3.1 சமயஞ்சார்ந்த சிற்றிலக்கியங்கள்

    சமய நூல்கள் இறைவனைப் போற்றிப் புகழ்பவை. பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய சமயநூல்கள் பக்தி இலக்கியமாயின. அவற்றுள் இறைவனைப் போற்றுவதற்குப் பல்வேறு இலக்கிய உத்திகளைப் பெரியோர் பயன்படுத்தினர். அவ்உத்திகளையே வளர்த்துத் தனி இலக்கியமாக அமைத்தனர் பின்னால் வந்த புலவர்கள். அவ்வாறு அமைந்தவையே சிற்றிலக்கியம் எனப் பெற்றன.

3.1.1 கோவை     

    ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வத்தால் தம்முள் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு, பின்பு கற்பு வாழ்க்கையில் ஒன்றி இல்லறம் நடத்தும் இனிய நிகழ்ச்சிகளைக் கோத்துத் தரும் நூலே கோவை எனப்படும். அகப்பொருள் செய்திகளை அடிப்படையாகக் கொண்டமையால் இது ‘அகப்பொருள் கோவை’ என அழைக்கப்படும். ஐந்து திணைகளின் நிகழ்வுகளை நிரல்படக் கூறுவதால் இதனை, ‘ஐந்திணைக்கோவை’ எனவும் அழைப்பார்கள்.

    கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் 400 பாடல்களைக் கொண்டு பாடுவது ‘கோவை’ என்னும் சிற்றிலக்கியமாகும்.

    சிற்றிலக்கிய வகைகளுள் கோவை என்னும் இலக்கியம் எளிதில் பாட இயலாத ஒரு நூலாகும். கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பு எழுத்தெண்ணிப் பாடுவதாகும். இவ்வருமை கருதியே ‘யாவையும் பாடிக்கோவை பாடு’ எனும் வழக்கு மொழியும் வழங்கியுள்ளமையினைத் தெரிந்துணரலாம்.

    இக்கோவை இலக்கிய வகையே இறைவனுக்கு உகந்த ஒன்றாக உள்ளது எனலாம். ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என இறைவன்  மாணிக்கவாசகரிடத்தில் வேண்ட, அவர் திருக்கோவையார் என்னும் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடியுள்ளார். இதனாலேயே இந்நூலைக் ‘இராசாக் கோவை’ என்றும் சிறப்பிப்பர்.

    தலைவியை இயற்கைப் புணர்ச்சியின் மூலம் சந்தித்துப் பிரிந்த தலைவனின் மெலிந்த நிலைகண்டு பாங்கன் அந்நிலைக்குரிய காரணம்  இதுவா?     இதுவா?     என     வினவுவதைத் திருக்கோவையாரில்  பின்வருமாறு     அமைத்துள்ளார் மாணிக்கவாசகர்.

சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோஅன்றி யேழிசைச் சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென் கொலாம் புகுந்தெய்தியதே

                 (20)

    இராசாக்கோவை என்னும் திருச்கோவையாருக்கு அடுத்து, ‘மந்திரிக்கோவை’ என்று சிறப்பித்துக் கூறப்படுவது திருவெங்கைக் கோவையாகும். இந்நூலைப் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகள் இவர் பதினேழாம் நூற்றண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.

    மேலும் சோமேச்சுரக்கோவை, திருவாரூர்க்கோவை, சீர்காழிக்கோவை, குன்றத்தூர்க்கோவை, திருவாவடுதுறைக் கோவை,     மயூரகிரிக்கோவை     முதலான     நூல்கள் சிறப்புக்குரியனவாம்.

    அமிர்த கவிராயர் ‘நாணிக்கண் புதைத்தல்’ என்னும் ஒரு துறையை ஒட்டியே 400 பாடல்கள் பாடியுள்ளார் என்பதும் குறிக்கத்தக்கது. அதனாலேயே அது ஒருதுறைக் கோவை என்று பெயர் பெற்றது.

