5.5 காஞ்சிபோர் நிகசிகள் - Il

     மன்னைக் காஞ்சி, கட்காஞ்சி, ஆஞ்சிக்காஞ்சி, மகட்பால்
காஞ்சி, முனைகடி முன்னிருப்பு ஆகியவை பற்றி இப்பகுதியில்
பார்ப்போம்.

5.5.1 மன்னைக் காஞ்சி

    இறந்தவனைப் பற்றிச் சிறப்பாகப் பேசி, அவன் மறைவுக்கு
இரங்கி, மற்றவர்கள் வருந்துவது.
  • கொளுப் பொருளும் கொளுவும்

    உலகத்தார்     வியக்கும்படி போரிலே இறந்துபட்டு, விண்ணுலகம்
சென்றான் காஞ்சி மறவன் ஒருவன். அம்மறவனுடைய மறப்பண்பைப்
புகழ்ந்து பின், அவன் அழிவுக்கு (மறைவுக்கு) நொந்து வருந்துவது
மன்னைக் காஞ்சி என்னும் துறையாகும்.

    வியல்இடம்மருள விண்படர்ந்தோன்
    இயல்புஏத்தி அழிபுஇரங்கின்று

(வியல் இடம் = அகன்ற உலகம்; அழிபு = அழிவு)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    களத்தில் பட்ட தலைவன், மன்னனுக்குப் போர்க்கடலைக்
கடக்கும் புணை (தெப்பம்); சான்றோரைத் தாங்குவதில் துணை ;
ஊர்க்கும் உலகுக்கும் உயிர் என்றிருந்தான். அவன் இறந்தமையால்
இவையெல்லாம் இல்லையாயின. பகைவரது வேல், தருமம்
செய்வோருக்கு எனத் திறந்திருந்த வாயிலை அடைத்தது.
அஃதாவது, அறம் செய்து சுவர்க்கத்தை அடைவாரைவிட, அவன்
மறம் சிறந்து நின்றது.

துறையமைதி

    இதன்கண், படைத்தலைவன் ஒருவன், தான் வாழ்ந்த
காலத்தில் பலருக்கும் உதவி செய்பவனாக இருந்ததும் அவன்
இறந்ததனால் இனிமேல் அது இல்லை என்பதும் கூறப்பட்டன.
இதனால் இறந்தவர்க்கு இரங்கல் வெளிப்படுத்தப்படுகின்றது.
இவ்வகையில், இத்துறைப் பொருள் பொருந்தி வருவதனை
அறிகின்றோம்.

5.5.2 கட்காஞ்சி

    காஞ்சி மன்னன் தனது மறவர்க்குக் கள் வழங்கியதை
மொழிவது காரணமாக இப்பெயரைப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    தேன் மலிந்து, வாசனை உடைய மாலையை அணிந்த
காஞ்சி மன்னன், மறமும் வலிமையும் வாய்ந்த தனது மறவர்
போரில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று எண்ணி
அவர்களுக்குக் கள்ளினை வழங்கியதைக் கூறுவது கள்காஞ்சி
என்னும் துறையாகும்.

    நறமலியும் நறும்தாரான்
    மறமைந்தர்க்கு மட்டுஈந்தன்று.


(மட்டு = கள்)

வரலாறு (வெண்பா யாப்பில்)

    ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனித்துயில்
    மன்னன் மறவர் மகிழ்தூங்கா - முன்னே
    படலைக் குரம்பைப் பழங்கண் முதியாள்
    விடலைக்கு வெங்கள் விடும்.


