6.7 அரணுக்குள் நிகழ்வுகள்

    அரணை அடைந்த உழிஞையார் அதன்மீது ஏறி உள்ளே
குதிக்கிறார்கள். அந்த நிகழ்வுகளை இப்போது காணலாம்.

6.7.1 முதுஉழிஞை (அரணுள் புகுதல்)

    அரணினை முற்றுதல் என்பது அதனுள் குதித்தலில்
முதிர்கின்றது     (முழுமையுறுகின்றது). ஆதலான், அரணுள்
குதித்தலில் முதிர்வதனை முதுவுழிஞை என்றனர் போலும்.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    மூங்கில்கள் தம்முள் பின்னிப் பிணைந்த (மயங்கிய)
காவற்காட்டை உடையது நொச்சியாரின் அரண். இவ்வரணின்
உள்ளே, உழிஞை மறவர், இரையைக் கண்டபோது விரைந்து பாயும்
பறவையைப் போன்று பரவிக் குதித்தனர். குதித்தமையைக் கூறுவது,
முதுவுழிஞை என்னும் துறையாம்.

    வேய்பிணங்கிய மிளைஅரணம்
    பாய்புள்ளின் பரந்துஇழிந்தன்று.

(வேய்
= மூங்கில் ; புள = பறவை; இழிதல் = இறங்குதல்,
குதித்தல்)

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    உயர்ந்த மலை உச்சியின்மேல் இருந்து கொண்டு தமக்கு
வேண்டிய இரையைத் தரையில் பார்த்து அவ் இரையைக் கவர
எண்ணும் பறவைகள் தொகுதி பாய்ந்து குதிப்பதைப் போலப்
பகைவராகிய நொச்சியாரது மன எழுச்சி கெட்டு அழியும்படி
அவர்களது அரணுக்குள்ளே திரண்ட தோளினையுடைய உழிஞை
மறவர்கள் ஆர்ப்பரித்துப் பாய்ந்தனர்.

துறையமைதி

    உழிஞை மறவர் ஏணி ஊர்ந்து மதிலின் உச்சியை அடைந்து,
அங்கிருந்து மதிலின் உள்ளே குதித்தனர் என்பது பறவைகள்
உவமை வழியே பேசப்படுகின்றது. இது பாய்ந்து இறங்கியது போல
என்று நோக்கத் துறைக் கருத்து பொருந்துவது வெளிப்படை.

  • இதுவும்அது - முதுஉழிஞை (அகத்து இகல் புகழ்வு)

    ‘அரணகத்துள்ளாரின் போரைப் புகழ்வதும்’ முதுவுழிஞைத்
துறை ஆகும். இதனால், அப்புகழ் பெற்ற வீரரை வென்றார்
உழிஞையார் என்ற குறிப்புத் தோன்றுவதால் இதுவும்
முதுவுழிஞை
யாம்.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    அரணகத்துள்ளே     போர் செய்வதற்கு உரியவரான
நொச்சியாரது வீரத்தைச் சிறப்பித்துப் பேசுவதும், உழிஞையாரது
வெல்லுதற்கரிய எதிர்ப்பைச்     சொல்வதாக அமைதலால்
முதுவுழிஞைத் துறையாகின்றது.

    செருமதிலோர் சிறப்புரைத்தலும்
    அருமுரணான் அத்துறையாகும்.

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    ஏவறைகள் நிரம்ப உடையது நொச்சியாரது மதில்.
இதனுள்ளே இருக்கின்ற அவர்கள், தம்முடைய மகளிரிடம்
பொருந்திய வேட்கையால் மயங்கியுள்ளார்கள். மயக்கத்தில்
இருக்கின்ற அவர்கள், நம் உழிஞை மறவர்கள் மதிலினுள்
இறங்கிய பின்னரும், மதிலைக் கொள்ள வரும் நம் வரவை
அறியாதவராய் இருக்கின்றார்கள்.

துறையமைதி

    உழிஞையார் மதிலினுள்ளே குதித்த பின்பும் நொச்சி மறவர்,
மகளிர் வேட்கையினின்றும் நீங்காமல், மேல்வருவதனை
அறியாதவராய் உள்ளனர் என்னும் பேச்சில், ‘செருமதிலோர்
சிறப்பு’     உரைக்கப் பெறுவதால் துறைப் பொருத்தம்
வெளிப்படுகின்றது.

6.7.2 அகத்துழிஞை


    அரணகத்துள்ள பகைவரை எயில் முற்றிய உழிஞையார்
வெல்வது அகத்துழிஞை எனப் பெறுகின்றது. அகம் என்பது
ஆகுபெயராய் அகத்துள்ளோரைக் குறிக்கின்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    சினம் மிக்க உழிஞையார் மதிலின் அகத்தே இருந்த
நொச்சியாரைப் போரில் வென்றதை விளம்புவது அகத்துழிஞை
என்னும் துறையாம்.

    முரண்அவியச் சினம்சிறந்தோர்
    அரண்அகத்தோரை அமர்வென்றன்று.


எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து


    சினத்தால் சிவந்த கண்ணை உடைய உழிஞை மறவர். தம்
வாளை, அரணின் உள்ளே உள்ள நொச்சி மறவர் உடல்களில்
உலாவச் செய்கின்றனர். நொச்சி மறவர்கள், தங்கள் உரிமை
மகளிர் அலறும் வண்ணம் மாய்ந்தார்கள். இவ்வாறாக, எயிலின்
உள்ளே இருந்தவர்களைப் போரில் வென்றனர் உழிஞையர்.

