2.2 ஐம்பெரும் காப்பியம்

    காலம் காலமாய் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதாலேயே சில செய்திகள் உண்மையைப் போலாகி விடுகின்றன.

     நமது பண்டைய இலக்கியங்களில் பெரும் காப்பியங்களை ‘ஐந்து’ எனும் வகைப்பாட்டிற்குள் வைத்தமைக்கு எந்தச் சான்றும் இல்லை.

     வடமொழியின் பஞ்ச காவிய மரபு (பஞ்ச-ஐந்து) தமிழில் ஐம்பெரும் காப்பியமாய் வந்தது.

    நன்னூல் உரையாசிரியராகிய மயிலை நாதரே (14ஆம் நூற்றாண்டு) முதன்முதலாக ஐம்பெரும் காப்பியம் எனும் சொல்லாக்கத்தைப் பயன்படுத்துகிறார். ஆனால் எவை என்று கூறவில்லை.

     தமிழ் விடு தூது, ‘கற்றார் வழங்கு பஞ்ச காப்பியம்’ என்று                     பாடுகிறது..

    திருத்தணிகை உலாவின் ஆசிரியராகிய கந்தப்ப தேசிகரே (19ஆம் நூற்றாண்டு) ஐம்பெருங்காப்பியங்கள் இவை என்று வரையறுத்துக் கூறினார்.
அவை:

     (1) சிலப்பதிகாரம்
     (2) மணிமேகலை
     (3) சீவகசிந்தாமணி
     (4) வளையாபதி
     (5) குண்டலகேசி
ஆகும்.

ஆனால் இந்தப் பட்டியல் பெருங்காப்பிய இலக்கணத்திற்குச் சற்றும் பொருந்தவில்லை.

· தமிழண்ணல் - புதிய வகைமை

     தமிழண்ணல் முதல் காப்பியமாகச் சிலப்பதிகாரத்தைக் குறிப்பிடுகிறார்.

    இரட்டைக்     காப்பியங்களாகச்     சிலப்பதிகாரம், மணிமேகலையைக் குறிப்பிடுகிறார்.

     சிலம்பு, மணிமேகலையோடு, பெருங்கதையையும் சேர்த்து அகவல் யாப்பில் அமைந்த அகவற் காப்பியமாய்க் காண்கிறார்.

     அம்மூன்றுடன் சீவகசிந்தாமணியையும், சூளாமணியையும் சேர்த்து முதல் ஐந்து காப்பியங்கள் என்கிறார்.

     இருந்தாலும்     வழக்கமாக நிலவிவரும்     வளையாபதி, குண்டலகேசியையும் இணைத்தே இப்பாடம் விளக்குகிறது.
    

ஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர்
    1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
    2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
    3. சீவகசிந்தாமணி - திருத்தக்க தேவர்
    4. வளையாபதி -
    5. குண்டலகேசி - நாதகுத்தனார்

2.2.1 ஐம்பெரும் காப்பியம் - ஓர் ஒப்புமை

சிலப்பதிகாரம் மணிமேகலை
சீவக
சிந்தாமணி
வளையாபதி குண்டலகேசி
ஆசிரியர்
இளங்கோவடிகள்
சீத்தலைச்
சாத்தனார்
திருத்தக்க
தேவர்
தெரியவில்லை நாதகுத்தனார்
சமயம்
கவுந்தி மூலம்
சமணம்
பேசப்படுகிறது.
இளங்கோ
சமரசப்
பார்வையோடு
சிவன்,
திருமால்,
அருகன்,
செவ்வேள்,
கொற்றவை
பற்றிப்
பேசுகிறார்
பௌத்தம்
- அறவண
அடிகள்
மூலம்
பேசப்படல்.
சமணம்
சமணம்
பௌத்தம்
கதைத்
தலைவன்
/தலைவி
கோவலன்,

