5.0 பாட முன்னுரை

    இலக்கியம் சமூகத்தின் கண்ணாடியாகத் திகழ்கின்றது. வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கின்றது. தன்னிகரற்ற தலைவனையும் தெய்வத்தையும் பாடிய பெருங்காப்பியங்களுள் பல, மக்கள் வாழ்வியலை முன்னிறுத்தவில்லை. சங்க நூல்களும், காப்பிய நூல்களும், பக்தி நூல்களும் பெருகப் பெருக,பாமர மக்களின் மிக இயல்பான எளிமையான வாழ்வியலைத் தமிழுக்குத் தரும் மக்கள் இலக்கியங்கள் தோன்றுவது காலத்தின் கட்டாயமாயிற்று.

     தண்டியலங்காரம் கூறும் இலக்கண நெறியினின்று விலகி, குறவர்களும், உழவுத் தொழில் செய்வோரும் பாட்டுடைத் தலைவர்களாக ஆக்கப்பட்டனர். இலக்கியத்தின் பாடுபொருள் மாறியது. சிலப்பதிகாரத்திலேயே இளங்கோ இப்போக்கைத் தொடங்கி வைக்கிறார். அரசனால் பாதிக்கப்பட்ட வணிகர் குலப்பெண்ணொருத்தி அரசனுக்கு எதிராக நீதி கேட்டு, அவன்இறப்புக்கே காரணமாக அமைவதும் , அவனது நகரையே எரிப்பதும் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகள். அரசர் குலத்தின் மரபில் வந்த இளங்கோவே இப்போக்கினைத் தொடங்கி வைக்கிறார்.அது அரசனுக்கு எதிரான எதிர்ப்புக் குரல் மட்டுமே.

    காலம் மாறும்போதுஇலக்கியத்தின் பாடுபொருளும்,இலக்கிய உத்திகளும் மாறத்     தொடங்கியதன்    தொடர்ச்சியே  சிற்றிலக்கியங்களின் தோற்றமாக அமைகின்றது. இப்பாடம்,  சிற்றிலக்கியம் என்றால் என்ன? அது எந்தக் காலக் கட்டத்தைச் சார்ந்தது? எத்தனை வகைகளாய் அது பகுக்கப்பட்டுள்ளது?  போன்ற செய்திகளை முன்வைக்கிறது.