4.3 பாடல் தொடர்புடையவை |
பாடல் தொடர்புடையன, பயன்,
முன்னம், மெய்ப்பாடு, எச்சம்,
பொருள்வகை, துறை என்பனவாகும். |
4.3.1 பயன்
|
இது அகப்பாட்டு உறுப்புகளில் ஏழாவதாக இடம்பெறுவது. ஒவ்வொரு
பாடலுக்கும் அதனால் விளையும் பயன் என்பது உண்டு. அவ்வாறே
அகப்பொருள் பாடல்களின் வழி அடையும் பயன்பாட்டை விளக்குவதாக
இவ்வுறுப்பு அமைகிறது. அகப்பாடல்களில் ஒருவர்
கூற்று நிகழ்த்த,
அதன் பயனாய் அவர் அடைவது யாது என
விளக்குவதே பயன்
என்னும் உறுப்பாகும்.
|
கூறாய் தோழி யான் வாழுமாறே |
என்று
தலைவி தோழியைப் பார்த்துக்
கேட்கும்போது, தனது
நல்வாழ்வாகிய
இல்வாழ்விற்கு வழிவகை காணுமாறு
தோழியை
வேண்டுவதும், அதுகேட்ட தோழி,
தலைவனை வலியுறுத்திக் கற்பு
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதும்
பின்னர் நிகழும்; இதுவே
இப்பாடலின் பயனாகும். |
4.3.2 முன்னம்
|
இது
அகப்பாட்டு உறுப்புகளில் எட்டாவதாக
இடம் பெறுவது.
முன்னம் என்னும் சொல்லுக்குக்
குறிப்பு என்று பொருள். ஓர்
அகப்பாடல் வெளிப்படையாக உணர்த்தி
நிற்கும் பொருள் உண்டு.
அதற்கும் மலோகப் பாடலின் பொருளைக் கொண்டே அப்பாடல் யார்
கூறியது? அதன் உட்பொருள் என்ன? முதலான செய்திகளை எல்லாம்
உணரமுடியும். அவ்வாறு உணர்வதை முன்னம் என்பர்.
|
என்
அழகை அவர் எடுத்துக்கொண்டு,
பசலை நோயை
எனக்குத் தந்தார் |
என்ற பொருளில்
ஓர் அகப்பாடல் அமைகிறது.
இதன் பொருளை உற்றுநோக்கும்போது
பசலை நோய் அடைதல் பெண்டிர்க்குரியது
என்னும் குறிப்பின்
வழி இது தலைவி கூற்று என்பதை
உணர்கிறோம்.
இதுவே ‘முன்னம்’
எனப்படும். |
4.3.3 மெய்ப்பாடு
|
இது
அகப்பாட்டு உறுப்புகளில் ஒன்பதாவதாக
இடம் பெறுவது. மெய்ப்பாடு என்னும்
சொல்லுக்குப் பொருட்பாடு,
வெளிப்பாடு, புலப்பாடு எனப் பல விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
மெய் என்பது
உடலைக் குறிக்கும். |
உள்ளத்து
உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்பாக உடலில்
புலப்படுவது உண்டு.
பேச்சே இல்லாமல் உடல் மொழியில்
மட்டுமே
கருத்துகளை உணர்த்தமுடியும். இதையே
மெய்ப்பாடு
என்று வகுத்தனர்.
|
இம்
மெய்ப்பாடு நகை, அழுகை, இளிவரல்
(இழிவு), மருட்கை
(வியப்பு), அச்சம், பெருமிதம் (வீரம்), உவகை, வெகுளி
(கோபம்) என்று
எட்டு வகைப்படும். இவ் எட்டு உணர்ச்சிகளையும்
உடல் வழியாகவே
உணர்த்துதல் மெய்ப்பாடு ஆகிறது. இம் மெய்ப்பாடு
அகப்பாடல்களில்
கூற்று நிகழ்த்தும் தலைமக்களுக்குப் பெரிதும்
பயன்தருவது. |
4.3.4 எச்சம்
|
இது அகப்பாட்டு உறுப்புகளில்
பத்தாவது இடம் பெறுவது. எச்சம்
என்னும் சொல்லுக்கு ‘எஞ்சி நிற்பது’ என்று
பொருள். அகப்பாடலில் -
ஒன்றைச் சொல்ல, அதன் வழி சொல்லாமல்
விட்ட பிறிதொன்றையும்
உணர்வது எச்சம் எனப்படும்.
|
எச்சம் இருவகைப்படும். |
சொல் எச்சம்
|
ஒரு சொல்
அல்லது தொடர் குறைந்து நின்று அவற்றை வருவித்துப்
பொருள் முழுமை பெறுவது சொல் எச்சம் எனப்படும்.
|
குறிப்பு எச்சம்
|
சொல்
விடுபடுதலின்றி ஒரு கருத்து விடுபட்டு
நின்று அதனைக்
குறிப்பாக உணர்ந்து கொள்வது குறிப்பெச்சம்
எனப்படும்.
