6.4 பழமொழி வகை நூல்கள்

     பழமொழி அல்லது முதுமொழியின் அடிப்படையில் சில நூல்கள்     அமைந்துள்ளன. அவை: பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி

6.4.1 பழமொழி நானூறு

     ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்து, அதனோடு ஒரு கதையையோ, வரலாற்று நிகழ்ச்சியையோ சுட்டி அறத்தை வற்புறுத்தும் இந்நூல் நீதி நூல்களில் சிறப்புடைய ஒன்றாகும். 400     வெண்பாக்களை யுடைய இதனைத் திருக்குறளுக்கும் நாலடியார்க்கும் அடுத்த சிறப்புடையதாகப் போற்றுவர். பதினெண்கீழ்க்கணக்கின் மூன்று பெரு நூல்களுள் இதுவும் ஒன்று.

     இந்நூலாசிரியர் முன்றுறையரையனார். அரையர் என்பது அரசரைக் குறிக்கும். இவர் ஒரு குறுநில மன்னராயிருத்தல் வேண்டும். அருகக் கடவுள் வணக்கம் கூறியுள்ள இவர் சமண சமயத்தவராவார். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வச்சிரநந்தி மதுரையில் அமைத்திருந்த சங்கத்தில் இவரும் விளங்கியிருத்தல் கூடும் என்பர்.

     இந்நூலில் ‘தமக்கு மருத்துவர் தாம்’, ‘தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை’, ‘நுணலும் தன் வாயாற் கெடும்’, ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’, ‘முதலிலார்க்கு ஊதியம் இல்’ என்பன போன்ற பழமொழிகள் வருகின்றன. இந்நூலாசிரியரே ‘பண்டைப் பழமொழி’ என்பதால் அவற்றின் பழமையும், சிறப்பும் அறியப்படும். இவற்றால் பழந்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்கள் பல அறியப்படுகின்றன. மேலும் புராணக் கதைகள், அரிய நிகழ்ச்சிகள் பலவற்றை இந்நூல் எடுத்துக்காட்டாகக் காட்டுகின்றது.

     எ.டு:

     முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
     தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லில்
     நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
     அறிமடமும் சான்றோர்க்கு அணி ! (361)

     ‘நெருங்கிய மடல்களையும், பூக்களையும் உடைய தாழைகள் நிறைந்த கடற்கரையின்     தலைவனே!     முல்லைக்கொடி படர்வதற்காகத் தான் ஏறி வந்த தேரையே கொடுத்தான் பாரி! குளிர் காலத்திலே மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தான் பேகன்! என்ற வரலாற்றைக் கேட்டறிந்துள்ளோம். இதைப் பற்றிச் சொன்னால் அறிவிலே மடமையும் சான்றோர்க்கு அணியாகும்!’ என்பது இதன் கருத்து.

6.4.2 முதுமொழிக் காஞ்சி

     மதுரைக் கூடலூர்கிழார் எழுதிய இந்நூல், பத்து அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் பத்துக் குறட்டாழிசைகளாக 100 செய்யுட்களையும் உடையது. நிலையாமை     பற்றிய காஞ்சித்திணையில் முதுமொழிக்காஞ்சி என்பது ஒரு துறையாகும். உலக நிலையாமையை எடுத்துக்காட்டிச் சான்றோர் தம் அறிவுடைமையாற் கூறும் அனுபவ உரைகளே முதுமொழிக் காஞ்சியாகும். முதுமொழி அறிவுடைய கூற்று எனப்படும். துறைப்பெயரைத் தாங்கிய இந்நூல் சங்க காலத்தை ஒட்டிப் பிறந்ததாகல் வேண்டும். எட்டுத் தொகையுள் ஒன்றான ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். அவரும் இவரும் ஒருவரே எனக் கருதுவாரும் உள்ளனர்.

     ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை

     என்பது ஒழுக்கத்தை வற்புறுத்தும் பாட்டு, ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ என்னும் வரியை அடுத்து வரும் எல்லாச் செய்யுட்களோடும் இணைத்துப் படிக்க வேண்டும். பிறருடைய வழக்கத்தை நமக்குப் புதிதாக இருப்பது கருதிப் பழிக்கக் கூடாது என்னும் கருத்தை, “அறியாத தேசத்து ஆசாரம் பழியார்”(3.8) என்னும் தொடரால் அறியலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
தமிழில் நீதியை உணர்த்தும் அடிப்படைக் கூறுகள் எவ்விலக்கியத்தில் காணக் கிடக்கின்றன?
2.
பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் சங்க காலத்தின் பின்னர்க் கைப்பற்றியவர் யாவர்?
3.
சோழ நாட்டு உறையூரன் ஆகிய புத்ததத்தன் பாலி மொழியில் எழுதிய நூல்கள் யாவை?
4.
இருண்ட காலம் என அழைக்கப்படுவது யாது?
5.
மேற்கணக்கு - கீழ்க்கணக்கு என்று எந்நூல்களைச் சுட்டுகிறோம்?
6.
கீழ்க்கணக்கு நூல்களில் பொருட் பாகுபாடு உண்டா?
7.
எண்ணால் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு நூல்கள் யாவை?
8.
திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி - இவ்விரு நூல்களின் ஆசிரியர் பெயரைச் சுட்டுக.
9.
ஐந்திணை ஐம்பது பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
10.
களவழி நாற்பது நூலாசிரியர் யார்? எவ்விடத்தில் சோழனும் சேரனும் போரிட்டனர்?
11.
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் பெயர் கூறுக.
12.
பழமொழி உணர்த்தும் பழமொழிகள் சில கூறுக.
13.
முதுமொழிக்காஞ்சி கூறும் ஓர் ஒழுக்கம் கூறுக.