(ஒன்னா = ஒத்துவராத; முனையோர் = போர் முனையிலுள்ள
பகைவர்; முதியாள= முதிய அன்னை; விடலை = மகனாகிய
மறவன்; வெங்கள்-வெம்+கள = விரும்பத்தக்க கள்)

எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்

    காஞ்சி மன்னன் தன் மறவர்கள் கள் உண்டு
மகிழ்ந்தாடுவதற்கு முன்னரே, முதியாள் பயந்த இளம் மறவனுக்கு
விரும்பத்தக்க கள்ளை வார்த்தான். இனிப் பகைவர்க்குத் தூக்கம்
ஒழிவதாக. ஏனெனில், கள்வழங்கா முன்பே களித்தாடியவன், கள்
பெற்ற பின்னர் எந்நேரமும் போரெனப் புகுவான்; எனவே
விழித்திருங்கள் என்பதாம்.

துறையமைதி

    முதியாள் பெற்ற விடலைக்குக் காஞ்சி மன்னன்
கள்வார்த்ததைச் சொல்லியது ஆதலின், இத்துறையின் பெயர்ப்
பொருத்தம் தெளிவாகின்றது.

5.5.3 ஆஞ்சிக் காஞ்சி

    கணவன் இல்லாமல் வாழ்வதற்கு அஞ்சுவதால் மனைவி
தீப்பாய்ந்து மடிகிறாள். தீப்பாய்தலைக் காணுவோரும் அச்சத்தில்
நிலைக்கின்றனர். அச்சம் பிறக்கக் காரணமானவற்றை இயம்பும்
துறையாதலின், ஆஞ்சிக் காஞ்சி எனப் பெற்றது. அஞ்சி
(அஞ்சுதல) என்னும் சொல்லின் முதலெழுத்து (ஆ என்று)
நீண்டுள்ளது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    அன்புமிக்க கணவன் இறந்துபட, அவனுடைய மனைவி
அவனொடு எரியுள் மூழ்கினாள். காதல் மிக்க மெல்லிய
தன்மையுடைய அம்மடந்தையின் சிறப்பை உரைப்பது ஆஞ்சிக்
காஞ்சி
யாம்.

    காதல் கணவனொடு கனைஎரி மூழ்கும்
    மாதர்மெல்லியல் மலிபுஉரைத் தன்று.


(எரி = தீ; மலிபு = சிறப்பு)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    வஞ்சி மறவர் படையால் புண்ணேற்று மடிந்த கணவனொடு
தானும் எரியில் புகுவதற்காக, தன் தோழியரை வழிவிடுக என
இறந்த வீரனின் மனைவி வேண்டுகிறாள்.

துறையமைதி

    கணவனோடு மனைவியும் எரிபுக விரும்பும் சிறப்பைக்
கூறுவதால், துறைப்பொருளும் பொருந்துவது தெரிகின்றது.

  • இதுவும்அது (ஆஞ்சிக் காஞ்சி)

    எரிபாய்வது மட்டுமா கண்டோர்க்கு அச்சம் தருகிறது?
தன் கணவனை மாய்த்த வேலினாலே தன்னைக் குத்திக்
கொண்டு மாய்வதும் அச்சம் தரும் செயலே. அச்செயலும்
ஆஞ்சிக்
காஞ்சியே ஆகும்.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    தன்னுடைய தலைவனின் உயிரைப் போக்கின வேலினாலே
அவனுடைய மனைவி தன் இனிய உயிரைப் போக்கிக் கொள்வதும்
முன் கூறப்பட்ட ஆஞ்சிக் காஞ்சி என்னும் துறையே ஆகும்.

     மன்உயிர் நீத்த வேலின் மனையோள்
    இன்னுயிர் நீப்பினும் அத்துறை ஆகும்.


எடுத்துக்காட்டு வெண்பா

    கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
    வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் - அவ்வேலே
    அம்பின் பிறழும் தடங்கண் அவன்காதல்
    கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று.

எடுத்துக்காட்டு வெண்பாவின் பொருள்

    வெற்றியை விரும்பும் காஞ்சி மறவன் ஒருவன் பகைவரது வேலினால்
வீழ்ந்துபட்டான். அவன் இறப்பதற்குக் காரணமாய் அமைந்த அவ்வேலே,
அவனுடைய காதல் மனைவி மாய்வதற்கும் எமனாய் அமைந்தது.
ஆதலால், கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்தில் கற்புடைமை
என்னும் அறமும் கொடியதாகவே தோன்றுகின்றது.