மணிமேகலை
சீவகன்,
எட்டு
மனைவியர்
நவகோடி
நாராயணன்
பத்திரை
-துறவியாய்
மாறிய
குண்டலகேசி
காவியப்
குப்பு/
பாடல்கள்
காண்டங்கள்-3
காதைகள் - 30
காதைகள்-30
13
இலம்
பகங்கள்
72
பாடல்களே கிடைத்
துள்ளன.
19
பாடல்களே
கிடைத்துள்ளன
பாவகை
அகவல் யாப்பு
அகவல்
யாப்பு
விருத்தப்பா
விருத்தப்பா
விருத்தப்பா
பாத்திரங்கள்
(பிற)
மாதவி,
கவுந்தி
அடிகள்,
மாதரி, பாண்டியன்
நெடுஞ
்செழியன,்
சேரன் செங்குட்டுவன்,
மாடலன்
சித்ராபதி,
அறவண
அடிகள்,
மாதவி,
சுதமதி,
தீவதிலகை,
உதய
குமாரன்,
மணிமேகலா
தெய்வம்,
ஆபுத்திரன்,
ஆதிரை,
சாதுவன்
சச்சந்தன்,
விசயை,
நந்தட்டன்,
கட்டியங்
காரன்,
கந்துக்கடன்,
சீவகன்
மணந்த
எண்மர்
நவகோடி
நாராயணன்
போன்றோர்
குண்டலகேசி,
கணவன்
கரளன்
நூற்சிறப்பு 1.முதற்காப்பியம்
முத்தமிழ்க்
காப்பியம்

2.பெண்ணைக்
காப்பியத்
தலைவி
ஆக்கியது.

3.மன்னருக்கு
நிகராக
வணிகர்
கருதப்படுதல்.

1.உணவிடும்
உன்னதப்
பணி

2.சிறைச்
சாலை
அறச்
சாலையானது.

3.துறவி
யாகவே
மணிமேகலை
இருந்தாள்.

மணநூல்
தமிழன்னையின்
வளையல்
கதைப்
போக்கு
மணி
மேகலைக்
காப்பியத்தை
ஒத்துள்ளது.
தமிழன்னையின் காதணி.

2.2.2 சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரக் காப்பியத்தினை இளங்கோ 30 காதைகளாகப் பகுத்து மூன்று காண்டங்களில் அமைத்துத் தந்தார்.

     புகார்க் காண்டம் - 10 காதைகள்
     மதுரைக் காண்டம் - 13 காதைகள்
     வஞ்சிக் காண்டம் - 7 காதைகள்

· கண்ணகி கோவலன் வரலாறு

    
கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடைபெற்றது. மாதவியின் கலை மீது தாகம் கொண்ட கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் தங்கினான். மணிமேகலை எனும் மகளின் தந்தையானான் . கானல் வரியால் மாதவியைப் பிரிந்தான். செல்வமனைத்தையும் இழந்து, கண்ணகியுடன் மதுரை சென்றான்.
கவுந்தியடிகள்     துணையுடன் மாதரியிடம்     கண்ணகியை அடைக்கலமாக்கினான். கண்ணகியின் காற்சிலம்பை விற்கச் சென்ற கோவலன், பொற்கொல்லனால் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டு, நீதி தவறிய பாண்டிய மன்னனால் கொல்லப்படுகிறான். தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து, அதன் உள்ளிருந்த மாணிக்கப்பரலைக் காட்டித் தெளிவு படுத்துகிறாள் கண்ணகி. மன்னனோடு கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தாள். கணவனுக்காக நீதி கேட்டுப் போராடிய கண்ணகி மதுரையைஎரித்தாள். பின்னர், கண்ணகி வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண விமானத்திலேறி விண்ணுலகு சென்றாள்.

· சிலம்பு உணர்த்தும் மூன்று செய்திகள்

     அரசியலில் பிழை செய்தால், அறமே எமனாய் நின்று தண்டிக்கும்; புகழ்மிக்க பத்தினியை மனிதரே அன்றி முனிவரும் தேவரும் போற்றுதல் இயல்பு; முன்செய்த தீவினை சினந்து வந்து பயனைத் தோற்றுவிக்கும் என்பதை

     அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
     உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்
     ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்

என்று மூன்று செய்திகளை முன்னிறுத்தி இளங்கோ காப்பியம் படைத்துள்ளார்.

