5.3 சிற்றிலக்கியங்கள் - தோற்றமும் வளர்ச்சியும்

     தமிழில் சிற்றிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றினை முன் வைக்கும் முனைவர் ந.வீ.ஜெயராமன் “தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டு, ஐந்தாம்     நூற்றாண்டில் அந்தாதியாகத் துளிர்த்து, ஏழாம் நூற்றாண்டில் கோவையாகிச் செடியாகி, எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி, ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாகக் கிளைத்து,பதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும், பரணியாகவும் அரும்பி,    பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகி, பதினான்காம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்து, பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாகக் கனிந்தது” என்று குறிப்பிடுகிறார்.

5.3.1 தோற்றம்

     சங்க காலத்திலேயே சிற்றிலக்கியத்திற்கான தோற்றம் தொடங்கியது எனலாம்.


எண் பாட்டு பாடியவர் பாடப் பெற்றோர்
1.
திருமுருகாற்றுப்
படை
நக்கீரர்
குமரவேள்
2.
பொருநராற்றுப்
படை
முடத்தாமக்
கண்ணியார்
கரிகாற் சோழன்
3.
சிறுபாணாற்றுப்
படை
நத்தத்தனார்
நல்லியக் கோடன்
4.
பெரும்பாணாற்றுப்
படை
கடியலூர்
உருத்திரங்
கண்ணனார்
தொண்டைமான்
இளந்திரையன்
5.
மலைபடுகடாம்
(அல்லது)
கூத்தராற்றுப் படை
பெருங்
கௌசிகனார்
நன்னன்


    பத்துப்பாடடில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைகின்றன. அக்காலத்திலேயே ஆற்றுப்படை ஒரு துறையாகவும், தனிப் பெரும் பாடலாகவும் வளர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்று,புதிய இலக்கிய வகைமைகளான காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், நீதி நூல்கள் எனத் தமிழில் உருவாயின.

     பிரபந்தம என்ற சொல்லைத் தமிழில் யாப்பு என்ற சொல்லோடு இணைத்துப் பார்க்கலாம்.இரண்டும் கட்டுதல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றன.

     பாட்டியல் நூல்களின்படி 96 வகைப் பிரபந்தங்களின் பட்டியலைப் பார்த்தால்,அதில் காப்பியம், புராணம், சிறு நூல்கள்என அனைத்தும் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

     பிரபந்தம் என்ற சொல் தமிழில் சிறிய இலக்கியங்களைக் குறிக்கலாயிற்று.

5.3.2 நூல்களின் அமைப்பு

     அளவில் சிறிதாகச் சிற்றிலக்கியங்கள் அமைகின்றன. பல துறை சார்ந்த பெரிய நூல் போல் அமையாமல், ஒரு சிலதுறைகளைப் பற்றிய ஆழமான பார்வை உடையனவாக அவை அமைகின்றன.

     அளவு சுருக்கமானதாக அமைவதால், குறைந்த காலத்தில் படிக்கும் எளிமை உடையனவாக அமைகின்றன.

    வட்டாரச்    சார்புடையனவாகத்    திகழ்கின்றன. காப்பியங்களைப் போல் உலகப் பார்வையை     இவை  பெறுவதில்லை .

     தெய்வத்தை, மன்னனை, வள்ளலைப் புகழ்வதற்காக எழுதப்பட்டன.

     இவற்றுள் பல சிற்றிலக்கியங்கள் தமிழ் மண் சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த கருத்துக்கேளாடு அமைகின்றன.

     பக்தி சார்ந்த சிற்றிலக்கியங்கள் அதிகமாய் அமைகின்றன. 

5.3.3 காலம்

     ஆற்றுப்படை     இலக்கியங்கள் தோன்றிய சங்க  காலத்திலிருந்தே சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றாலும், சிற்றிலக்கியம் உச்ச நிலையில் இருந்த காலத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. “பல்லவர் காலத்தைப் பக்தி இலக்கியக் காலமென்றும் இடைக்காலச் சோழர் காலத்தைக் காப்பியக் காலமென்றும் அதன் மேலோங்கிய தன்மையாற் கூறுகிறோமே, அதுபோல நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கலாம்”என்கிறார் டாக்டர் தமிழண்ணல். அதாவது கி.பி.15, 16, 17ஆம் நூற்றாண்டுகளை நாம் சிற்றிலக்கியக் காலமென்று அழைக்கலாம். நாயக்கர் காலத்தில் தமிழில் சிற்றிலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றி வளர்ந்தன.

5.3.4 வகைகள

     புற்றீசல் போல முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகை தமிழில் இருந்தாலும், அவற்றுள் தலையாயவையாக இருப்பன பதினான்கு வகைகளே ஆகும்.

     (1) ஆற்றுப்படை
     (2) அந்தாதி
    (3) மாலை
     (4) பதிகம்
     (5) கோவை
     (6) உலா
     (7) பரணி
     (8) கலம்பகம்
     (9) பிள்ளைத் தமிழ்
     (10) தூது
     (11) சதகம்
     (12) மடல்
     (13) பள்ளு
     (14) குறவஞ்சி

எனும் 14 வகைகள் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் புகழ் மிக்கனவாய்த் திகழ்கின்றன.

5.3.5 பயன்

     சிற்றிலக்கியங்கள் மூலம் ஓரளவு தமிழ்ப் பண்பாட்டினை, தமிழக வரலாற்றினை அறிய முடிகிறது.

     கற்பனை ஆற்றலைப் பெருக்குவதில் சிற்றிலக்கியங்கள் பேருதவி புரிகின்றன.

     பள்ளு போன்ற சிற்றிலக்கியங்கள் மூலமாக அக்கால மக்களின் சமூக வாழ்வியலை நம்மால் அறிய முடிகிறது.

     பிள்ளைத் தமிழ் போன்ற சிற்றிலக்கியங்கள் அழகியல் தன்மையோடு காணப்படுகின்றன.

     தெய்வங்கள் மீது அமைந்த சிற்றிலக்கியங்கள் மூலம், ஊர் வரலாறு, புராணக் கதைகள், மக்களின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அறியலாம்.

     மொத்தத்தில் சிற்றிலக்கியங்கள் தமிழ் வளர்ச்சிக்குப்   பேருதவி செய்வனவாய் அமைந்துள்ளன.

     அளவிலே சிறியதாயிருந்தாலும் பெரும் சுவையைத் தருவனவாய்ச் சிற்றிலக்கியங்கள் அமைகின்றன.