|
உதாரணமும், விளக்கமும் |
கழல் தொடிச் சேஎய் குன்றம் |
குருதிப் பூவின்
குலைக்காந் தட்டே
(குறுந்தொகை, 1) |
என்னும்
பாடல் முருகனுக்குரிய மலையாகிய குறிஞ்சி
நிலத்தைப்
பற்றியது. மலையில்
சிவந்த நிறமுடைய காந்தள் பூக்கள்
நிறைய
உள்ளன
என்னும் பொருள் தருவதாக மேற்கண்ட
பாடல் பகுதி
அமைந்துள்ளது.
|
இதனைத்
தோழி தலைவனிடம் சொன்னதாக வைத்துக்கொண்டு
பொருள் காண்பது ஒரு வகை. அப்போது,
‘எங்கள் மலையிலேயே
காந்தள் மலர்கள் கிடைக்கும்’ என்று கூறி, நின் பரிசாக அதே காந்தள்
மலரை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று
கூறாமல் விடுவதாகும். இது
சொல் எச்சம் ஆகும்.
|
இதனைத்
தோழி தலைவியிடம் சொன்னதாக
வைத்துக்கொண்டு
பொருள் காண்பது மற்றொரு வகை. அப்போது, ‘நான்
செங்காந்தள்
மலர்களைக் கொய்து வரும் வரை
இங்கேயே இரு’ என்று தோழி
தலைவியிடம் கூறுவதாக அமையும். அதன்படி
தலைவி காத்திருக்கும்
போது அங்குத் தலைவன்
வர, அவனுடன் கூடி மகிழ்வாள் என்று
குறிப்புக் காட்டுவது குறிப்பெச்சம் ஆகும். |
4.3.5 பொருள் வகை
|
இது
அகப்பாட்டு உறுப்புகளில் பதினொன்றாவதாக
இடம் பெறுவது,
பொருள்
வகை என்பதைப் பாடலில் பொருள் உணர்ந்து கொள்ளும்
முறை
என்று அமைத்துக் கொள்ளலாம். இதனைப்
பொருள்கோள்
என்றும் வழங்குவர்.
|
ஒரு
பாடலில் அமைந்த சொற்கள் எவற்றையும் மாற்றாமல்
உள்ளது
உள்ளவாறே
வைத்துப் பொருள் கொள்ளமுடியும். அவ்வாறன்றிச் சில
சொற்களை முன்பின்னாக மாற்றி அமைத்தும்
பொருள் கொள்வர்.
அப்போதே பாடலின் பொருள்
முறையாகவும் முழுமையாகவும்
அமையும்.
|
அவ்வாறு
அமையும் பொருள்கோள்களை
ஒன்பதாக
வகைப்படுத்துவர். அவையாவன: |
*
புனல் யாற்றுப் பொருள் கோள். |
*
நிரல் நிறை மொழி மாற்றுப் பொருள்கோள். |
*
சுண்ண மொழிமாற்றுப் பொருள்கோள். |
*
அடிமறி மொழிமாற்றுப் பொருள்கோள். |
*
அடிமொழி மாற்றுப் பொருள்கோள். |
*
பூட்டுவில் பொருள்கோள். |
*
தாப்பிசைப் பொருள்கோள். |
*
அளைமறிப் பாப்புப் பொருள்கோள். |
*
கொண்டுகூட்டுப் பொருள்கோள்.
|
குறிப்பு : |
இப்பொருள்கோள்களைப்
பற்றிய வரையறைகளையும் விளக்கங்களையும்
இலக்கணப்பாடங்களான நன்னூல், யாப்பருங்கலக்
காரிகை என்னும்
இரண்டிலும் சிற்சில வேறுபாடுகளுடன் படித்தறியலாம். |
4.3.6 துறை
|
இது அகப்பாட்டு உறுப்புகளில்
பன்னிரண்டாவதாக இடம்பெறுவது,
ஓர் அகப்பாடல், தலைவன்- தலைவி முதலான மாந்தர்களில்
எவரேனும்
ஒருவர் பேசுவதாகவும் வேறொருவர் கேட்பதாகவும்
வரும். இதுவே
பெரும்பான்மையாக அமைவது. இவ்வாறு இல்லாமல்
உரைப்போரும்.
கேட்போரும் இன்றிப் பாடலை எழுதிய
புலவன் தானே கூறுவதாக
அமைவதையே துறை என்னும் அகப்பாட்டு உறுப்பாகக்
கருதுவர்.
|
பெருந்தகை தேறப் பெரிது
உயிர்த்து |
வறிதே முறுவல் செய்தாள் தஞ்சை வாணன் வரையணங்கே |
என்னும்
பாடல் துறை என்னும் அகப்பாட்டு உறுப்பிற்குச்
சான்றாக
அமைகிறது. |
இப்பாடலில்
தலைவனது வருத்தம் நீங்குமாறு தலைவி மெல்லியதாக
ஒரு புன் முறுவல் செய்தாள் என்று வருகிறது. இக்கருத்தைத்
தலைவன்
கூற்றாகவோ அல்லது தலைவி கூற்றாகவோ கருத முடியாது. இருவரையும்
பற்றிப் புறத்தே நின்று வேறொருவர்
(கவிஞர்) கருத்துரைப்பதாக
அமைகிறது.
|
இவ்வாறு
தொடர்புடைய அகப்பாடல் மாந்தர்
எவரும் கூற்று
நிகழ்த்தாது பாடலைப் படைத்த கவிஞனே
பேசுவதாக அமைவதை
துறை என்று குறிப்பிடுவர். |