· சிலம்பின் வேறு பெயர்கள்

    சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம், முத்தமிழ்க்     காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக்     காப்பியம்,    உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று அழைக்கப்படுகிறது.

· சிலம்பின் சிறப்புகள்

     சங்க கால ஐந்து நிலப்பாங்கு முறை இக்காப்பியத்தில் இடம் பெறுகிறது. அந்தந்த மக்களின் வாழ்வியல் முறையையும் பண்பாட்டுப் பதிவையும் சிலம்பில் நம்மால் அறிய முடிகிறது.

     குறிஞ்சி - குன்றக் குரவை
     முல்லை - ஆய்ச்சியர் குரவை
    மருதம் - நாடுகாண் காதை
     நெய்தல் - கானல் வரி
    பாலை - வேட்டுவ வரி

ஆகிய ஐவகை நிலப்பாகுபாடும் சிலம்பில் இடம் பெற்றுள்ளது.

· சிலம்பு கூறும் பதினொரு வகை ஆடல்கள்

     சிலப்பதிகாரத்தின் கடலாடு காதையில் 11 வகை ஆடல்கள் சுட்டப்படுகின்றன.

     (1) கொடுகொட்டி
     (2) பாண்டரங்கம்
     (3) அல்லியம்
     (4) மல்லாடல்
    (5) துடிக்கூத்து
     (6) குடைக்கூத்து
     (7) குடக்கூத்து
     (8) பேடி ஆடல்
     (9) மரக்காலாடல்
     (10) பாவைக்கூத்து
     (11) கடையம்

என்பதாக அவை அமைகின்றன.

· நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம்

     சிலப்பதிகாரம் மக்கள் இலக்கியமாகிய நாட்டுப்புறப்பாடல்களை மதித்துத் தன்னகப் படுத்திய     காப்பியமாகத்    திகழ்கிறது. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வேட்டுவ வரி, கானல்வரி,ஆற்றுவரி, ஊசல்வரி, கந்துகவரி, அம்மானை வரி போன்றன நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தோடு அமைகின்றன.

2.2.3 மணிமேகலை

    ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

     ‘விழாவறை காதை’ முதல் ‘பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை’ முடிய முப்பது காதைகளைக் கொண்டுள்ளது.

     சிலம்பின் தொடர்ச்சியாக இக்காப்பியம்     அமைவதால், சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்பர்.

     பெண்ணின் பெயரில் அமைந்த முதற் காப்பியம் இதுவாகும். இந்நூலின் பதிகம் இக்காப்பியத்தை மணிமேகலைத் துறவு எனக் குறிப்பிடுகிறது.

· காப்பியக் கதை

     மணிமேகலை பிறந்த போது ஆயிரம் கணிகையர் கூடி மகிழ அக்குழந்தைக்குக் கோவலன், தன் குலதெய்வம் மணிமேகலா தெய்வத்தின் பெயரைச் சூட்டினான்.     கோவலனின் இறப்பு மாதவி,மணிமேகலை இருவரையும்     நிலைகுலைய வைக்கிறது. இருவரும் பௌத்த சமயத் துறவினை ஏற்கின்றனர். மணிமேகலையை இளவரசன் உதயகுமரன் பின்    தொடர்கிறான். தன் மனம் சலனப்படாமல் இருக்க வேண்டும் என்று    மணிமேகலை எண்ண, மணிமேகலா தெய்வம் அவளைத் தூக்கிச் சென்று மணிபல்லவத் தீவில் விட்டு விடுகிறது. அங்கு,தன் பழம் பிறப்பைப் பற்றி அறிகிறாள். மூன்று மந்திரங்களைப் பெறுகிறாள்.

