1.6 பிற நூல்கள்    

    வைணவர்கள் இராமாயண, பாரதக் கதைகளை நாட்டில் பரப்பி, திருமால் வழிபாட்டு நிலைகளை (வைணவ நெறியை) மேம்படுத்தினர். அதே போல, சைவர்கள் சிவபெருமானின் திருவிளையாடல்களைத் தொகுத்து, புராணங்களாக வெளிப்படுத்திச் சைவ வழிபாட்டு நெறி விளங்கச் செய்தனர். அவ்வகையில் தமிழில் முதன் முதலாகத் தோன்றிய நூல் கல்லாடம் ஆகும். அதன் ஆசிரியர் கல்லாடர்.

    கல்லாடம் கற்றவனிடம் சொல்லாடாதே என்னும் பழமொழித் தொடரே அந்நூலின் பெருமையை விளக்குவதாகும்.

    அகத்துறை இலக்கியமாக ஆசிரியப்பா யாப்பு வகையில் 100 செய்யுட்கள் உடையதாகப் பாடப்பட்டது. அந்நூல் பிற்காலத்தில் பிற திருவிளையாடற் புராண நூல்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.

    பல்லவர் காலத்தில் வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்த காரணத்தால், வடமொழி தழுவிய நூக்லள் பல தமிழ்நாட்டில் எழுதப் பெற்றன. மணிப்பிரவாள நடையும் மேலோங்கியது. சைவ வைணவரோடு, சமணரும் பௌத்தரும் போட்டியிட்டு, தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்குச் சில காப்பியங்களையும், சில புராணங்களையும் இயற்றியுள்ளனர்.

    எடுத்துக்காட்டு : பெருங்கதை, மேருமந்திர புராணம், சாந்தி புராணம், ஸ்ரீபுராணம், சீவகசிந்தாமணி, சூடாமணி, வளையாபதி, குண்டலகேசி, நீலகேசி முதலியன.

     இவற்றுள் சில காப்பியத்திற்குரிய உறுப்புகள் யாவும் நிரம்பப் பெற்று, கவிச்சுவை உடையனவாய் இலக்கிய உலகில் நிலைபெற்றன. சில நூல்கள் சமய வாதங்களும் சமயக் கொள்கைகளும் மிகுந்து இலக்கிய நயம் குன்றியமையால் காலப்போக்கில் மறைந்து போயின.

    பிற்காலத்தில் நாக குமார காவியம், யசோதர காவியம் போன்ற நூல்களும் சமணர்களால் எழுதப்பட்ட காப்பியங்களாகும். கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவ சமய இலக்கியம் சோழர்களின் ஆதரவு காரணமாக வளர்ச்சி கொண்டது. இக்காலத்தில் தான் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் ஒன்பதாம் திருமுறையும் தொகுக்கப் பெற்றது.

    நம்பியாண்டார்     நம்பி     மூலம்      திருமுறைகள் தொகுக்கப்பட்டன. அதற்கு அக்காலத்தில் ஆட்சி புரிந்த சோழ மன்னன் பேருதவி புரிந்திருக்கின்றான். அதனாலேயே திருமுறை கண்ட சோழன் என்று சிறப்பிக்கப் படுகின்றனான்.

     பிற்காலத்தில் நக்கீரர், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி போன்றோர் பாடிய பாடல்கள் பதினோராம் திருமுறையாகவும் சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம பன்னிரண்டாம் திருமுறையாகவும் அமைக்கப்பட்டது.

1.6.1 சிற்றிலக்கியங்கள்

    பக்தி இயக்கத்தின்போது, சைவ, வைணவ சமயங்களில் தோத்திர நூல்கள் வெளிவந்ததனைக் கண்டோம். அந்த நூல்களில் முகிழ்த்த சில கவிதைத் துளிகள் பின்னால், தனித்தனி மலர்களாக - சிற்றிலக்கிய வகையாகப் பூத்தன.