துறையமைதி

    வலோல் வீரன் வீழ்ந்தான் ; அவ்வேலே, அவன்காதல்
மனைவிக்கும் கூற்று ஆயிற்று என்பதில் துறைப் பொருள்
பொருந்துவதைத் தெளியலாம்.

5.5.4 மகட்பால் காஞ்சி

    மகள் பக்கமாக (காரணமாக) எழும் முரண் ஆதலின்,
மகட்பா காஞ்சி எனப் பெயர் பெற்றது. வென்ற மன்னன்
வலிந்து வந்து மகளைக் கேட்கும் போது காஞ்சிமன்னன்
அஞ்சுவதாகும்.
     (மகள்+ பால் + காஞ்சி = மகட்பாகாஞ்சி. பால் = பக்கம் )

  • கொளுப் பொருளும் கொளுவும்

    அணிகலன்களை உடைய நின்மகளை எனக்குத் தருக
என்னும் வஞ்சி வேந்தனோடு காஞ்சி மன்னன் மாறுபடுவது
மகட்பாகாஞ்சி யாம்.

    ஏந்திழையாள் தருக என்னும்
    வேந்தனொடு வேறுநின்றன்று.

வரலாறு (வெண்பா யாப்பில்)

    அளிய கழல்வேந்தர் அம்மா அரிவை
    எளியள்என்று எள்ளி உரைப்பின் - குளியாவோ
    பண்போல் கிளவிஇப் பல்வளையாள் வாள்முகத்த
    கண்போல் பகழி கடிது.


எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    காஞ்சி மன்னனின் மகளை எளிதாக அடையலாம் என
எண்ணிப் பகை வேந்தர் உரைப்பாராயின், அவர் மார்பில்,
அவளது கண்போலும் அம்பு பாய்வதும் உறுதி என்பதாம்.

துறையமைதி

    கண்டோர் கூறிய இக்கூற்றில் ‘ஏந்திழையாள் தருக என்னும்
வேந்தனொடு’ பகைமன்னன் ‘வேறு நிற்பது’ விளங்கித் தோன்றலின்
துறைப்பொருள் பொருந்துவதாகின்றது.

5.5.5 முனைகடி முன்னிருப்பு

    முன்னம் படையிறங்கியிருந்த இடத்தினின்றும் மாற்றரசர்களை
விரட்டியதைக் கூறுவதால் முனைகடி முன் இருப்பு எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    வஞ்சி வேந்தனை மட்டும் அன்றி அவனுக்குத் துணையாக
வந்த அரசர் எல்லாரையும் வென்று, அவர்கள் முன்பு
தங்கியிருந்த போர் முனையினின்றும் ஓடும்படியாகக் காஞ்சி
மன்னன் துரத்தியது முனைகடி முன்னிருப்பு ஆகும்.

    மன்னர்யாரையும் மறம்காற்றி
    முன்இருந்த முனை கடிந்தன்று.

(மறம = வீரம்; காற்றி = அழித்து; முனை = போர்க்களம்;
கடிதல
= விரட்டியடித்தல்)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    காஞ்சி மன்னன் தான்மேற்கொண்ட எதிரூன்றல் போரில்,
வஞ்சி வேந்தனையும் அவனுக்குத் துணையென வந்த பிற
அரசரையும், அவர்கள் தங்கியிருந்த இடத்தினின்றும் துரத்தினான்.

துறையமைதி

    காஞ்சி வேந்தனின் செயற்பாடுகள், வஞ்சி வேந்தன், அவன்
துணைவேந்தர்     ஆகியோர்தம் மறத்தை அழித்ததையும்,
அவர்களைப் போர்முனையிலிருந்து விரட்டியதையும் கூறுவதால்
துறைப்பொருளைப் பெறுகின்றோம்.