    சுருங்கக் கூறின் சங்ககாலத்திற்குப் பின் சிறப்பான நிலையில் அகப்பொருள்களைப் பாடும் கோவை நூல்களைத் தமிழறிஞர்கள்சங்க இலக்கிய வாயில் என்பார்கள். காலம், இடம், காட்சி, பேச்சு,  அங்கம் முதலாயின எல்லாம் அமைவதால், நாடகச் சிற்றிலக்கியம்என்று இதனைக் கூறுவது குறிக்கத்தக்க ஒன்றாம்.

3.1.2 ஆற்றுப்படை

    பரிசில் பெற்ற ஓர் இரவலன், தன் எதிரே வரும் வறுமைப்பட்ட இரவலனை விளித்து, தான்பரிசில் பெற்று வந்த வள்ளலின் சிறப்பையும் வீரத்தையும் கொடைப்பண்பையும் விளக்கி, நீயும் சென்று பரிசில் பெறலாம் எனக்கூறிச் செல்வதற்குரிய வழி வகைகளைக் கூறி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படையாகும்.    இவ்வாற்றுப்படை     என்னும்     சிற்றிலக்கிய  வகைக்குத்தொல்காப்பியத்தில இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது (தொல்.1037). பத்துப்பாட்டில் செம்பாதி ஆற்றுப்படைகள். இருப்பினும் பக்தி சார்ந்தது திருமுருகாற்றுப்படை மட்டுமே. இதனால் தமிழில் சிற்றிலக்கியம் என்ற வகை மிகப் பழங்காலத்திலேயே தோன்றிவிட்டது     என்று  கூறலாம்.     இடைக்காலத்தில் ஆற்றுப்படைகள் வளரவில்லை. பிற்காலத்தில் அகவல் யாப்பில் அமைந்த ஆற்றுப்படைகள் கிடைத்துள்ளன.

நூல் ஆசிரியர் காலம்
திருத்தணிகையாற்றுப்படை கச்சியப்பமுனிவர் 18ஆம் நூற்.
நெஞ்சாற்றுப்படை திருச்சிற்றம்பலத்தம்பிரான் 19ஆம் நூற்.
இறையனார் ஆற்றுப்படை பின்னத்தூர் நாராயணசாமி 19-20ஆம் நூற்.
ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி ஆற்றுப்படை தே.ஆ. சீனிவாசன் 20ஆம் நூற்.

3.1.3 அந்தாதி, கலம்பகம், சதகம்

    ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர் அல்லது அடி இவற்றில் யாதானும் ஒன்று அடுத்த பாடலின் முதலில் வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். இறுதிப்பாடலின் முடிவு, முதற்பாடலின் தொடக்கமாக இணையும்படி பாடுவதே     மண்டலித்து முடிவதென்பர். இது யாப்பு அடிப்படையிலான திறன்களில் ஒன்று. அந்தாதி என்னும் சிற்றிலக்கியம் இன்ன பொருளைத்தான் பாட வேண்டும் என்ற வரையறையில்லை. பெரும்பாலும் விருத்த யாப்பே இதன் வடிவமாகும். ‘அந்தம் முதலாத் தொடுப்பதந்தாதி’ எனக் காரிகை இலக்கணம் கூறுகிறது. இவ்விலக்கியம் வெண்பா, கட்டளைக் கலித்துறை யாப்பால் பாடப்பெறும். இவ்வந்தாதி கலம்பகத்தின் ஓர் உறுப்பாக வருதல் குறிப்பிடத்தக்கது.

    காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியே முதல் திருவந்தாதி என்பர். கி.பி. 5, 6 ஆம் நூற்றாண்டுகளில் இவ்விலக்கிய வகை முகிழ்த்து, மலர்ந்து மணம் பரப்பியது. முதலாழ்வார்கள் மூவரும் பாடிய நூற்றந்தாதிகள் மூன்றும் இக்காலத்து எழுந்தவையே.

    பதினோராம்     திருமுறையில் அற்புதத் திருவந்தாதி, கயிலைபாதி     காளத்திபாதி அந்தாதி, சிவபெருமான் திருவந்தாதி இரண்டு, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி. பாடிய பொன்வண்ணத்தந்தாதி ஆக எட்டு அந்தாதிகள் உள்ளன. மற்றும் திருவாசகத்தில் அந்தாதி என்ற பெயரைப் பெறாமல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, கோயில் திருப்பதிகம், யாத்திரைப் பத்து முதலியன அந்தாதி முறையில் அமைந்துள்ளன.

    வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள் 18 நூல்களைப் பாடினார். சிவப்பிரகாசர், திருச்செந்தில் நிரோட்டகயமக அந்தாதி பாடினார். வரதுங்கராம பாண்டியர் பாடியது  திருக்கருவைப்  பதிற்றுப்பத்தந்தாதியாம். இந்நூல் ‘குட்டித்திருவாசகம்’ என்று சிறப்பாக அழைக்கப்படும். இதுவரை 250 அந்தாதி நூல்கள் கிடைத்துள்ளன. அந்தாதியே சிற்றிலக்கிய வகையில் எண்ணிக்கையில் மிகுதியானதாகும்.

  • கலம்பகம்
  •     ‘கதம்பம்’ என்ற சொல்லுடன் தொடர்பானது கலம்பகம் எனும் சொல் என்பர். பல்வேறு உறுப்புகளைக் கொண்டு அகமும் புறமுமாய்க் கலந்து பல்வேறு பாவினங்களால் பாடப்படுவதால் இப்பெயர் பெற்றது என்பர். கலம் + பகம் எனப்பிரித்து கலம் என்றால் பன்னிரண்டு என்றும், பகம் என்றால் அதில் பாதி  என்றும் கொண்டு,பதினெட்டு உறுப்புகளை உடையது கலம்பகம் என்று ஒரு சாரார் விளக்கம் கூறுவர். இதன் உறுப்புகள் நூல்தோறும் மிகுந்தும் குறைந்தும் வருகின்றன. புயவகுப்பு, தவம், வண்டு, அம்மானை, பாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், விளி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், தூது, குறம், பிச்சியார், கொற்றியார் முதலியன உறுப்பு வகைகள். ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பாக்களும், தாழிசை துறை விருத்தங்களும், மடக்கும் இதில் விரவி வரும் பல வகை யாப்புகளாகும். இஃது அந்தாதித் தொடையால் நூறு பாடல்கள்வரை பாடப்பெறும்.

        தமிழில் முதன்முதலில் தோன்றியது நந்திக்கலம்பகம் இரண்டாவது கலம்பகம் 10ஆம் நூற்றாண்டில் எழுந்த ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் ஆகும். இதனை நம்பியாண்டார் நம்பி எழுதினார். இக்கலம்பகத்தில் தான் முதன்முதல் களி என்னும் உறுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடியது திருவரங்கக் கலம்பகம். இந்நூலில் தீயில் காய்ச்சிய இரும்பின்மீது நீரை தெளித்தால் அது காணாது போவது போன்று அரங்கனோடு என் மனமும் கலக்க வேண்டும் என்பதை

        அரும்புண்ட ரீகத் தடியிணைக்கென் னெஞ்ச
        மிரும்புண்ட நீராவ தென்றோ - விரும்பி
        யறந்திருந்துங் கோயிலரங்கா வுனைநான்
        மறந்திருந்து மேல்பிறவா மல்

    என்று பாடியுள்ளார்.

         மதுரைக் கலம்பகம், குமரகுருபரரால் பாடப்பட்டதாகும். 102 பாக்களைக் கொண்டுள்ளது. சிவன் மீது கொண்ட காதலின் துன்பம் தாங்க ஒண்ணாது மடல் ஏறத் துணியும் பெண்ணின் பண்பு,

    இடங்கொண்ட மானும் வலங்கொண்டவொண் மழுவும்
                     மெழுதும்
    படங்கொண்டு வந்தனையா னெஞ்ச மேயினிப்பங்கயப் பூந்
    தடங்கொண்ட கூடற் சவுந்தர மாறர் பொற்றாள் பெயர்த்து
    நடங்கொண்ட தோர்வெள்ளி மன்றே றுதுமின்று
                     நாளையிலே
                         (137)

        எனும் பாடல் குறிப்பிடுகிறது.