     ஆபுத்திரனின் அமுதசுரபி கோமுகிப்    பொய்கையிலிருந்து மணிமேகலைக்குக்     கிடைக்கிறது.    உதயகுமரன்     தரும் தொல்லைகளிலிருந்து தப்ப, அவள் காயசண்டிகை     எனும் பெண்வடிவினை எடுக்கிறாள்.காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமாரன் கொல்லப்படுகிறான். இளவரசனைக் கொன்ற பழி, மணிமேகலை மீது விழுகிறது.    அவள்     சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறாள். மகனைப் பறிகொடுத்த அரசி, மணிமேகலையைப் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துகிறாள்.    வவலிமையால் மணிமேகலை அவற்றிலிருந்து மீள்கிறாள். சிறைச்சாலையிலும் வெளி இடங்களிலும் மணிமேகலை அமுத சுரபியால்     அனைவருக்கும்
உணவிடுகிறாள்.மணிமேகலை காஞ்சி சென்று அறவண அடிகளிடம் ஆசி பெற்று, பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்புகிறாள்.

· மணிமேகலைக்காப்பியத்தின் தனிச்சிறப்புகள்

     புகார், காஞ்சி, வஞ்சி, சாவகம், இரத்தினத் தீவு, மணிபல்லவம் போன்ற இடங்களைப் பற்றி மணிமேகலை புகழ்ந்து உரைக்கிறது.

     இன்று மனித உரிமைகள் பற்றி எங்கும் பேசுகிறோம்.இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை இவை மூன்றையும் மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகிறது.

     அறம்எனப் படுவது யாது?எனக் கேட்பின்
     மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
     உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
     கண்டதில்...

-(ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை, அடிகள் 228-30)

(யாது எனக்     கேட்பின் = எதுவென்று கேட்டால் ; மன்னுயிர்க்கெல்லாம் = உலக உயிர்களுக்கெல்லாம்; உண்டியும் = உணவும்; உறையுள் = இருக்கும் இடம்)

     மணிமேகலை பற்றி முனைவர் வ.சுப.மாணிக்கம் “பரத்தமை ஒழிப்போடு மதுவொழிப்பு, சிறையொழிப்பு, சாதியொழிப்பு என்றினைய சமுதாயச் சீர்த்திருத்தங்களின் களஞ்சியம் இக்காவியம்” என்பார்.

    கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
    உள்ளக் களவும்என்று உரவோர் துறந்தவை
    - (ஆபுத்திரன் நாடு அடைந்த காதை, அடிகள் 77-78)


என்று சமுதாயச் சீர்திருத்தக் காவியமாய் அமைகிறது.

    பசியை நோயாகவும், பாவியாகவும் மணிமேகலைக் காப்பியம் விளக்குகிறது.

     தமிழ்க் காப்பியங்களில் எளிய நடை உடையது மணிமேகலைக் காப்பியமே.

2.2.4 சீவக சிந்தாமணி

     காப்பியத்தின் நால்வகைப் பொருளான அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பனவற்றைத் தருகின்றது.

     சிந்தாமணி, மணநூல் என்று அழைக்கப்படுகிறது.

     ஆசிரியர் திருத்தக்க தேவர்.

     விருத்தம் எனும் பாவில் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் இதுவே.

· இனிய இலம்பகங்கள்

    நாமகள் இலம்பகம் தொடங்கி, முத்தியிலம்பகம் வரையிலான 13 இலம்பகங்கள் மணவினை பற்றிப் பேசுகின்றன

    (1) சீவகன் கல்வி கற்றதைக் கூறுவது - நாமகள் இலம்பகம்
    (2) கட்டியங்காரனை வென்று நாட்டை
     அடைந்தது         - மண்மகள் இலம்பகம்
     (3) சீவகன் ஆட்சியில் அமர்ந்தது - பூமகள் இலம்பகம்
     (4) வீடுபேறு வரக் காதலித்தது     - முத்தியிலம்பகம்

     பிற எட்டு இலம்பகங்கள் சீவகன் திருமணம்     செய்த காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களின் வரலாற்றினைக் கூறுகிறது.