  • திருப்பல்லாண்டு

  •     பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய தேவார, திருவாசக, திவ்வியப் பிரபந்தங்களில் சான்றோர்கள் புதிய வடிவமைப்புகளை அமைத்துப் பாடியுள்ளனர். அந்த வடிவமைப்புகள் பிற்காலத்தில் சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெறுவதற்குக் காரணமாய் இருந்தன என்று பார்த்தோம். சில சான்றுகளைப் பார்க்கலாம். பெரியாழ்வார் திருமாலைக் குறித்து, நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடிய திருப்பல்லாண்டும், சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டும் புதிய பாடல் வகையாகும். பாடுவார், பணிவார், பல்லாண்டு இசைகூறு பத்தர்கள் என்னும் அப்பர் தேவாரத் தொடர், முற்காலத்திலேயே பல்லாண்டு பாடும் வழக்கம் இருந்தமையை நமக்குத் தெரிவிக்கிறது.     

  • திருப்பள்ளியெழுச்சி

  •     தொல்காப்பியர் கூறும் துயில் எடை நிலை என்பதிலிருந்து திருப்பள்ளியெழுச்சி என்னும் செய்யுள் வகை ஏற்பட்டதாகச் சான்றோர் கருதுவர். திருப்பள்ளியெழுச்சி வைணவத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரால் பாடப்பட்டது. சைவத்தில் மாணிக்க வாசகரால் பாடப்பட்டது. இவ்விரண்டும் பத்துப் பத்துப் பாடல்களாக அமைந்துள்ளன.

  • பாவைப்பாட்டு

  •     நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவையும், சைவ சமயத்தில் மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும் குறிப்பிடத் தக்கவை. பரிபாடலில் கூறப்படும் பாவை நோன்பின் அடிப்படையில், அல்லது வரலாற்று நிலையில் மகளிர் விளையாடும் விளையாட்டு நிலையிலிருந்து இச்செய்யுள் வகை வளர்ந்து உருப்பெற்றது எனலாம்.

  • திருஅம்மானை

  •     திருவம்மானை,         திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல் போன்றவை மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் மகளிர் விளையாட்டு வகைகளிலிருந்து தோற்றம் பெற்றவை எனலாம்.

  • அந்தாதி

  •     அந்தம் + ஆதி = அந்தாதி. ஒரு பாடலின் இறுதி எழுத்து, தொடர் அல்லது அசை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, அடுத்த பாடலின் தொடக்கமாக     அமைந்து 100     பாடல்கள் வெண்பாவினாலோ அல்லது கட்டளை கலித்துறையினாலோ பாடப்படும் செய்யுள் வகையாகும். தொல்காப்பியர் இதனை விருந்து என்னும் வகையில் அடக்குவர். காரைக்கால் அம்மையார் அற்புதத்திருவந்தாதி, நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் அமைந்துள்ள முதல் திருவந்தாதி முதலான 5 திருஅந்தாதிகள், பிற்காலத்தில் அந்தாதி வகை தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்தன எனலாம்.

        கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, அற்புதத் திருவந்தாதி, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய மூன்றும் வெண்பாக்களால்     ஆனவை. பொன்வண்ணத்தந்தாதி, திருஏகம்பமுடையார்     திருவந்தாதி,     திருத்தொண்டர் திருஅந்தாதி (89 பாடல்கள்), ஆளுடைய பிள்ளையார் திருஅந்தாதி ஆகியவை கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. நாலாயிரத்தில் அமைந்துள்ள 5 திருவந்தாதிகளும் வெண்பா யாப்பில் அமைந்தவை. இவை, பிற்காலத்தில் அபிராமி அந்தாதி, புவனேசுவரி அந்தாதி, சிவப்பிரகாசரின் நிரோட்டக யமக அந்தாதி முதலான அந்தாதிகளும் வழிகாட்டியாக அமைந்தவை எனலாம்.

  • கோவை

  •     கோவை ஓர் அகப்பொருள் இலக்கியம். மாணிக்க வாசகர் இயற்றிய திருக்கோவையார், கோவை இலக்கியங்களில் தன்னிகரற்று விளங்கும் ஓர் பக்தி இலக்கியம். பாண்டிய அரசன் நெடுமாறனைப் புகழ்ந்து எழுதப்பட்ட பாண்டிக் கோவை (300 பாடல்கள்) என்னும் நூல் கி.பி. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்நூல் தற்போது கிடைக்கப் பெறவில்லை. திருக்கோவையாருக்கு அடுத்த நிலையில் கோவை நூல்களில் இலக்கிய வாழ்வு பெற்றது பொய்யாமொழிப் புலவர் இயற்றிய ஞ்சைவாணன் கோவையாகும். நம்பியகப் பொருள் என்னும் அகப்பொருள் இலக்கண நூலின் ஒவ்வொரு துறைக்கும் பொருத்தமான எடுத்துக்காட்டாக, தஞ்சைவாணன் கோவைப் பாடல்கள் அமைந்துள்ளன.

