6.4 கலம்பக வகைமையின் வளர்ச்சி

    பாக்களாலும், உறுப்புகளாலும், பொருளாலும் கலவையாக  விளங்குகின்ற     இலக்கியத்தைக் கலம்பகம்    என்று  குறிப்பிட்டனர்.

    கலம் என்றால் 12.பகம் என்றால் பாதி (6), பன்னிரண்டும்,  ஆறும் என இரண்டையும் உம்மைத் தொகையாக்கி 18  உறுப்புகளை உடைய நூலாகக் கலம்பகம் படைக்கப்பட்டது.  உறுப்புகள் எண்ணிக்கையில் மிகுதலும் உண்டு.

6.4.1 கலம்பக உறுப்புகள்

(1) புய வகுப்பு
(2) தவம்
(3) வண்டு
(4) அம்மானை
(5) பாண்
(6) மதங்கியார்
(7) கைக்கிளை
(8) சித்து
(9) ஊசல்
(10) களி
(11) மடக்கு
(12) ஊர்
(13) மறம்
(14) பிச்சியார்
(15) கொற்றியார்
(16) காலம்
(17) தழை
(18) இரங்கல்
(19) சம்பிரதம்
(20) கார்
(21) தூது
(22) குறம்

முதலிய உறுப்புகளைப் பெற்றுக் கலம்பக இலக்கியம்  அமைகிறது.

· பா வகை

    கலம்பக இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் யாப்பு  வகை ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா வகைகளும்.  தாழிசை, துறை, விருத்தங்கள் ஆகிய பா இனங்கலும்  மடக்கும் இதில் விரவி வரும். அந்தாதித் தொடையால் நூறு  பாடல்கள் வரை பாடப்பெறும்.

6.4.2 கலம்பக இலக்கியங்கள்

    17ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர், சிவப்பிரகாசர்,சைவ  எல்லப்ப நாவலர் முதலிய பலரும் கலம்பகம் பாடியுள்ளனர். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகம்  பாடியதும் இக்காலமே. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நந்திக் கலம்பகமே காலத்தால் முற்பட்டது.  நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், கி.பி. பத்தாம் நூற்றாண்டு     சார்ந்த அமைகிறது. இரட்டையர்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம்,  தில்லைக் கலம்பகம் ஆகிய இரண்டையும் பாடியுள்ளனர்.

· நந்திக் கலம்பகம்

    தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்தி வர்மனைப்  பாராட்டிப் போற்றும் நந்திக் கலம்பகம் புகழ்மிக்க  கலம்பகமாய் அமைகிறது. நந்திவர்மனின் மாற்றாந்தாய் மகன்,  நந்தி மீது வஞ்சம் கொண்டு அறம் வைத்துப் பாடியதே இந்நூல்  என்பர். ஒருவர் இறக்குமாறு எழுத்துக்களை அமைத்துப்  பாடுவது அறம் பாடுதல் எனப்படும். அது தெரிந்தும்  நந்திவர்மன் பந்தலில் அமர்ந்து அரங்கேற்ற நிகழ்வைப்  பார்க்க, இறுதிப்பாடலில் பந்தல் தீப்பிடித்து எறிய அவன்  கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும். சொற்சுவை,  பொருட்சுவை மிக்கதாய் நந்திக் கலம்பகம் அமைகின்றது.  நிலவு தலைவியை வருத்துகிறது. நிலவைப் பழித்து நந்தியைப்  புகழ்வதாக இப்பாடல் அமைகிறது.

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குங்கைத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா வூரிற் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகம்உனக் காகாதே.

(மண்ணெலாம் உய்ய = உலகம் முழுதும் உயரும்படி ;  மழைபோல் வழங்குங்கை = மழையைப் போல வாரி  வழங்கும் கை, பெண்ணிலா ஊரில் = பெண் இல்லாத ஊரில், வேகம் உனக்காகாதே = வேகம் உனக்கு உகந்தது அல்ல)