     நண்பன் பதுமுகனுக்கு நந்தகோபன் மகள் கோவிந்தையை மணம் முடித்து வைத்தது கோவிந்தையார் இலம்பகம் எனப்படுகிறது.

· உரை

     சீவகசிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதி உள்ளார். ஜி.யு.போப் திருத்தக்க தேவரைத் தமிழ்க் கவிஞருள் அரசர் என்கிறார்; கிரேக்கக் காப்பியத்திற்கு இணையாகச் சிந்தாமணி திகழ்கிறது என்கிறார்.

· காப்பியக் கதை

     ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன்,மனைவி விசயை மீது அளவு கடந்த காமம் கொண்டு, அரசாட்சியைக் கட்டியங்காரன் என்ற அமைச்சனிடம் ஒப்படைத்தான். அவன் சூழ்ச்சி செய்து மன்னனைக்
கொல்ல முயன்றபோது, மன்னன் கருவுற்றிருந்த தன் மனைவியை
ஒரு மயில் பொறியில் ஏற்றி அனுப்பிய பின் போரில் இறக்கிறான்.

     அவள் இடுகாட்டில் சீவகனைப் பெற்றெடுக்கிறாள். பின் தவம் செய்யச் சென்று விடுகிறாள். கந்துக்கடன் எனும் வணிகன் சீவகனை வளர்க்கிறான். தன் திறமையால் சீவகன் எட்டுப் பெண்களை மணக்கிறான். நாட்டைக் கைப்பற்றி ஆட்சியமைத்து, இல்வாழ்வின் நிலையாமையை நினைத்து ஞானம் பெற்றுத் துறவியாகின்றான்.

· உவப்பான உவமைகள்

     சிந்தாமணி நிலையாமையை இறுதியில் வலியுறுத்தினாலும் கற்பனை வளத்திலும், உவமை நயத்திலும் சிறந்து விளங்குகிறது. வயல்கள் முற்றிச் சாய்ந்துள்ள நெற்கதிர்களைக் கற்பனையாய்ப் பாடுகிறார். கருவுற்ற பாம்பின் தோற்றம் போல் நாற்று வளர்ந்து, மேலல்லார் செல்வம் போல் தலை நிமிர்ந்து சில நாள் நின்று, கற்றறிந்த பெரியார் போலத் தலைகவிழ்ந்து நெற்பயிர்கள் காய்த்தன என்கிறார் திருத்தக்க தேவர்.

     சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
    மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
     செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்தநூற்
     கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே
                 - (நாட்டுவளம், 53)


என்னும்
இப்பாடல் கல்விச் சிறப்பினையும் விளக்குகிறது.

2.2.5 வளையாபதி

    ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
    வைசிய புராணத்தின் 35ஆம் சருக்கம் வளையாபதியைப் பற்றிப் பேசுகிறது.

    புறத்திரட்டு என்னும் தொகை     நூலிலிருந்தும்,     இலக்கண உரைகளிலிருந்தும் எழுபத்து ண்டு செய்யுட்கள்     மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன.

     முனைவர் தெ.பொ.மீ. இக்காப்பியம் சிந்தாமணிக்கு முற்பட்டது என்பார்.

· சமண நூல்

     நிக்கந்த வேடத்து இருடி கணங்களை

எனும் அடி இந்நூல் சமணம் சார்ந்து என விளக்குகிறது என்பர். அறிவன் பற்றிய குறிப்பு இந்நூலில் இடம் பெறுவதாலும் இது சமண நூல் எனலாம்.

· வளையாபதியின் கதை

     நவகோடி நாராயணன் ஒரு வணிகன்.இவன் வேறு சாதிப் பெண்ணை மணக்க, அந்நிகழ்வு அவனது குலத்தோருக்கு வெறுப்பினைத் தருகின்றது. அவ்வெறுப்பினைத் தாங்க இயலா அவன் தன் மனைவியை விட்டு அயல்நாடு சென்றுவிடுகிறான்.அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான்.

