6.2 வரையறைகள் | |||
அகப்பொருள் இலக்கணத்தில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு | |||
(1) | முதற்பொருள் | : | நிலமும், அதைச் சார்ந்த பொழுதுகளும் |
(2) | சிறு பொழுது | : | ஒரு நாளின் ஐவகைப்பட்ட கூறுபாடு |
(3) | பெரும் பொழுது | : | ஓர்
ஆண்டின் அறுவகைப்பட்ட உட்பிரிவுகள் |
(4) | கருப்பொருள் | : | ஐவகை
நிலங்களில் இடம் பெறும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள். |
(5) | உரிப்பொருள் | : | ஐவகைப்பட்ட நிலத்திற்குரிய ஒழுக்கம். |
(6) | நிமித்தம் | : | அகப்பொருள்,
உரிப்பொருள் (ஒழுக்கம்) தொடர்பான முன் பின் செயல்பாடுகள் |
(7) | கைகோள் | : | தலைவன்
தலைவி இருவரும் கைக்கொள்ளும் ஒழுக்க நடைமுறைகள் |
(8) | களவு | : | மறைமுகக் காதல் வாழ்க்கை |
(9) | கற்பு | : | வரைவு
என்னும் திருமணத்திற்குப் பிந்தைய இல்லற வாழ்க்கை |
(10) | கைக்கிளை | : | தலைமக்களில்
ஒருவருக்குத் தோன்றும் காதல் |
(11) | பெருந்திணை | : | பொருத்தம் இல்லாத காதல் |
(12) | குறிப்பறிதல் | : | தலைவிக்குத்
தன் மீது விருப்பம் உள்ளதா என்பதை அவளது பார்வை வழியாகத் தலைவன் புரிந்து கொள்ளுதல். |
(13) | இயற்கைப் புணர்ச்சி | : | தலைவனும்
தலைவியும் முதன் முதலாகத் தாமே கண்டு கூடுவது. |
(14) | இடம் தலைப்பாடு | : | தலைமக்கள்
கூடி மகிழ்ந்த குறிப்பிட்ட இடத்திலேயே மீண்டும் (மறுநாளும்) சந்திப்பது. |
(15) | பாங்கன் கூட்டம் | : | தலைவன்,
தன் தோழன் மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது. |
(16) | பாங்கியிற் கூட்டம் | : | தலைவன்
தோழி மூலமாகத் தலைவியைச் சந்தித்து மகிழ்வது. |
(17) | உள்ளப் புணர்ச்சி | : | தலைமக்கள்
இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல். |
(18) | மெய்யுறு புணர்ச்சி | : | உள்ளத்தால்
அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை |
(19) | பூத்தரு புணர்ச்சி | : | தலைமகன்
தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு செய்தல். |
(20) | புனல் தரு புணர்ச்சி | : | தலைவி
ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல். |
(21) | களிறு தரு புணர்ச்சி | : | தலைவி
தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்தவனையே தலைவனாக ஏற்றல். |
(22) | மதியுடன்பாடு | : | தலைவியின்
களவுக் காதலைத்
தோழி அறிந்து கொள்ளுதல். |
(23) | நேர்தல் | : | பாங்கன்,
தலைவனது கருத்துக்கு உடன்பட்டு, செயல்பட முடிவு செய்தல். |
(24) | முன்னுற உணர்தல் | : | தலைவியை,
உற்றுநோக்கி, தோழி அவளது காதலை உணர்தல். |
(25) | குறையுற உணர்தல் | : | தலைவன்
வந்து தன் குறையைக் கூற, அதன் வழித் தோழி தலைவியின் காதலை உணர்தல். |
(26) | சேட்படை | : | தலைவனது
வேண்டுகோளைத் தலைவி உடனடியாக ஏற்காமல் மறுப்பது. |
(27) | குறைநயப்பித்தல் | : | தலைவனின்
மனக்குறையைத் தோழி ஏற்றல். |
(28) | மடல் | : | பனை
ஓலையால் செய்யப்பட்ட குதிரை வடிவம். |
(29) | மடல் கூற்று | : | தலைவன்
தலைவி மீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்தி மடலேறுவேன் என்று சொல்வது. |
(30) | மடல் விலக்கு | : | தலைவன்
மடலேறுதல் கூடாது என்று தோழி தடுத்துப் பேசுவது. |
(31) | குறி இடம் | : | தலைவனும் தலைவியும் சந்திக்கும்
இடம். |
(32) | பகற்குறி | : | பகலில் தலைமக்கள் சந்திக்கும் இடம். |
(33) | இரவுக் குறி | : | இரவில் தலைமக்கள் சந்திக்கும் இடம் |
(34) | குறி இடையீடு | : | தலைமக்கள்
