2.4 இலக்கியமும் வனப்புகளும்

    இலக்கிய வனப்புகள் (வனப்பு = அழகு) எ ட்டாகும். அவையாவன: 1. அம்மை 2. அழகு 3. தொன்மை 4. தோல் 5. விருந்து 6. இயைபு 7 . புலன் 8. இழைபு. இவற்றின் விளக்கத்தினைக் காண்போம்!

2.4.1 வனப்புகள்

  • அம்மை
  •     இவற்றுள் ‘அம்மை’ என்பதன் இலக்கணமாகத் தொல்காப்பியர்,

        சின்மென் மொழியால் சீர்புனைந் தியாப்பின்     அம்மைதானே அடிநிமிர் பின்றே (செய். 227)

    என்பார். மெல்லிய சில சொற்களால் தொகுக்கப்பட்ட அடியளவு குறைந்துள்ள செய்யுள் அம்மை எனப்படும்.மேற்கூறிய சொல் அமைதியலோ ஓசை அமைதியிலோ வருவதால் அம்மை எனப்பட்டது (அமைதி - பொருத்தப்பாடு).

        விசும்பின் துளிவீழி னல்லால் மற்றாங்கே     பசும்புல் தலைகாண் பரிது (குறள். 16)

    எனும் குறட்பா சின்மென் மொழியால் சீர் புனைந்து, அடிகுறைந்துள்ளமையால் இது அம்மை என்ற வனப்பின்கீழ் அடக்கப்படும்.

  • அழகு
  •     அழகு என்ற வனப்பின் இலக்கணமாகத் தொல்காப்பியர் (செய்யுளியல், 228) கூறுவதாவது:

        செய்யுட்குரிய சொல்லால் சீரைப் புணர்த்துத் (இணைத்து) தொகுப்பின் அவ்வகைப்பட்ட செய்யுள்அழகு எனப்படும் என்பது இதன்பொருள். நெடுந்தொகை (அகநானூறு) முதலிய எட்டும் இதற்கு எடுத்துக்காட்டாகும் என்பார் நச்சினார்க்கினியர்.

        படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்     உடைப்பெருஞ் செல்வராயினும் இடைப்படக்     குறுகுறு நடந்து சிறுகை நீட்டி     இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்     நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்     மயக்குறு மக்களை இல்லோர்க்குப்     பயக்குறை இல்லைத்தாம் வாழும்நாளே (புறம் : 188)

    புறப்பாட்டு இதற்கு எடுத்துக்காட்டு.

  • தொன்மை
  •     உரைநடை கலந்து, பழமையாகிய கதையைப் பொருளாகக் கொண்டு செய்யப்படுவது ‘தொன்மை’ என்னும் வனப்பின் இலக்கணமாகும் (தொல்காப்பியம், செய். 229).    

        அவை இராமசரிதமும் (இராமாயணம்), பாண்டவ சரிதமும் (மகாபாரதம்) போல்வன என்பார் இளம்பூரணர்.

  • தோல்
  •     ‘இழும் என்னும் ஓசையையுடைய மென்மையான சொல்லானே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், பரந்த மொழியால் அடி நிமிர்ந்து ஒழுகினும் ‘தோல்’ என்னும் வனப்பாம்! (தொல்.செய். 230).

         மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!     காசறு விரையே! கரும்பே தேனே!     அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!     பெருங்குடி வணிகன் பெருமட மகளே!     மலையிடைப் பிறவா மணியே என்கோ     அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ     யாழிடைப் பிறவா இசையே என்கோ?

    (சிலப். மனை. 73-79)    

    என்னும் சிலப்பதிகார அடிகள் ‘இழும்’ என்னும் ஒலியால் இன்பம் என்னும் விழுப்பொருள் தந்து, பரந்த மொழியால் அடிமிகுந்து ஒழுகுதலைக் காணமுடிகிறதல்லவா? இதையே ‘தோல்’ என மொழிந்தனர். தொன்மையும் தோலும் பழமை என்னும் பொருளைத் தருவன.

  • விருந்து
  •     இவ்வனப்பு முன்னைய ஆசிரியர்கள் சொல்லிய வழியினின்றும் விலகிப்போய் புதியதாகப் படைக்கப்பட்ட இலக்கியம் விருந்து ஆகும்.

        விருந்தே தானும்     புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (செய். 231)

    என்பார் தொல்காப்பியர்.

        “புதிதாகப்     புனைதலாவது     ஒருவன் சொன்ன நிழல்வழியன்றித் தானே தோற்றுவித்தல்” என்பார் இளம்பூரணர் பேராசிரியர் முத்தொள்ளாயிரம், கலம்பகம் முதலானவற்றைச் சான்றாகக் காட்டுவார்.

