6.5 போர் நிகழ்வுகள்

     போருக்கென்று புறப்பட்ட உழிஞை மறவர்கள் பகைவரின்
காவற்காட்டை     அடைதல்     முதலிய     செயல்களை
மேற்கொள்கிறார்கள். அச்செயல்களைப் பற்றிய துறைகள் அடுத்து
வருகின்றன.

6.5.1 புறத்திறை

    வெட்சியில் வந்த புறத்திை ஆநிரைகள் இருக்கும்
காவற்காட்டின் புறத்தே தங்கியதைச் சொல்வது, உழிஞையில் வரும் இப்புறத்திறை மதிலின் புறத்தே தங்குவது ஆகும்.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    உழிஞையார் முற்றுகைப் போர்க்கான நெறிமுறைகளில்
துறைபோனவர்கள். அவர்கள் பெருமளவில் தம்முள் கூடி,
பகைவரின் மதில் புறத்தே தங்கினார்கள். அவர்கள் தங்கின
செய்தியைக் கூறுவது புறத்திறை என்னும் பெயர் தாங்கிய
துறையாம்.

    மறத்துறை மலிந்து மண்டி மற்றோர்
    விறல்கொடி மதிலின் புறத்திறுத் தன்று.


(மறம்
= வீரம்; மண்டி = நிறைந்த; விறல் = வெற்றி)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    உழிஞை வேந்தன், பகைவர்க்குப் புகலிடமும், ஓடிப்
போவதற்கான வழியும் இல்லாதபடி செய்ய நினைத்து, தன்
பகைவரது மதிலின் புறத்தே, படையைப் பரவச் செய்து
தங்கினான்.

துறையமைதி

    உழிஞை வேந்தன், பகை மன்னர் அழியும்படியாகவும், பிற
மன்னர் கலங்கும்படியாகவும் மதிலின் புறத்தே, தனது படையைப்
பரப்பித் தங்கியதைக் கூறுவது துறைப் பொருளை விளக்குவதாக
அமைகின்றது.

6.5.2 ஆரெயில் உழிஞை

    மறைந்து நின்று அம்புகளைச் செலுத்துவதற்கான ஏவறை
(ஏ=அம்பு) போன்ற அமைப்புகளைப் பெற்றுள்ள எயிலின்
வலிமையைச் சொல்லுவதால் ஆரெயில் உழிஞை என்னும் பெயர்
பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    தம்மை வணங்காத நொச்சியாரின் நீண்ட மதிலின்
திண்மையை உழிஞையார் விதந்து (சிறப்பித்து) உரைப்பது
ஆரெயில் உழிஞை
எனப்படும்.

    வாஅள்மறவர் வணங்காதார்
    நீஇள்மதிலின் நிலைஉரைத்தன்று


எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    நொச்சி வேந்தனின் மதில் ஏவறை முதலிய வஞ்சனையான
அமைப்புகளை உடையது. இவர்கள் மதிலை, நம் உழிஞை
மறவர்கள் கண்களில் தீப்பறக்கச் சினந்து, எயிலிடத்துள்ள
நொச்சியார் மாயும் வண்ணம் போரினைச் செய்தாலும், நாம்
வெற்றி காண்பது அரிதாகும் என்கின்றனர் உழிஞையாரின்
ஒற்றர்கள்.

துறையமைதி

    பொருதாலும்     மதிலைக் கைப்பற்றல் இயலாதென
உழிஞையாரின் ஒற்றர் ‘வணங்காதார் நீஇள் மதிலின் நிலை’
உரைப்பதால் துறைப்பொருள் பொருந்துவதைக் காண்க.

6.5.3 தோல் உழிஞை

    தோல் - கிடுகுப் படை(கேடயம்). இஃது     ஆகுபெயராய்
வீரரை உணர்த்துகின்றது. தோலினை உடையாரின் திறை
மொழிதலின் தோல் உழிஞை எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    வெற்றியையும் புகழையும் விளைவிக்கும் என்று சொல்லும்படி
பண்டுதொட்டு வந்த கிடுகுப் படையைப் பாராட்டுவது தோல்
உழிஞை
என்னும் துறையாம்.

    வென்றி யோடு புகழ்விளைக் கும்எனத்
    தொன்று வந்த தோல்மிகுத் தன்று.

(வென்றி
= வெற்றி; தோல = கிடுகுப்படை)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    ‘நம் உழிஞை வேந்தன், பகைவரை வென்று விளங்கும்
நம்முடைய கிடுகுப்படை, பணியாத பகைவரின் அரணைக்
கைப்பற்ற வேண்டுமெனக் கருதின், அவ்வாறு கைப்பற்றுதல்
எளியதாம் என்று சொன்னான். ஆதலால், கிடுகுப் படையைச்
சேர்ந்த நாம் இதுவரை வந்த புகழ் ஒழியும்படியாகவும், நில்லா
உயிரைக் காக்கும்படியாகவும் இன்று போரிடாமல் சோம்பலுடன்
தங்கியிருந்தால், அஃது, இழிந்த செயலாகிப் போகும்’ என்கின்றான்
கிடுகுப் படைத் தலைவன்.

துறையமைதி

    ‘தோல்படையானது, பகைவரது மதிலைக் கைப்பற்றக் கருதின்,
அஃது எளிதாகும் என்றான் உழிஞை வேந்தன்’, என்றதால் கிடுகுப்
படையினது ஆற்றல் மன்னனால் கூறப்பட்டமை வெளிப்பட்டுத்
தொன்றுதொட்டு வந்த தோலின் சிறப்பைக் கூறுவது என்னும்
துறைப் பொருள் நிரம்புவது காண்க.

