6.5 பள்ளு இலக்கியத்தின் வளர்ச்சி

சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
     - (பொருள், செய்யுளியல், 233)

எனும் தொல்காப்பிய நூற்பாவில் சேரிமொழி குறிக்கப்படுகிறது.

    உழுதுண்டு வாழ்வோரின் பழக்க வழக்கங்கள் ஒழுகலாறுகள், தொழில் முறை ஆகியவற்றின் அடிப்படையில்  எழுந்தது பள்ளு இக்கியம்.

    சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ஏர்மங்கலம், உழவு  பற்றியதாக அமைகிறது. ‘கோயிலொழுகு’ எனும் நூல் பள்ளுப்  பாட்டுப் பற்றிக் குறிப்பிடுகிறது.

    பன்னிருபாட்டியல் பத்துப் பாடல்களாலான உழத்திப் பாட்டு எனும் சிறு இலக்கியம் பற்றி விளக்குகிறது. 

    காலப்போக்கில் இவையே வளர்ந்து பள்ளு எனும்  தனிச் சிற்றிலக்கிய வகையாக மலர்ந்தன எனலாம்.

6.5.1 பள்ளு இலக்கியத்தின் உட்கூறுகள்

    கடவுள் வணக்கம், பள்ளர் பெருமை, பள்ளியர்  இருவரின் வரலாறு, நாட்டு வளம், மழை வேண்டல்,  மழைக்குறியறிதல், ஆற்று வெள்ளம், பண்ணையார் வருகை,  பள்ளன் தன் செயல்களைக் கூறுதல், மூத்த பள்ளி முறையீடு,  பள்ளனைத் தொழுவில் அடைத்தல், மூத்த பள்ளி அவனை  மீட்டல், காளை அவனை முட்டித் தள்ளுதல், பள்ளிகளின்  புலம்பல், உழவன் எழுதல், விதை வளம் கூறி நாற்று நட்டுப் பயிர் காத்து நெல் அளத்தல், பள்ளியர் ஏசல் எனப்  பாட்டுடைத் தலைவன் பெருமை பாடி நூல் நிறைவடையும்.

    சிந்து, விருத்தம் ஆகிய யாப்பு அமைப்பில் பாடப்படும்.

6.5.2 பள்ளு நூல்கள

    கி.பி.16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசர்  இயற்றிய திருவாரூர்ப் பள்ளு காலத்தால் முற்பட்டது.

    கி.பி. 1680இல் தோன்றிய முக்கூடற்பள்ளு தாமிரபரணி  சார்ந்து வாழும் மக்களின் வாழ்வியலை முன் வைக்கிறது.  தாமிரபரணி, சிற்றாறு, ஒரு காட்டாறு என மூன்று ஆறுகள்  கலக்குமிடமாய்த் திகழும் முக்கூடலாம் சீவலப்பேரி, களமாக  அமைகிறது.

     இந்நூலில், மருத நில வாழ்க்கையோடு பின்னிக்கிடக்கும்  சித்திரக் காலி, வாலான், சிறை மீட்டான் என மாட்டின் பல வகைகளும, மணல்வாரி, செஞ்சம்பா, கருஞ்சூறை போன்ற  நெல்வித்தின் பலவகைகளும், பள்ளன் கூற்றாய் இடம்  பெறுகின்றன.

    மூத்த பள்ளி திருமாலையும், இளைய பள்ளி சிவனையும்  வணங்க, இருவரின் முரண்பாடு பள்ளு இலக்கியச் சுவையைக் காட்டுகிறது.

இளைய பள்ளி : கற்றைச் சடை கட்டி மரவுரியுஞ்சேலைதான்
         - பண்டு கட்டிக்கொண்டான்    உங்கள்
        சங்குக் கையனல்லோடி !

மூத்த பள்ளி : நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்ற
        மாட்டாமல் - வாரி நஞ்சையெல்லாம்
        உண்டான் உங்கள் நாதனல்லோடி

    கடிகை முத்துப் புலவரின் வடகரைப் பள்ளு,  கவிகுஞ்சர பாரதியின் இராசைப் பள்ளு ஆகியன 18, 19ஆம்  நூற்றாண்டுகளில் எழுந்தன.

    வையாபுரிப் பள்ளு, குற்றாலப் பள்ளு ஆகிய  நூல்களும் இவ்வகையைச் சார்ந்தன.