  • பரணி

  •     சங்க காலத்திய வீரத்தையும், காதலையும் ஒருங்கிணைத்துப் பாடப்படும் ஒரு புதிய இலக்கிய வகை பரணியாகும். அவ்வகையில் செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி, பரணி இலக்கிய வகையில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. தாழிஐச என்னம் செய்யுள் வகையால் இந்நூல் இயற்றப்பட்டது. ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி, தக்கன் வேள்வியைச் சிதைத்துப் பெருமை கொண்ட சிவபெருமானின் மேன்மையை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது.

  • உலா

  •     கோயிலில் உள்ள தெய்வம், அலங்காரச் சிறப்புகளுடன் பரிவாரங்கள் சூழப் புறப்பட்டு, பெரிய தெருக்களில் வலம் வருவதுண்டு. அப்பொழுது தெய்வத்தைப் போற்றி, புகழ்ந்து பாடுவது வழக்கமாக இருந்தது. இதனையே உலா என்னும் இலக்கிய வகையாகப் பிற்காலத்தில் அரசனுக்கு அமைத்துப் பாடலாயினர். சேரமான் பெருமாள் நாயனார். ஒன்பதாம் நூற்றாண்டில் பாடிய திருக்கயிலாய ஞான உலா முதன்முதலில் தோன்றியதாகும். அதற்கு ஆதி உலா என்று மற்றொரு பெயரும் உண்டு. சேரமான் பெருமாள்     நாயனார் திருவாரூர் மும்மணிக்கோவை, பொன்வண்ணத்தந்தாதி, திருஅந்தாதி முதலான பல நூல்களையும் பாடியுள்ளார்.

        பதினோராம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் மீது நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடை பிள்ளையார் திருவுலா மாலையும், ஒட்டக்கூத்தர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றிய மூவருலாவும் குறிப்பிடத் தக்கனவும் பெருமைக்குரியனவுமாகும். திருவாரூர், திருப்பூவணம், மதுரை, திருவானைக்கா, திருக்காளத்தி முதலான தலங்களின் தெய்வங்களுக்கும் உலா நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

  • தூது

  •     தூது என்பது அரசன் ஒருவன், மற்றோர் அரசனுக்கு ஒருவர் வாயிலாகத் தகவல் சொல்லி அனுப்புவது ஆகும். பழங்காலத்தில் இருந்து வந்த பழக்கம் இது. அதியமானுக்காக, தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றது குறிப்பிடத் தக்கதாகும். காலப்போக்கில் அகப்பொருள் இலக்கியமாக, சங்க இலக்கியத்தில் தனிப் பாடலாகச் சில தூதுப் பாடல்கள் மலர்ச்சி பெற்றன. பிறகு கடவுளிடம் தூது அனுப்பும் முறையில் ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடலிலும் பக்திச் சுவை குன்றா வண்ணம் தூதுப் பாடல்கள் அமைந்தன. உமாபதி சிவாசாரியார் என்னும் சைவச் சான்றோர் தம் ஆசிரியரிடம் தம் நெஞ்சையே தூதாக அனுப்பியதாக ஒரு நூல் அமைத்துப் பாடினார். அது நெஞ்சு விடு தூது ஆகும். பலபட்டடைச் சொக்கநாதரின், அழகர் கிள்ளைவிடு தூது மிகவும் போற்றத்தக்க நூல். யூனித்த சிறப்புடைய தமிழ்விடு தூது நூலை இயற்றியவரின் பெயர் தெரியவில்லை. இரண்டு இரண்டு பாடல் அடிகள் (கண்ணிகள்) கொண்டு கலிவெண்பாவால் இத்தூது இலக்கியம் பாடப்பெறும்.

