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    கரிய மேகத்தைத் தாங்கிய கடலைப் போலுள்ள தன் பெரும்படை
மறவர்கள், வஞ்சி வேந்தனால் வந்துற்ற போரை எதிர் கொள்ளும்
பொருட்டுக் காஞ்சி மன்னன் பூவினை வழங்கினான். அவனுடைய
மறவர்கள் அதனைப் பெற்றுக் கொண்டதைக் கூறுவது, பூக்கோள் நிலை
என்னும் துறையாம்.

    கார்எதிரிய கடல்தானை
    போர்எதிரிய பூக்கொண்டன்று


(கார = கரிய மேகம்)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    காஞ்சி மன்னன் வழங்கிய பூவினைக் கொண்ட காஞ்சி
மறவர்கள் குறையாத வீரம் உடையவர்கள். வஞ்சி வேந்தனின்
வீரம்கெடப் போர் புரிவார்கள் ; மாலைக்குள் வஞ்சியாரை
வென்று, மாலை நேரத்துச் சிவந்த வானம் போலக் குருதி
வெள்ளம் மண்ணில் பாய விடுவர் எனக் கண்டோர் பேசிக்
கொள்கின்றனர்.

துறையமைதி

    வஞ்சி வேந்தனைத் தோற்கடிப்பதற்காக, காஞ்சி மன்னன்
தனது மறவர்களுக்குக் காஞ்சிப்பூ வழங்கினான் என்பதில் ‘போர்
எதிரிய பூக்கொண்ட நிலை’ அமைதலின், துறைக் கருத்துப்
பொருந்துவதாயிற்று.

5.3.5 தலைக்காஞ்சி

    தலையினது சிறப்பைக் கூறுவது பற்றித் தலைக் காஞ்சி
எனப் பெற்றது. இங்கு, தலையாவது, பகைவர்க்கு அஞ்சாது
போரிட்டு மாய்ந்த மறவனது தலையாம்.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    தனது வலிமை போர்க்களத்தில் மேம்படும்படியாகப்
பகைவரது மறத்தைக் கடந்து, அங்கே இறந்துபட்ட மறவனின்
தலையின் மாட்சியைச் சொல்வது, தலைக்காஞ்சி என்னும்
துறையாம்.

    மைந்துயர மறங்கடந்தான்
    பைந்தலைச் சிறப்புஉரைத்தன்று


(மைந்து = வலிமை; பைந்தலை = (வெட்டுப்பட்ட) பச்சை இரத்தம்
சிந்தும் தலை)

எடுத்துக்காட்டு வெண்பா

    விட்டிடின்என் வேந்தன் விலைஇடின்என் இவ்வுலகின்
    இட்டுரையின் எய்துவ எய்திற்றால் - ஒட்டாதார்
    போர்தாங்கி மின்னும் புலவாள் உறைகழியாத்
    தார்தாங்கி வீழ்ந்தான் தலை.

(புல = புலால்; ஒட்டாதார = பகைவர்)

வெண்பாவின் பொருள்

    காஞ்சி மறவன், பகைவராகிய வஞ்சி மறவரின் போர்த்
தொழிலைத் தடுத்தான். மின்னுகின்ற புலால் நாற்றம் உடைய
வாளை உறையினின்றும் எடுத்தான் ; வஞ்சியாரது தூசிப்
படையை (முதலில் வரும் கொடிப்படை)த் தான் நின்று தடுத்தான்.
தடுத்தவன், அக்களத்திலேயே வீழ்ந்து பட்டான். வீழ்ந்துபட்ட
அவன் தலை, இனி இவ்வுலகில் புகழினால் அடையக் கூடியன
யாவை? அவை எல்லாவற்றையும் அது அடைந்து விட்டது.
ஆகலின், அத்தலையை மதியாமல் அப்போர்க்களத்திலேயே
விட்டுவிட்டால்தான் என்ன? அன்றி, அரசன் மதித்து
விலையிட்டுப் பெரும்பொருளைத் தந்தால்தான் என்ன?

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    போரிட்டு மடிந்த வீரனின் தலை, காஞ்சி வேந்தனால்
மதிக்கப் பெறாமல் களத்தில் கிடப்பதனால் அடையப் போகிற
இழிவும் இல்லை. மதிக்கப் பெறுவதனால் வந்து உறப்போகின்ற
சிறப்பும் இல்லை. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
அவரவர்களுடைய கருமங்கள் உரைகல். வீரன், இனிமேல் பெறும்
புகழும் பெருமையும் யாவை? அவை எல்லாமும் அடைந்தான்
என்பது கருத்து.

துறையமைதி

    மாய்ந்த மறவனின் உடல் உருக்குலைந்து, தலையே
அவனை அடையாளப் படுத்துவதாய்க் களத்தில் அமைந்தது.
அதனைக் கொண்டு வந்து அரசனிடம் காட்ட, மன்னவன் சிறப்புச்
செய்தான் என்னும் செய்திகள் குறிப்பின் பெறப்பட்டதால் துறைப்
பொருள் பொருந்துவது புலனாகின்றது.