துறையமைதி

    திங்களன்ன முகத்தார், தங்கள் மறவர்கள் உழிஞையாரால்
வெட்டுண்டு மாய்வதைக் கண்டு அலறும்படியாக அமரினை
வென்றனர் உழிஞையர் என்பதில், ‘அரணகத்தோரை அமரில்
வென்றது’ இடம் பெறுதலால் துறைப் பொருள் நிரம்புவது
வெளிப்படையாகத் தெரிகிறது.

6.7.3 முற்று முதிர்வு

    முற்றுவோரின் சினம் முதிர்வதை (மிகுதியாவதை)
மொழிதலின் முற்றுமுதிர்வு எனப் பெற்றது போலும்.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    மதிலின் அகத்தே இருக்கும் நொச்சி மன்னனின் முரசம்
வழக்கம்போலக் காலை நேரத்தில் முழங்க, அதனைக் கேட்ட
மதிலின் புறத்தே இருந்த உழிஞையான் கொண்ட சினத்தின்
மிகுதியைச் சொல்வது முற்று முதிர்வு என்னும் துறையாகும்.

    அகத்தோன் காலை அதிர்முரசு இயம்பப்
    புறத்தோன் வெம்சினப் பொலிவு உரைத்தன்று.

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து

    நொச்சி மன்னனின் மதிலகத்தே நாளும் காலைப் போதில்
முழக்கப்படும் முரசம் இயல்பாக ஒலித்தது. அதைக் கேட்ட,
உழிஞை மன்னன் கண்கள் கோபக் கனலுடன் நோக்கின.
நோக்கிய அளவில், உழிஞை மறவர்கள், இன்று மாலைக்குள்
இம்மதிலின் உள்ளே சோறு சமைப்போம் என்று சொல்லிச்
சமைப்பதற்கான அகப்பை, துடுப்பு ஆகியவற்றை மதிலின்
உள்ளே வீசினர்.

துறையமைதி

    ‘காலை முரசியம்பக் கண் கனன்றான் விறல் வெய்யோன்’
என்பது, முரசு இயம்பப் புறத்தே நின்ற மன்னன் வெஞ்சினம்
மிகுந்தது வெளிப்படுத்துகின்றது. ‘மாலை அடுகம் அடிசில்’ என்ற
கூற்றும் உழிஞையாரின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றது.
‘மூழையும் துடுப்பும் மதிலகத்து இட்டமை’, சினத்தின் மிகுதியையும்,
வெல்வதற்குச் சிறுபொழுதே போதும் என்பதையும் சாற்றுகின்றது.
இவற்றால் துறையமைதி விளங்குகிறது.

6.7.4 யானை கைக்கோள்

    பகைவரது யானையைக் கவர்ந்த செய்தியை மொழிவதால்,
யானை கைக்கோள் எனப் பெற்றது. யானை கைகோளஎன்று
கொண்டால், யானையைக் கவர்ந்த ஒழுக்கம் எனப் பொருள்
கொள்ள வேண்டும்.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    தங்களோடு பகைமை கொண்ட நொச்சியாரது மதில் அழியும்
வண்ணம் அவர்களுடைய களிற்றையும் காவலையும் வென்று
கைப்பற்றியதைச் சொல்வது யானை கைக்கோள் என்னும்
துறையாகும்.

     மாறு கொண்டார் மதிலழிய
    ஏறும் தோட்டியும் எறிந்து கொண்டன்று.


எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து


    உழிஞை வேந்தன் தன்னை நொச்சியார் பணிந்து ஏத்தும்
படியாக, அரணினைப் போரில் வென்று அழித்தான். அழித்தவன்
காவலையும் யானைகளையும் கைக்கொண்டான்.

துறையமைதி

    உழிஞை வேந்தன் நொச்சியார் அரணை அழித்து
அவர்களுடைய காவலும் யானையும் கைப்பற்றினான் என்பதில்
‘ஏறும் தோட்டியும் எறிந்து கொண்ட’ கொளுச் செய்தி பயின்று
யானை கைக்கோள
துறையாதல் காண்க.

6.7.5 வேற்றுப்படை வரவு

    நொச்சியானுக்குத் துணைப் படையாக வேற்று வேந்தனின்
படை வந்தமையைச் சொல்லும் துறையாதலின் வேற்றுப்படை
வரவு
எனும் பெயர் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    உழிஞை     வேந்தன், தனது முற்றுகையை விட்டு
அகல்வதற்காக, நொச்சி மன்னனுக்குத் துணையாய் வேற்று
வேந்தன் வந்ததை உரைத்தது வேற்றுப்படை வரவு என்னும்
துறை.

    மொய்திகழ் வேலோன் முற்றுவிட்டு அகலப்
    பெய்தார் மார்பின் பிறன்வரவு உரைத்தன்று.

எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து


    ‘துணைப் படையாய் வந்து உதவுவதற்கு உரியவன் வன்
ஒருவேன’ என்று உலகவர் ஏத்தும் பெருமையுடையவன் இவ்வேற்று
வேந்தன். இவனை அல்லாமல், இந்த நொச்சி மன்னன் மதிலை
இந்நாளில் முற்றிய உழிஞை மறவர்கள் தம் முற்றுகையைக்
கைவிடும்படி செய்வார் வேறு யார் இருக்கின்றார்கள்? ஒருவரும்
இலர் என்று வேற்று வேந்தனின் வருகையைப் புகழ்கின்றனர்
அயலார்கள்.

துறையமைதி

    இவ்வேற்று வேந்தனை விட்டால், நொச்சி மன்னனின்
துயரத்தை ஒழிப்பார் வேறு எவரும் இலர்; அவனது படைவரவு
உழிஞையாரின் முற்றுகையைக் கைவிடப் பண்ணும் என்பதாக
அமைந்து துறைப் பொருளை விளக்குகின்றது.