2.0 பாட முன்னுரை கலைகளில் சிறந்தது காவியக் கலை. கேட்டு இன்புறத்தக்க அளவில் மட்டுமல்லாது, உணர்ந்து பயன்தரக் தக்கதாகவும் காவியங்கள் அமைகின்றன. கதை கூறல் என்னும் உத்தியின் மூலம் கேட்போரை இன்புற வைத்தாலும், காப்பியத்தின் அடிக்கருத்து மனிதர்களுக்கு விழுமங்களை எடுத்துக்கூறிப் பக்குவப்படுத்துவதே ஆகும். மனிதர்களையும் அவர்களின் அருஞ்செயல்களையும் மட்டுமன்றி, தேவர்கள், அசுரர்கள், பூதங்கள், தெய்வங்கள் என யாரை வேண்டுமானாலும் காவியங்களில் கொண்டு வர முடியும். கருத்தியல் கோட்பாட்டினை வெற்றி பெறச் செய்யத் தம் வாழ்க்கையையே தியாகம் செய்த இலட்சிய மாந்தரின் வாழ்க்கையும் வீரக் கதைகளும் காப்பியங்களில் இடம்பெற்றன. மனிதர்களின் அச்ச உணர்வினை நீக்கி, நம்பிக்கை ஊட்டும் பிரச்சாரமாகவே அவை கூறப்பட்டன. ஒரு மொழிக்கு எழுத்துகள் எவ்வாறு அவசியமோ அதுபோல், ஓர் இலக்கியத்திற்குக் காப்பியங்கள் அவசியமாகின்றன. பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் நீதிநெறி வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. அடி வரையறை மட்டும் மாறியது. ஆனால் அதே நீதிநெறியை, அறம் வலியுறுத்தலை, ஒரு தன்னிகரற்ற தலைவனின் வாழ்வியலுக்குப் பின்னால் மறைத்து, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போலக் காப்பியங்கள் செய்தன. சமய போதனையும் காப்பியங்கள் வழியே நடைபெற்றது. ஆசை துறத்தலைப் பௌத்தம் கதையாக்கியது. கள்ளுக்கு எதிராகவும்,சிறைச்சாலைச் சீர்திருத்தத்தையும், பசிக்கு எதிரான கலகக் குரலையும் மணிமேகலை தந்தது. எட்டுப் பெண்களை மணந்த சீவகன் இறுதியில் சமண சமயத் துறவு பூண்டதாகச் சீவகசிந்தாமணி காட்டியது. அரசியலில் பிழை செய்தால், அரசனாக இருந்தாலும் அறமே எமனாக நின்று தண்டிக்கும் என்ற கருத்து நிலையைச் சிலப்பதிகாரம் முன் வைத்தது. காப்பியங்களை வகை தொகைப்படுத்தி ஐம்பெரும் காப்பியங்கள் என்றும்,ஐஞ்சிறுகாப்பியங்கள் என்றும் முன்னோர் வகைமைப்படுத்தினர். சிலம்பு, மணிமேகலை போன்ற தமிழ்ச் சூழலில் எழுந்த கதைகளைத் தவிர,பெரும்பாலான காப்பியங்கள் வடமொழியைத் தழுவி எழுதப்பட்டதால், அங்கே இருந்த பஞ்ச மகா காவியம் என்பது போல எண்ணிக்கையால் வகைமைப்படுத்தும் மரபு தமிழுக்கும் வந்தது. இரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம், கிராதார்ஜு னீயம், நைஷதீய சரிதம் ஆகிய பஞ்ச மகா காவியங்களை அடியொற்றிப் பிற்காலத்தோர், (1) சிலப்பதிகாரம் என ஐம்பெரும் காப்பியங்களாகவும், (1) யசோதர காவியம் |