5.3.6 தலைமாராயம்
    மன்னன், தலை கரணமாகச் செய்யும் சிறப்பு
ஆதலின், இப்பெயர் பெற்றது. அரசன் மறவர்க்குச் செய்யும்
சிறப்பு மாராயம எனப்படுவதை முன்னர் மாராய வஞ்சி என்ற
இடத்தில் கண்டோம். மாராய வஞ்சி, வீரர்களுக்குச் சிறப்புச்
செய்ததைச் சொல்வது. இது (தலைமாராயம்), களத்தில் மாய்ந்த
மறவனின் தலையைக் கொண்டு வந்தவனுக்கு அரசன் செய்யும்
சிறப்
ச் செல்்வது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    மாற்றானது தூசிப் படையைத் தாங்கிக் களத்துள்பட்டான்
ஒரு காஞ்சி மறவன். அவனுடைய தலையைக் கொண்டு வந்து
‘இத்தகையது இவன் வீரம்’ என மன்னனிடம் காட்டினான்
மற்றொருவன். காட்டிய அவனது உள்ளம் களிப்பில்
நிரம்பும்படியாக விற்படையை உடைய காஞ்சி வேந்தன்
அவனுக்குச் செல்வம் ஈந்ததைச் சொல்வது, தலைமாராயம்
என்னும் துறை.

    தலைகொடு வந்தான் உள்மலியச்
    சிலையுடைவேந்தன் சிறப்புஈந்தன்று.


(சிலை = வில்)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    பகைவரே புகழ்ந்து பேசும் அளவுக்கு ஆண்மையோடு போர்புரிந்து
உயிரை நீத்தானது தலையைக் கொண்டு வந்து தந்தவனுக்குக்
காஞ்சி வேந்தன் மிக்க செல்வத்தைக் கொடுத்தான். பாடிவரும்
இரவலர்க்கு வாரி வழங்கும் மன்னனுக்கு இவ்வாறு ஈதல் ஒன்றும்
வியப்புக்குரியதன்று.

துறையமைதி

    களத்தில் உயிரை நீத்த படைமறவனின் தலையைக்
கொணர்ந்தவனுக்குக் கொடுப்பதாயினும், மன்னவன் செய்த
அச்சிறப்புத் தலைக்கே செய்வதாக அமைதலின் தலைமாராயம்
என்னும் துறைப்பொருள் நிரம்புவது காண்க.

5.3.7 தலையொடு முடிதல்

    வீரன் ஒருவனின் உடல் போர்க்களத்தில் உருக்காணா (அடையாளம்
தெரியாத) வகையில் சிதைந்தது. அவனுடைய மனைவி, தலையை
மட்டுமே கண்டு, வீரச் சுவர்க்கம் அடைந்தவன் தன்னுடைய கணவனே
என அறிந்தாள். அறிந்த அவள் கணவனை இழந்தோர்க்கு ஆதலின்,
தலையொடும் மடிந்தாள். தலையொடும் மடிந்த அதுபற்றி இத்துறை
தலையொடு முடிதல் என்னும் பெயர் பெறுவதாயிற்று.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    படைஞர் தம்முள் நெருங்கிச் செய்கின்ற போரில்
மாறுபடாத வலிமையை உடைய மறவன் மாய்ந்தான். மாய, அவன்
மனைவி, தன்னைக் கொண்ட அக்கணவனின் தலையைக் கண்டு
அதனுடன் மாய்ந்ததைச் சொல்லுவது தலையொடு முடிதல்
என்னும் துறையாம்.

    மண்டு அமருள் மாறா மைந்தின்
    கொண்டான் தலையொடு கோல்வளை முடிந்தன்று


(மண்டு = நெருங்கி; மாறா = குறையாத; மைந்து = வலிமை;
கொண்டான= கணவன்; கோல்வளை = பெண்; முடிதல =
இறத்தல்)

எடுத்துக்காட்டு வெண்பா

    கொலைஆனாக் கூற்றம் கொடிதே கொழுநன்
    தலைஆனாள் தையலாள் கண்டே - முலையால்
    முயங்கினாள் வாள்முகம் சேர்த்தினாள் ஆங்கே
    உயங்கினாள் ஓங்கிற்று உயிர்.


(கூற்றம் = எமன் ; ஆனாள= தாங்க முடியாதவளாய்;
உயங்கினாள் = வருந்தினாள்; ஓங்கிற்று = பிரிந்தது)

எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்

    மறத்தி ஒருத்தி, தன் கணவனுடைய தலையைக் களத்தில் கண்டாள்.
கண்டு உள்ளம் அமையாதவளாய் - அடங்காதவளாய்- அதனை மார்பால்
தழுவினாள்; ஒளி பொருந்திய முகத்தைத் தன்முகத்தொடும் சேர்த்து
அணைத்தாள். அப்போர்க்களத்தில் தனக்கு முன்னதாக மாய்ந்த தலைவனை
எண்ணி வருந்தினாள். வருந்திய அளவில் அவளது உயிர் பிரிந்தது.
அவளுடைய தலைவன் உயிரை உண்டபின்னும் அமையாது அவளது
உயிரையும் பருகிய கூற்றம் கொடியதுதான்.

துறையமைதி

    ‘முயங்கினாள்’, ‘சேர்த்தாள்’, ‘ஆங்கே உயங்கினாள்’,
‘ஓங்கிற்று உயிர்’ என்னும் சொல்லமைப்பில் ‘கொண்டான்
தலையொடு கோல்வளை முடிந்தன்று’ என்னும் கொளுப் பொருள்
நிரம்புதல் காண்க.