குறியிடத்தில் சந்திக்கும் நிலைக்கு ஏற்படும் இடர்ப்பாடு. |
(35) | அல்லகுறிப் படுதல் | : | இரவுக்
குறியில் தலைவனது வருகைக்கான அறிவிப்பைப் பிழையாகப் புரிந்துகொண்டு ஏமாற்றம் அடைதல். |
(36) | அறத்தொடு நிற்றல் | : | தலைவியின்
காதலை உரியவருக்கு உரியவாறு எடுத்துரைத்துக் கற்பு வாழ்வை மலரச் செய்யும் அருஞ்செயல். |
(37) | முன்னிலை மொழி | : | ஒரு
செய்தியை நேரடியாக உரியவரிடம் கூறுதல். |
(38) | முன்னிலைப் புறமொழி | : | ஒரு
செய்தியை உரியவரிடம் நேரடியாகக் கூறாமல் அவர் முன்னிலையில் வேறு யாருக்கோ கூறுவது போலச் சொல்லுதல். |
(39) | இற்செறிப்பு | : | தலைவி
வெளியில் செல்லாதவாறு வீட்டுக் காவலில் வைத்தல். |
(40) | அறப்புறம் காவல் | : | அறமன்றங்கள்,
ஆலயங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதற்காகத் தலைவியைப் பிரிவது. |
(41) | வாயில்கள் | : | தலைவியின்
ஊடலை நீக்கி மீண்டும் தலைவனை ஒன்று சேர்க்கும் செயல் புரிபவர்கள். |
(42) | வரைவு கடாதல் | : | தோழியோ
தலைவியோ, தலைவனிடம் திருமணத்தை வற்புறுத்துதல். |
(43) | வரைவு மலிதல் | : | திருமணம்
தொடர்பான முயற்சிகள் தொடங்கி, தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள். |
(44) | ஆற்றாமை | : | தலைவனது
பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துதல். |
(45) | உவர்த்தல் | : | தலைவனது
களவுத் தொடர்பை - அதுவே தொடர்வதைத் தோழி வெறுத்தல். |
(46) | செலவு அழுங்குதல் | : | தலைவன், தலைவியைப்
பிரிந்து செல்லும் செயல்பாட்டை உடனே மேற்கொள்ளாமல் தாமதப் படுத்துதல். |
(47) | வன்புறை - 1 | : | தலைவியின்
ஐயத்தைத் தீர்க்கும் நோக்கில் தலைவன் உண்மையை வற்புறுத்திக் கூறுதல். |
(48) | வன்புறை - 2 | : | தோழி,
தலைவியை இடித்துரைத்து அறிவுரை கூறுதல். |
(49) | வன்புறை - 3 | : | தலைவனது
பிரிவு அவசியமானது; அதனை ஏற்றுப் பொறுத்திருத்தலே பொருத்தமுடையது என்று தோழி கூறுதல். |
(50) | வன்பொறை | : | தலைவி,
தன் மெல்லிய இயல்பிற்கு மாறாகத் தோழியின் அறிவுரைகளுக்குப் பிறகு, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டிருத்தல். |
(51) | மருளுற்று உரைத்தல் | : | தலைவி
பிரிந்து சென்றபோது தலைவன் மயக்கம் கொண்டு பேசுதல். |
(52) | தெருளுற்று உரைத்தல் | : | தலைவி
பிரிந்து சென்றபோது தலைவன் தெளிவு பெற்றுப் பேசுதல். |
(53) | தெய்வம் தெளிதல் | : | இயற்கைப்
புணர்ச்சியில் தலைவியைத் தன்னோடு இணைத்த தெய்வம் இடந்தலைப்பாட்டிலும் அவ்வாறு செய்யும் என்று தலைவன் தெளிவுடன் பேசுதல். |
(54) | விடை தழாஅல் | : | தலைவன்
ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்றும் கூறுவர். |
(55) | குற்றிசை | : | தலைவன்
தலைவியை முற்றிலுமாகத் துறந்து நிற்றல். |
(56) | குறுங்கலி | : | தன்னை
முற்றிலுமாகத் துறந்து நீங்கிய தலைவனைத் தலைவி பழிதூற்றிப் பேசுதல். |
(57) | சுரநடை | : | தலைவியோடு
சென்ற தலைவன் இடைவழியில் அவளை இழந்து அதற்காக வருந்துதல். |
(58) | முதுபாலை | : | தலைவனோடு
சென்ற தலைவி இடைவழியில் அவனை இழந்து அதற்காகப் புலம்புதல். |
(59) | தாபத நிலை | : | தலைவனை
இழந்த தலைவி மேற்கொள்ளும் தவ வாழ்க்கை. |
(60) | தபுதார நிலை | : | தலைவியை
இழந்த தலைவன் மேற்கொள்ளும் தனிமை வாழ்க்கை. |
(61) | போக்கு | : | தலைவன்
தலைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதல். இதுவே உடன்போக்கு என்றும் கூறப்படும். |
(62) | கற்பொடு புணர்ந்த கவ்வை | : | தலைவியின்