        காலத்திற்குக் காலம் செய்யுள் வடிவில் மாற்றங்கள் நேரலாம்; தமிழ்மொழி வளர்ச்சிக்கு இத்தகைய மாற்றங்களும் பயன்படுமானால் அவற்றை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கருதியே தொல்காப்பியர் ‘விருந்து’ என்ற வனப்பைக் கூறினார் என்றால் தவறில்லை. இக்காலத்தும் சிறுகதை, நாவல், புதுக்கவிதை முதலியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாய்க் கொள்ளலாம்.

  • இயைபு
  •     ஞகாரை முதலா னகார ஈற்றுப்     புள்ளி இறுதி இயைபெனப் படுமே (செய். 232)

    என்பது இதன்     விதி. ஞ்     முதலான பதினொரு மெய்யெழுத்துகளில் ஏதேனும் ஒன்றினை இறுதியாகக் கொண்டு நிற்கும் செய்யுள் இயைபு எனப்படும். இதற்குப் பேராசிரியர், மணிமேகலையையும், கொங்குவேளிர்     மாக்கதையையும் (பெருங்கதை) சான்றாகக் கூறுவார்.

        மணிமேகலையில் வரும்     ‘மலர்வனம் புக்க காதை’ “மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலையென்” என ‘ன’கர ஈற்றில் முடிவது காண்க.

  • புலன்
  •     சேரி மொழியால் செவ்விதிற் கிளந்து     தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றில்     புலனென மொழிப புலன் உணர்ந்தோரே (செய். 223)

    என்பது ‘புலன்’ பற்றிய தொல்காப்பிய நூற்பா.

        ‘சேரிமொழி’ என்பது பலர்க்கும் தெரிந்த வழக்குச்சொல். செய்யுளைப் படித்த மாத்திரத்தில் பொருள் விளங்கச்செய்வது ‘புலன்’ என்பது இளம்பூரணர் கருத்து.

        நல்லது செய்தல் ஆற்றீராயினும்     அல்லது செய்தல் ஓம்புமின்

    என்பதைச் சான்றாகக் கூறலாம்.

  • இழைபு
  •     “ஒற்றுடன் (புள்ளியுடன்) கூடிய வல்லெழுத்துகள் (க், ச், ட், த், ப், ற்) வரக்கூடா; ஆசிரியப்பாவிற்குச் சொல்லப்பட்ட 4 எழுத்து முதல் 20 எழுத்து வரை வரப்பெறும். ஓங்கிய நெடில் மிகுதியாகவுள்ள சொற்களால் அமையப்பெறும்” என்பது இதன் இலக்கணம்.

        பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து     தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து.....     தொருநீ மறைப்ப ஒழுகுவ தன்றே

    என்ற பாடலை உரையாசிரியர் சான்றாகக் காட்டுவார்.

        உரைகாரர்கள் கூறுவதிலிருந்து, அம்மை = அறநூல்வகை; அழகு = தொகை, அகநூல் வகை; தொன்மை = இதிகாச வகை; தோல் = மகா     காவியங்கள்; விருந்து = சிற்றிலக்கிய வகை; இயைபு = காப்பிய வகை; புலன் = கூத்திலக்கணம்; இழைபு = இசை இலக்கியம்" என்று தொகுத்துக் கூறுகிறார் டாக்டர் ச.வே. சுப்பிரமணியம்.

        இக்காலத் திறனாய்வாளர்கள் இவ்வாறெல்லாம் கூறுமாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய அரிய நோக்கும், வனப்புமான செய்யுள் உறுப்புகளைக் கூறிய நம் தொல்காப்பியரது நுண்மாண் நுழைபுலத்திறமையைப் போற்றல் வேண்டும்!

    2.4.2 பாட்டின் முதன்மை

        இத்தகைய இலக்கிய வகைகளுள் தொல்காப்பியர் பாட்டையே முதன்மையாகச் சிறப்பித்துக் கூறுகிறார். அவர் கூறும் நூல் வகைகளின் வரிசையில் பாட்டையே முதலில் வைத்துள்ளார். செய்யுளியலில் பாட்டைப் பற்றிய இலக்கணங்களே மிகுதியாகவும் விளக்கமாகவும் உள்ளன. ஒருவர் தாம் பெறும் நுகர்ச்சியின் (அனுபவம்) உணர்ச்சியினைப் பாட்டின் வாயிலாகவே மிகவும் ஆற்றலுடன் உணர்த்த முடியும்.

    தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு     சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுண ராத     இயல்பின ளாம் எங்கள் தாய்! முப்பதுகோடி முகமுடையாள் உயிர்     மொய்ம்புற ஒன்றுடை யாள் - இவள் செப்பு மொழிபதி னெட்டுடை யாள் - எனில்     சிந்தனை ஒன்றுடை யாள்!