6.5.4 குற்றுழிஞை

    நொச்சியாது மதிலைக் குறுகி உழிஞையார் பொருவது
குற்றுழிஞை
எனப் பெற்றது. இதனை, ஐயனாரிதனார்,

(அ) மதில் மேல் குறுகி, ஒருதானாகி மலைதல். (தான்
ஒருவனேயாக உழிஞை மறவன் போரிடுதல்) (குறுகி =
அடைந்து)
(ஆ) மிளையைக் கடந்து மலைதல் (மிளை = காவற்காடு)
(இ) ஆடலொடு அரணைக் குறுகல் (வீரர் ஆடிப்பாடி
அரணை (நெருங்குதல்)

என மூன்று வகைப்படுத்தி மொழிகின்றார். இம்மூவகை பற்றி அவர்
கூறுவனவற்றை விளக்கமாகக் காண்போம்

  • ஒரு தானாகி மலைதல் (குற்றுழிஞை)    

மதிலை் குறுகிச் சென்று மலைதலின் இது குற்றுழி்ஞை எனப்பட்டது.

  • கொளுப் பொருளும் கொளுவும்.

    பகைவரது அழிவற்ற அரண் ஒன்றின்மேல், தான்
ஒருவனுமே ஆக நின்று உழிஞை மறவன் ஒருவன் தன் வீரத்தை
வெளிப்படுத்திப் போரிடுவது குற்றுழிஞை எனப்படும்.

    கருதாதார் மதில்குமரிமேல்
    ஒருதானாகி இகல்மிகுத்தன்று

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    உழிஞை வேந்தன் நொச்சியாரின் அரணை வென்று
கைப்பற்றக் கருதினான். எயிலின் புறத்தே காத்து நின்ற
நொச்சியாரை வென்று அரணின் வாயிலை அடைந்தான்.
அடைந்ததும் அவன் களிறுகளும், தமது கொம்புகளால் வாயில்
கதவுகளும் உடையும்படி குத்திப் பாய்ந்தன.

துறையமைதி

    உழிஞை வேந்தன் அரணத்தைக் கைப்பற்றிய அளவில்
களிறுகள் வாயிற் கதவுகள் இறும்படியாகப் பாய்ந்து குத்தின.
இதில் மதிற்போரைச் சிறப்பித்தது ஆகிய துறைப்பொருள்
பயில்வது காணலாம்.

  • இதுவும் அது (குற்றுழிஞை)-மிளையைக் கடந்து மலைதல

    மிளை - இளை = காவற்காடு, காவற்காட்டைக் கடந்து
குறுகிச் சென்று மலைதலின் குற்றுழிஞை எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    வீரச்சங்கம் முழங்க ஊதுகொம்பு ஆரவாரிக்க உழிஞை
மறவர்கள் நொச்சியாரின் கடத்தற்கரிய காவல்காட்டினைக் கடந்து
எயிலுக்குள் புகுவதும் குற்றுழிஞை என்னும் துறையாம்.

     வளைஞரல வயிர்ஆர்ப்ப
    மிளைகடத்தலும் அத்துறையாகும்.

(வளை = சங்கு; வயிர= ஊதுகொம்பு)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    உழிஞை மறவருடைய வாள்கள், கடத்தற்கரிய காவற்காட்டில்
நின்று போர் புரியும் நொச்சி மறவர் முதுகிடும்படி போரை
வென்று, நொச்சி மறவருடைய மலை போன்ற மார்பிடத்தே
தங்கின.

துறையமைதி

    உழிஞை மறவர் வாள்கள், நொச்சி மறவருடைய
மார்பின்கண் தங்கின என்றதனில் மிளை கடத்தல் என்னும் செய்தி
வருதலின் இத்துறை பொருந்துவதாகின்றது.

  • இதுவுமது (குற்றுழிஞை) -ஆடலொடு அரணைக் குறுகல் - ªðòó¢è¢è£óíñ¢

அரணினை ஆடலொடு குறுகினமை கருதிக் குற்றுழிஞை ஆயிற்று.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    ஆடலொடு குறுகுதல் வழியமைந்த குற்றுழிஞையாவது,
பெருமையினை உடைய கிடுகுப் படையைக் கொண்ட உழிஞை
மறவர்கள் மறக்களிப்பால் கூத்தாடியபடி அரணினைக் குறுகுவது
ஆகும்.

    பாடருந்தோல் படைமறவர்
    ஆடலொடுஅடையினும் அத்துறையாகும்.


எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    மிக்க வெற்றியை உடையவன் உழிஞை மன்னன்.
இவனுடைய     மறவர்களும்     வெற்றியாளரே. இவர்கள்
கிடுகுப்படையைத் தம் கரங்களில் ஏந்தி மறக்களிப்பால் ஆடத்
தொடங்கினார்கள்; ஆடியபடியே பெரிய மதிலின் உச்சியை
விரைந்து சேர்ந்தார்கள். அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த
காட்சி மலையின் உச்சியை அடைந்த பறவைக் கூட்டம் போன்று
இருந்தது.

துறையமைதி

    கிடுகுப் படையை ஏந்திய உழிஞை மறவர்கள், ஆடலுடன்
தொடர்ந்து மதிலின் உச்சியைக் குறுகியதைக் கூறுவதில்
இத்துறையமைதியைக் காணலாம்.