காதலைப் பற்றிப் பலர் பேசும் அலர் எழுந்து அதன் தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகள். |
(63) | மனை மருட்சி | : | இதனை
அனை மருட்சி என்றும் கூறுவர். நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு தலைவியின் பிரிவிற்காக வருந்துதல். |
(64) | மீட்சி - (1) | : | உடன்போக்காகச்
சென்ற தலைவியைத் தேடிச் சென்ற செவிலி அவளைக் காணாமல் திரும்பி வருதல். |
(65) | மீட்சி - (2) | : | உடன்போக்காகச்
சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதல். |
(66) | பிரமம் | : | தகுதியுடைய
பிரம்மசாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது. |
(67) | பிரசாபத்தியம் | : | தலைவன்
தலைவி இருவரது பெற்றோரும், உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது. |
(68) | ஆரிடம் | : | ஒன்றோ
இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது. |
(69) | தெய்வம் | : | வேள்விகள்
பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது. |
(70) | கந்தர்வம் | : | கொடுப்போரும்,
கேட்போரும் இன்றித் தலைமகனும்,தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. |
(71) | ஆசுரம் | : | பெண்ணின்
தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன் களை அணிவித்து, அப்பெண்ணை வாங்கி மணந்து கொள்வது. |
(72) | இராக்கதம் | : | தலைவியை
அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது. |
(73) | பைசாசம் | : | உறங்கிய
பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக் களிப்பது. |
(74) | செவ்வணி | : | பூப்பெய்திய
தலைவி நீராடியதை அறிவிக்கச் செய்யும் முறை. தோழிக்குச் சிவப்பு ஆடையும், சிவந்த அணி மணிகளும் அணிவித்தல். |
(75) | வெள்ளணி | : | புதல்வனைப்
பெற்றுப் பதினைந்து நாள்கள் கடந்து நெய்யாடுதல் முடிந்தமையைத் தோழி மூலமாகத் தலைவனுக்கு உணர்த்துதல். தோழிக்கு வெள்ளாடை, வெள்ளை அணிகளை அணிவித்தல். |
(76) | புனைந்துரை | : | அகப்பாடலின்
நாடகப் பாங்கினைக் குறிப்பது, கற்பனையானது. |
(77) | உலகியல் | : | உலகியல்பை
உள்ளவாறே அகப்பாடலில் அமைப்பது. |
(78) | பாலது ஆணை | : | முன்பின்
அறிமுகம் இல்லாத தலைவன் தலைவியை ஒன்று சேர்த்து வைக்கும் ஊழ். |
(79) | யாழோர் கூட்டம் | : | கந்தர்வர்
எனப்படும், வானில் திரியும் தலைமக்கள் கூடி மகிழ்வது. |
(80) | கிளவித் தொகை | : | அகப்பொருள்
செய்திகளைப் பிரித்து விளக்கும் துறைத் தொகுதி. |
(81) | கிளவித் தலைவன் | : | அகப்பாடலில்
இயற்பெயர் சுட்டப் படாமல் இடம்பெறும் தலைவன். |
(82) | பயன் | : | அகப்பாடலில்
ஒருவர் கூற்று நிகழ்த்த அதனால் அடையும் பயன். |
(83) | முன்னம் | : | ஓர் அகப்பாடல் குறிப்பாக உணர்த்தும் செய்தி. |
(84) | மெய்ப்பாடு | : | உள்ளத்து
உணர்வுகள் பேச்சில் வெளிப்படுவதன் முன்னர் உடல் வழியாகப் வெளிப்படுவது. |
(85) | எச்சம் | : | சொல்லோ,
கருத்தோ விடுபட்டு நின்று
அதையும் உணர்ந்து பொருள் கொள்ளும் இலக்கண அமைப்பு. |
(86) | உள்ளுறை | : | புலவன்
தான் சொல்லுகிற உவமத்தோடு ஒத்த வேறொரு பொருள் புலப்படுமாறு அமைக்கும் அணி அழகு. |
(87) | இறைச்சி | : | புலவன்
செய்யுளில் கூறிய பொருளுக்குப் புறத்தேயும் வேறு ஓர் கருத்து புலப்படச் செய்வது. |
(88) | திணை மயக்கம் | : | முதற்பொருளும், கருப்பொருளும்
ஒரே திணைக்கு உரியதாக அமைய, உரிப்பொருளாகிய ஒழுக்கம் வேறொரு திணைக்குரியதாக மாறியிருப்பது. |