        பாரதியாரின் இப்பாடலைப் படிக்கும்போது நம்மையும் அறியாமல் ஓர் இன்பம் பிறக்கும்! என்ன காரணம்? இப்பாடலில் அமைந்த ஓசையே. இதனால்தான் கவிதைக்கு இலக்கணம் கூறவந்த ‘ஜான்சன்’ என்பார்.

         கவிதை என்பது இசையோடு கூடுமாறு     பொருந்த இயற்றுவது

    என்றார். இசைமட்டும் கூடினால் போதாது; பொருள் பொதிந்து உயிர்ப்புடையதாகவும் இலங்கிட வேண்டும். ரோஜர் பவ்லர் (Roger Fowler) என்னும் அறிஞர்,

        'சிறந்த பாடல் அடிகளைக் கொண்டதே கவிதை'

    (Poetry being an excellent set of verses) என்றார். தொல்காப்பியர் கூறும் பாக்கள் (இலக்கிய வகை) இத்தகு இலக்கணங்களைப் பெற்றவை!

        தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34-இல் ‘பா’ என்பதும் ஒன்று. ஆனால் பிற்காலத்தில் ‘பாவும் செய்யுளும்’ ஒன்றே என்று கொண்டனர். “யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள்” இவையாவும் ஒரே பொருளையுடையன என யாப்பருங்கலக்     காரிகை     என்னும் நூலின் உரை குறிப்பிடுகின்றது.

    2.4.3 பாவின் விளக்கம்

        பா என்றால் என்ன? “தொடை பாவி நடத்தலின் பாவே” என்பர் இலக்கண வல்லார் (பாவி = படர்ந்து). தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர்,     “பா என்பது சேட்புலத்தில் (தொலைதூரத்தில்) இருந்த காலத்து ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஒதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து (வேறுபாடு கண்டு) இன்ன செய்யுள் என்று உணர்வதற்கு ஏதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஒசை” என்றார்.

        இக்காலத்தில் நெடுந்தொலைவிலிருந்து கேட்கும் ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டவுடனேயே இப்பாட்டு, இன்ன படத்தில்     இன்னார் பாடியது     என்று நாம் சொல்லி விடுவோமல்லவா? அதுபோன்றே ஒருவன் நெடுந்தொலைவில் இருந்து கொண்டு ஒரு பாடலைப் பாடுவானாயின் அப்பாட்டின் ஓசை அல்லது தூக்கினைக் கொண்டு ‘இது ஆசிரியப்பா, இது வெண்பா’ என உணர்ந்து கொள்ளும் நிலை முன்பிருந்தது.

        ஆபர்கிராம்பி என்ற இலக்கிய ஆராய்ச்சியாளர், “பாட்டே இலக்கியத்தின் சாரம் பாட்டில்தான் இலக்கியத்தின் முழுத்தன்மையும், அனுபவத்தை உணர்த்தும் ஆற்றலும் மிகவும் செறிவாக உள்ளன” (Principles of Literary Criticism, P. 4) என்று பாட்டின் ஆற்றல்மிகு தன்மையை எடுத்துக்காட்டுகிறார்.

        தொல்காப்பியரும் பாட்டின் ஆற்றல்மிக்க தன்மையை உணர்ந்து, தாம் கண்ட இலக்கிய வகைகளுள் அதற்குச் சிறப்பிடம் தந்து விரிவாக இலக்கணம் வகுத்துள்ளார். பாட்டில் ஒவ்வோரடியும் சிறப்பாக அமைய வேண்டும் என்பார் தொல்காப்பியர். சிறப்பான அடிகளையுடையதே பாட்டு என்று தொல்காப்பியர் இலக்கணம் கூறியுள்ளார். “அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே” (தொல். 1292) என்பது தொல்காப்பியம்.

    2.4.4 பாட்டின் அடிகள்

        பாட்டுக்குரிய அடிகளை அவர் ஐந்து வகைகளாகக் கொள்கிறார். அவையாவன: குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என்பனவாம்.

        நான்கிலிருந்து ஆறு எழுத்துகளைக் கொண்டது குறளடி எனப்படும்.

        ஏழிலிருந்து ஒன்பது எழுத்துகளைக் கொண்டது சிந்தடி எனப்படும்.

        பத்திலிருந்து பதினான்கு எழுத்துகளை உடையது அளவடி எனப்படும்.

        பதினைந்திலிருந்து பதினேழு எழுத்துகளை உடையது நெடிலடி எனப்படும்.

        பதினெட்டிலிருந்து இருபது எழுத்துகளை உடையது கழிநெடிலடி எனப்படும் (தொல். 1293 - 97).

        இவ்விதிகளுக்குப் பொருந்திய அடிகளே சிறப்பான அடிகள் என்பதும், இவ்வடிகளால் ஆனவையே பாட்டு என்பதும் தொல்காப்பியருடைய கருத்தாகும்.