· மக்கட்பேறு இல்லாதவன் பற்றி வளையாபதி

     மக்கட்பேறு இல்லாதவன் பெற்ற செல்வத்தால் பயன் இல்லை என்பதை வளையாபதி

     பொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை மேவத்
    துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை
    நறையிலா மாலை, கல்வி நலமிலாப் புலமை, நன்னீர்ச்
    சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.

(பொறை = பொறுத்தல் ; புணர்தல் = இணைதல்; துகில் = ஆடை)

ன்று விளக்குகிறது.

     இந்நூலின் செய்யுட்களை அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் தங்கள்     உரையில் எடுத்தாண்டுள்ளனர்.

2.2.6 குண்டலகேசி

     இது பௌத்தக்காப்பியம்; மறைந்து போன தமிழ் நூல்.

     புறத்திரட்டில் பத்தொன்பது செய்யுட்கள்     மட்டுமே காணப்படுகின்றன.

     ஆசிரியர் நாதகுத்தனார்.

     இதற்குப் போட்டியாக நீலகேசி எழுந்தது.

· குண்டலகேசியின் கதை

     பத்திரை என்ற வணிகர் குலப்பெண் காளன் என்ற கள்வனை நேசிக்கிறாள்.காவலில் இருந்த அவனைத் தன் தந்தை மூலம் மீட்டு மணம் புரிகிறாள். ஒருநாள் பத்திரை சினத்தால் தன் கணவனைக் கள்வன் எனத்
திட்டிவிட அவன் அவளைக
கொல்ல மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். சாகும்முன் அவனை அவள் மும்முறை வலம்வர விரும்ப, அவன் இசைகிறான். அவனைப் பத்திரை கீழே தள்ளிக்கொன்று விடுகிறாள். பிறகு, அவள் வாழ்வை வெறுத்து, துறவு பூண்டு புத்த சமயம் சார்ந்து முக்தி பெறுகிறாள்.

· வாழ்வின் நிலையாமை பற்றிய பாடல்

     பாலகன் இளைஞனாகிறான்,இளைஞன் முதியோனாகிறான்.ஒரு பருவம் செத்துத்தானே அடுத்த பருவத்திற்குச் செல்கிறோம்? அப்போதெல்லாம் அழாத நாம் ஏன் இறப்பிற்கு மட்டும் அழுகிறோம்? என நாதகுத்தனார் வினவுகிறார்.

     பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
    மீளும்இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பு மாகி
    நாளும் நாம் சாகின்றேமால் ; நமக்கு நாம் அழாத தென்னோ?


     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
கலைகளில் எக்கலை சிறந்து விளங்குகிறது?
2.
‘அரசியலில் பிழை செய்தால் அறம் கூற்றமாகும்’
என வலியுறுத்திய காப்பியம் எது?
3.
காப்பியங்களை முன்னோர் எவ்வாறு
வகைப்படுத்தினர்?
4.
பஞ்ச காவிய மரபு எம்மொழி சார்ந்தது?
5.
சிறைச்சாலைச் சீர்திருத்தம், பசிக்கு எதிரான
கலகக்குரல் ஆகியவற்றை வலியுறுத்திய காப்பியம் எது?
6.
எட்டுப் பெண்களை மணந்த மன்னன் யார்?
7. தொடர்நிலைச் செய்யுளின் இரு வகைகள் எவை?
8. பொருள் தொடர்நிலைச் செய்யுளின் இரு
வகைகளாகத் தண்டியாசிரியர் கூறுவன எவை?
9. திங்கள், ஞாயிறு, மாமழை, புகார் ஆகியவற்றைப்
போற்றியவர் யார்?
10. அறத்தையும் இன்பத்தையும் மட்டுமே பாடிய
காப்பியம் எது?
11.

சிலப்பதிகாரத்தின் எந்தக் காதை கடல் பற்றிய
செய்தியினைத் தருகிறது?

12.
சீவகன் எங்குப் பிறந்தான்?