6.0 பாட முன்னுரை
    தண்டியலங்காரம்     பொருளணியியலில் விளக்கிக்
கூறப்படும்     அணிகள்     முப்பத்தைந்து. இவற்றில்
இருபத்தெட்டாவது முதல் முப்பத்தைந்தாவது வரை கூறப்படும்
அணிகள் மாறுபடு புகழ்நிலை அணி, புகழாப் புகழ்ச்சி அணி,
நிதரிசன அணி, புணர்நிலை அணி, பரிவருத்தனை அணி,
வாழ்த்து அணி, சங்கீரண அணி, பாவிக அணி ஆகிய
எட்டு அணிகள் ஆகும். இவ்வணிகள் ஒவ்வொன்றைப் பற்றியும்
தண்டியாசிரியர் கூறும்போது முதற்கண் அதன் இலக்கணத்தைக்
கூறுகிறார். அவ்வணியானது பல்வகைப்பட்டு அமையுமாயின்
அவற்றின் வகைகளைக் கூறுகிறார். தண்டியலங்கார உரையில்
அவ்வகைகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான பாடல்
மேற்கோள் காட்டப்படுகிறது;     அப்பாடலுக்குப் பொருள்
தரப்படுகின்றது. அப்பாடலில் அமைந்துள்ள அணிப் பொருத்தம் இப்பாடத்தில் விரிவாக விளக்கிக் காட்டப்படுகிறது. இவ்வணிகளில்
சில தமிழ் இலக்கியங்களில் பயின்று வருவது தக்க சான்றுகளுடன்
எடுத்துக் காட்டப்படுகிறது.