  • பிள்ளைத் தமிழ்

  •     தனக்கு விருப்பமான தெய்வத்தை, வள்ளலை, அரசரைக் குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவங்களில் அமைத்து 100 பாடலகள்     கொண்டதாய்ப்     பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.     இத்தகைய சிற்றிலக்கியம் வளர்வதற்கு அடிப்படையாய் அமைந்தவை ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் எனலாம். பெரியாழ்வார் தாலப்பருவம், செங்கீரைப்பருவம், சப்பாணிப் பருவம், தளர்நடைப் பருவம் (வருகை) என்னும் தலைப்புகளில் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடியுள்ளார். திருமங்கையாழ்வார் கண்ணனை, சப்பாணி கொட்ட வேண்டிப் பாடுகின்றார். (பெரிய திருமொழி, 10.5) கண்ணனைப் பற்றி இவ்வாழ்வார்கள் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் தோன்றுவதற்கு அடிப்படை எனலாம்.

    1.6.2 தலபுராணங்கள்

        பக்தி இலக்கியத்தின் விளைவாக இராமாயண, பாரதக் கருத்துகளை மக்கள் மனத்தில் வேரூன்றச் செய்தனர் சான்றோர்கள். பக்திப் பாடல்களில் பொருளாழத்தையும், பல்வகை நயங்களையும் மணிப்பிரவாள நடையில் உரைகள் எழுதி, உவமைகள் காட்டி விளக்கமுறச் செய்தனர். சைவத் துறையில் சைவ சமய சாத்திர நூல்கள் தோற்றம் பெறலாயின. சமயத் தொடர்பான வாதங்களையும் கருத்துகளையும் எடுத்துரைப்பதற்கு வடநூல்களின் கதைகளையும் வடமொழி மரபுகளையும், வடசொற்களையும் மிகுதியாக கலந்து நூல்கள் எழுதினர். ஸ்ரீபுராணம் என்னும் சமண நூல் அத்தகையது. வடமொழியிலுள்ள புராணங்களை, தமிழில் எழுதும் முயற்சியும் வளர்ந்தது. அவ்வகையில் தோற்றம் பெற்றது கந்தபுராணம். கச்சியப்ப சிவாச்சாரியார் இதனை எழுதியுள்ளார்.

        செவ்வைச் சூடுவார் பாகவதத்தை 5,000 செய்யுள்கள் கொண்ட நூலாகச் செய்தார். அரசகேசரி என்பவர் காளிதாசரின் இரகுவம்சத்தை ஏறத்தாழ 2480 பாடல்களில் பாடினார். வாமனமுனிவர் என்பவரால் மேரு மந்தர புராணம் என்னும் சமண நூல் இயற்றப்பட்டது. பிறகு பரஞ்சோதி முனிவர், பெரும்பற்றப் புலியூர் நம்பி, வேம்பத்தூரார் போன்றவர்கள் மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களை விளக்கி நூல்கள் இயற்றினர். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம் மிகவும் சுவையானது ; பலராலும் விரும்பிப் படிக்கப்படுவது.

        கி.பி.14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவம் என்பவர் கோயிற்புராணம் என்னும் தலபுராணம் பாடினார். அதனை அடியொற்றி, தருமபுர மடத்தைச் சார்ந்த புலவர்கள் திருமழபாடி, திருவொற்றியூர் முதலான பல தலங்களுக்குப் புராணங்கள் பாடினர். சேது புராணம், காசிக் காண்டம், தணிகைப் புராணம், திருக்கூவப் புராணம் முதலான நூல்கள் சிறந்த தல புராண நூல்கள் ஆகும். மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மிகுதியான தலங்களுக்குத் தலராணம் பாடியுள்ளார். பக்திச் சுவை பொருந்தியதாக கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் பல தல புராணங்கள் இயற்றிப் பெருமை பெற்றவர் சைவ எல்லப்ப நாவலர்.

        ஒரு புதிய இலக்கிய வகை தோன்றுவதற்கும் ஊர்ச்சிறப்பு, மூர்த்திச் சிறப்பு, தீர்த்தச் சிறப்பு (குளம், ஆறு) ஆகியவற்றை விளக்குவதற்கும் தலபுராண நூல்கள் மிகவும் பயன்பட்டன. இறையருளை வேண்டிச் செல்லும் அடியார்கள், இத்தல புராண நூல்களின் வாயிலாக இறைவனுடைய பெருமையை உணர்ந்து பக்தியில் திளைத்தனர்.