6.6 உலா இலக்கிய வகைமையின் வளர்ச்சி

    வீதி வழியே உலா வரும் தெய்வத்தைக் கண்டு பெண்கள்  மயங்குவதாகப் பாடுதல் நாட்டுப் பாடல் மரபாக அமைகிறது.  அதுபோல, அரசர்கள் உலாவரும் போது அவர்களைக் கண்டு பெண்கள் மயங்குவதாகப் பாடுதலும் உலா மரபானது.

6.6.1 உலா இலக்கியத்தின் தோற்றம்

ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
        - (தொல்காப்பியம்-1031)

எனும் தொல்காப்பிய நூற்பா, உலா இலக்கியத்தைப் பற்றிக்  குறிப்பிடுவதாகக் கூறுவர்.

    தமிழ்க் காப்பியங்களில் தலைவன் உலாவரும் செய்திகள்  உண்டு.

    ஐந்து வயது முதல் நாற்பது வயதுவரை உள்ள பெண்கள்  உலா வரும் தலைமகனைக் கண்டு காதல் கொள்ளுவதாகப்  பாடும் மரபு உண்டு.

    முத்தொள்ளாயிரம்     எனும் இலக்கியம் உலா  இலக்கியத்தின் தோற்றத்தினை அழகாகக் காட்டுகிறது.  வெளியே அழகன் உலாச் செல்வது, தம் இல்ல மகளிருக்குத்  தெரிந்து விடக்கூடாது என நினைத்து, தாய்மாரெல்லாம் தத்தம்  வீட்டுக்கதவினை அடைத்துத் தாழிட, மகளிர் திறந்து அவனை  நோக்கக் கதவின் குடுமி தேய்ந்தது என அவ்விலக்கியம்  பாடுகிறது .

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு
.

6.6.2 உலா இலக்கியங்கள்

    சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கயிலாய ஞான உலா, ஆதி உலா என அழைக்கப் பெறும் சிறப்புக்கு உரியது. தெய்வ உலா என அழைக்கப் பெறும் இவ்வுலாவே  காலத்தால் முற்பட்டது.

    சிவலோகத்தில் பக்தர்கள் இறைவனிடம் வேண்டிக்  கொண்டபடி, சிவபெருமான்     உலா வந்து அவர்களை மகிழ்விப்பதாய் இவ்வுலா கூறுகிறது.

    கி.பி.11ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் மீது,  நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை புகழ்மிக்கது.

    கி.பி.12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் இயற்றிய  மூவருலா குறிப்பிடத்தக்கது.

பிற உலாக்கள்

எண்

உலா இலக்கியப் பெயர்
ஆசிரியர்
காலம்
1 திருவானைக்கா உலா
காளமேகப் புலவர்
கி.பி.14-15
2 திருவெங்கை உலா
சிவப்பிரகாச
சுவாமிகள்
கி.பி.17
3 திருப்பூவணநாதர் உலா
கந்தசாமிப் புலவர்
கி.பி.17
4 ஏகம்பநாதர் உலா
இரட்டையர்
கி.பி.17
5 கனகசபை நாதன் உலா
அம்மையப்பர்
கி.பி.17
6 உண்மை உலா,
சண்முகர்உலா
ஆறுமுக மெய்ஞான
சிவாச்சாரியார்
கி.பி.17-18
7 மெய்கண்ட வேலாயுத
உலா
அழகுமுத்துப்
புலவர்
கி.பி.18
8 திருத்தணிகை உலா
கந்தப்பையர்
கி.பி.18
9 செப்பறை உலா
அழகிய கூத்த
தேசிகர்
கி.பி.19
10 நெல்லை வேலவர் உலா
சரவணமுத்துப்
புலவர்
கி.பி.19
11 கோடீச்சுர உலா,
தஞ்சைப் பெருவுடையார்
உலா
சிவக்கொழுந்து
தேசிகர்
கி.பி.19
12 காமராசர் உலா
ஆதித்தர்
கி.பி.20
13 தென்புதுவை
மணிவண்ணன் உலா
நெ.அப்புவையங்கார் கி.பி.20