6.3 உழிஞைப்
படலம் உழிஞைத்
திணையின் இலக்கணத்தை இயம்பும் உட்பிரிவு
உழிஞைப் படலம் என்பதாம். உழிஞை என்பது குறியீடு.
உழிஞை
என்பது ஒருவகைக் கொடி. இது முடக்கொற்றான்
என்று இன்று வழங்கப் பெறும் மூலிகைக் கொடியே ஆகும்.
மாற்றரசனின் மதிலை முற்றுகை
இடுவோர், முன்னாளில்
குடிப்பூவுடன் உழிஞை என்னும் இக்கொடிப் பூவையும் அடையாளப்
பூவாகச் சூடிக் கொண்டு போரிடுவார்கள். ஆதலால், முற்றுகைப்
போராகிய ஒழுக்கத்தை உழிஞை என
நம் இலக்கண ஆசிரியர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
‘எயில்
காத்தல் நொச்சி - அது வளைத்தல் ஆகும் உழிஞை’
என்பது பழம் நூற்பா
ஒன்றன் அடியாகும். உழிஞை,
அகத்திணைகள் ஏழனுள் ஒன்றாகிய மருதத் திணைக்குப் புறன்
என்பார் தொல்காப்பியர்.
உழிஞை தானே
மருதத்துப் புறனே - (தொல்.புறத்- 9)
உழிஞை, மருதத்தின் புறன் என்பதற்கான
காரணங்கள் பல.
அவற்றுள் ஒன்று மட்டும் நொச்சித் திணையின் முன்னுரையில்
தரப்பட்டுள்ளது. அதனை இங்கே இணைத்து நோக்குங்கள். பிற
காரணங்களை மேல் வகுப்புகளில் தெரிந்து கொள்ளலாம்.
6.3.1 உழிஞை - பெயர்க்காரணம்
இப்பாடத்தின் முன்னுரையில்
இதன் பெயர்க்காரணம்
கூறப்பட்டது.
உழிஞைத்
திணையாவது, மதிலைக் கைப்பற்றக் கருதிய
உழிஞை மன்னன், தன் தலையில் உழிஞை மாலையை அணிந்து
மாற்றானது எயிலைச் சூழ்ந்து கொண்டு, அதனைக் கைப்பற்றச்
செயல்படும் திறங்களைக் கூறுவது ஆகும்.
முடிமிசை உழிஞை சூடி, ஒன்னார்
கொடிநுடங்கு ஆர்எயில் கொளக்கரு தின்று
எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
எங்கள் அரசன் மாற்றார் மதிலைக் கைப்பற்றக் கருதி,
உழிஞையைப் புனைந்து, பகைமன்னரின் சிறந்த மதிலை, களிறுகள்
மோதிப் பாய, சான்றோரும், மகிழ்வோடு புகழ்ந்துரைக்கின்ற
கீர்த்தி உடையவனாவான்.
திணையமைதி
இவ்வெண்பாவில், உழிஞை மன்னன் முற்றுகைக்கான
பூவினைச் சூடியதும், பகை மன்னனது மதிலை யானைகளை ஏவிக்
குத்தியதும், அதனால் அரணை வெல்வது உறுதியென நினைந்த
சான்றோர் புகழ்ச்சிக்கு உரியவன் ஆனதும்
கூறப்படுவதால்
திணைப் பொருள் பொருத்தம் விளங்குகின்றது.
6.3.2 உழிஞைத் திணையும் அதன் துறைகளும்
எயிலினை முற்றுகையிடுவோரது செயல் திறங்களை
(ஒழுக்கத்தை)க் கூறுவது உழிஞைத் திணை
யாகும். திணை -
ஒழுக்கம். பகைவருடைய மதிலைக் கைப்பற்றக் கருதிய மன்னரும்
மறவரும் உழிஞைப் பூ அல்லது மாலையைச் சூடிக் கொண்டு
அரணத்தை வளைப்பர். இதனை முற்றுகைப் போர்
எனச்
சுருங்கச் சொல்லலாம்.
உழிஞை, குடைநாட் கோள், வாள்நாட் கோள், முரச
வுழிஞை, கொற்ற வுழிஞை, அரச வுழிஞை, கந்தழி, முற்றுழிஞை,
காந்தள், புறத்திறை, ஆரெயில் உழிஞை,தோலுழிஞை, குற்றுழிஞை,
புறத்துழிஞை, பாசி நிலை, ஏணி நிலை, எயிற் பாசி, முதுவுழிஞை,
அகத்துழிஞை, முற்று முதிர்வு, யானை கைக்கோள், வேற்றுப் படை
வரவு, உழுது வித்திடுதல், வாள் மண்ணுநிலை, மண்ணுமங்கலம்,
மகட்பால் இகல், திைற
கொண்டு பெயர்தல், அடிப்பட இருத்தல்,
தொகைநிலை எனச் சொல்லப்பட்ட இவ்விருபத்தொன்பதும்
உழிஞைத் திணையும்
துறைகளும் ஆகும் என்பதாம்.
இவற்றுள் முதலாவது கூறப்பட்ட உழிஞை என்பது
திணையைக் குறிக்கும். ஏனைய இருபத்தெட்டும் உழிஞைத்
திணையின் துறைகளைக் குறிக்கும். உழிஞைத் திணையின்
இலக்கணத்தை மேலே கண்டோம். இனி, உழிஞைத் திணையின்
துறைகள் பற்றிய இலக்கணங்களை
ஆசிரியர் ஐயனாரிதனார்
வழியே காண்போம்.
|