4.2 நிரல் நிறை அணி |
தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் பற்றிய அணிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன என்பதைச் சென்ற பாடங்களில் பார்த்தோம். தீவக அணி, பின்வருநிலை அணி ஆகியவற்றின் இலக்கணத்தை இங்கு நினைவுபடுத்திப் பாருங்கள். சொல் பற்றிய அணிகளில் நிரல் நிறை அணியும் ஒன்று. |
|
4.2.1 நிரல்நிறை அணியின் இலக்கணம் |
|
நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல்.
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும். அதாவது, சில சொற்களை ஒரு வரிசையில் நிறுத்தி, அவற்றோடு பொருள் தொடர்புடைய வேறுசொற்களை அடுத்த வரிசையில் நிறுத்திப் பொருத்தமாக இணைத்துப் பொருள் காண்பது.
நிரல் நிறுத்து இயற்றுதல் நிரல்நிறை அணியே
(தண்டி, 67) |
|
. அணியின் வகைகள்
நிரல்நிறை அணி இரண்டு வகைப்படும். அவை நேர் நிரல்நிறை அணி, எதிர் நிரல்நிறை அணி என்பன ஆகும். |
|
4.2.2 நேர் நிரல்நிறை அணி
சொல்லையும் அச்சொல் கொண்டு முடியும் பொருளையும் முறைமாறாமல் வரிசையாக நிறுத்துதல் நேர் நிரல்நிறை அணி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
காரிகை மென்மொழியால், நோக்கால், கதிர்முலையால்,
வார்புருவத்தால், இடையால், வாய்த்தளிரால் -
நேர்தொலைந்த
கொல்லி, வடிநெடுவேல், கோங்கு அரும்பு, வில்கரும்பு,
வல்லி, கவிர்மென் மலர் |
(காரிகை = பெண்; நோக்கு = கண்; கதிர் = ஒளி;
வார் = நீண்ட; நேர் தொலைந்த = அழகுகெட்டன;
கொல்லி = கொல்லிப்பண்; வல்லி = பூங்கொடி;
கவிர் = முள்முருங்கை)
பாடலின் பொருள்
மகளிருடைய மென்மையான சொல்லாலும், கண்ணாலும், ஒளி வீசும் முலையாலும், நீண்ட புருவத்தாலும், இடையாலும், வாயாகிய தளிராலும் முறையே, கொல்லி என்னும் பண்ணும், கூர்மை பொருந்திய நீண்ட வேலும், கோங்கினது அரும்பும், மன்மதனது கரும்பு வில்லும், பூங்கொடியும், மென்மையான முருக்க மலரும் அழகு இழந்தன.
. அணிப்பொருத்தம்
இப்பாடலில், முதல் இரண்டு அடிகளில் பெண்களின் மென்மொழி, கண், முலை, புருவம், இடை, வாய் ஆகிய சொற்களை வரிசையாக நிறுத்தி, பின் இரண்டு அடிகளில் அவற்றால் அழகு இழந்து போன கொல்லிப்பண், வேல், கோங்கு அரும்பு, கரும்புவில், பூங்கொடி, முருக்க மலர் ஆகிய தொடர்புடைய பொருள்களை அதேவரிசையில் வைத்திருப்பதைக் காணலாம்,
|
மென்மொழியால் கொல்லிப் பண்ணும்
கண்ணால் வேலும்
முலையால் கோங்கு அரும்பும்
புருவத்தால் கரும்பு வில்லும்
இடையால் பூங்கொடியும்
வாய்த்தளிரால் முருக்க மலரும் |
என ஒன்றுக்கொன்று நேராக நிறுத்திப் பொருள் கொள்ளுமாறு அமைத்தமையால் இது நேர் நிரல்நிறை அணி ஆயிற்று.
|
|
4.2.3 எதிர்நிரல்நிறைஅணி
|
சொல்லையும் அது கொண்டு முடியும் பொருளையும் முறையாக இல்லாமல் எதிராக நிறுத்தல், எதிர் நிரல்நிறை அணி ஆகும்.
எடுத்துக்காட்டு:
ஆடவர்கள் எவ்வாறு அகன்று ஒழிவார் வெஃகாவும் பாடகமும் ஊரகமும் பஞ்சரமா - நீடியமால்
நின்றான், இருந்தான், கிடந்தான், இதுஅன்றோ
மன்று ஆர் மதில்கச்சி மாண்பு |
(பஞ்சரம் = இருப்பிடம்; மன்று = மன்றம், அவை;
ஆர் = நிறைவு; மதில் = கோட்டை; கச்சி - காஞ்சி மாநகர்.)
பாடலின் பொருள்
நெடிய திருக்கோலத்தை உடைய திருமால், வெஃகா, பாடகம், ஊரகம் ஆகிய இடங்களைத் தனக்கு இடமாகக் கொண்டு, அவற்றில் முறையே கிடந்தான், இருந்தான், நின்றான்; மன்றங்கள் பல நிறைந்ததும், மதில் சூழ்ந்ததும் ஆகிய காஞ்சி மாநகரின் பெருமை இது அன்றோ? இத்தகைய சிறப்புமிக்க காஞ்சி மாநகரை மானிடர்கள் எவ்வாறு விட்டு நீங்குவார்கள்?
. அணிப்பொருத்தம்
இப்பாடலில், முதல் இரண்டு அடிகளில் காஞ்சி மாநகரில் உள்ள வெஃகா, பாடகம், ஊரகம் ஆகிய திருமாலின் இருப்பிடங்கள் கூறப்படுகின்றன. ஆனால் பின் இரண்டு அடிகளில் அவ்விடங்களில் உள்ள திருமாலின் திருக்கோலங்கள் வரிசையாக இல்லாமல்,
|
வெஃகாவில் நின்றான்
பாடகத்தில் இருந்தான்
ஊரகத்தில் கிடந்தான்
|
|
என்று (எதிர் வரிசையாக) முறை மாறிக் கிடக்கின்றன. எனவே இவற்றை,
வெஃகாவில் கிடந்தான் (படுத்திருக்கும் திருக்கோலம்)
பாடகத்தில் இருந்தான்
(அமர்ந்திருக்கும் திருக்கோலம்)
ஊரகத்தில் நின்றான்
(நின்று கொண்டிருக்கும் திருக்கோலம்)
|
என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இது எதிர் நிரல்நிறை அணி ஆயிற்று.
நிரல்நிறை அணியை நன்னூலும் யாப்பருங்கலக் காரிகையும் பொருள்கோள்களுள் ஒன்றாகக் கொண்டு அதை 'நிரல்நிறைப் பொருள்கோள்' என்று குறிப்பிடுகின்றன. |