        சிவப்பிரகார சுவாமிகள் பாடியது திருவெங்கைக் கலம்பகம்; இரட்டைப் புலவர்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம் என இரண்டு கலம்பக நூல்களைப் பாடியுள்ளனர்.

  • சதகம்
  •     நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் ஆகும்.  முதல் சதகம் , திருவாசகத்தில் இடம் பெறும் திருச்சதகம். இறைவனைப் போற்றி வழிபடுவன பக்திச் சதகங்கள். சமயக் கொள்கைகளை, சாத்திர நூல்கள் போன்று கூறுவன தத்துவச் சதகங்கள், வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறுவன வாழ்வியல் சதகங்கள் ஆகும்.

    நூற்பெயர் நூலாசிரியர் காலம்
    திருச்சதகம் மாணிக்கவாசகர் 9ஆம் நூற்றாண்டு
    வைராக்கிய சதகம் சாந்தலிங்க சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டு
    கைலாசநாதர் சதகம் சிதம்பரவாணர் 18ஆம் நூற்றாண்டு
    தண்டலையார் சதகம் சாந்தலிங்க கவிராயர் 18ஆம் நூற்றாண்டு
    நடராச சதகம் சிதம்பரநாத முனிவர் 18ஆம் நூற்றாண்டு
    அகத்தீசர் சதகம் மஸ்தான் சாகிப் 18ஆம் நூற்றாண்டு
    மயிலாசல சதகம் நமசிவாய நாவலர் 18ஆம் நூற்றாண்டு
    அருணாசல சதகம் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் 18ஆம் நூற்றாண்டு
    அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் 18ஆம் நூற்றாண்டு
    திருத்தொண்டர் சதகம் மலைக்கொழுந்து கவிராயர் 20ஆம் நூற்றாண்டு

        சதகங்கள் ஒரு காலத்தில் பள்ளிகளில் மனப்பாடம் செய்வதற்குரிய நூலாக வைக்கப்பட்டிருந்தன. கலைக்களஞ்சியம் போல, பல குறியீடுகளையும், தொகைகளையும் (பதினாறு பேறு, எண்வகை மணம் போன்றவை) விளக்குவன.

    3.1.4 உலாவும் பரணியும்

        அரசனுடைய பெருமைகளைக் கூறும் வகையில் அமைந்த இலக்கியங்கள் இடைக்காலத்தில் பெருகின. அரசன் உலா வருதலைப் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியம் உலா ஆகும்.

        அதேபோல, போர்க்களச் சிறப்பை, போர்க்களத்தில் வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களின் சிறப்பையும் வெற்றியையும் எடுத்துக் கூறும் சிறப்பு இலக்கியம் பரணி ஆகும். இவ்விரண்டு வகை நூல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

  • உலா
  •     பெருங்காப்பியங்களில் பாட்டுடைத்தலைவர் பவனி வருதல் சுருக்கமாகக் குறிக்கப் பெறும். இப்பவனி வருதலை மட்டுமே உயிர்நாடியாகக் கொண்டு தெய்வமே உலா வருவதும், அவ்வுலாக் கண்டு மகிழ்ச்சி கொண்ட ஏழுவகைப் பெண்டிர்கள் அவன்மீது விருப்பமுற்று மயங்குவதாகவும் கலிவெண்பாவால் பாடப்படுவது உலா என்னும் சிற்றிலக்கியமாகும். இவ்வுலாவை ‘உலாப்புறம் என்றும், புற உலா என்றும், உலாமாலை என்றும் கூறுவர். புலவர் தங்கள் புலமை நலத்துடன் கற்பனை வளம், காலம், சமயம், சமுதாயம், வரலாறு முதலியன சிறப்பிக்கப் படுவதே உலா நூலின் தன்மையாகும்.  காலப்போக்கில் அரசன் உலா வருவதாக அமைத்துப் பாடப்பட்டது.

        ‘ஊரொடு     தோற்றமும் உரித்தென மொழிப’ என்ற தொல்காப்பிய சூத்திரமே உலாவிற்கு அடிப்படையாகும். இவ்வடிப்படை, காப்பியங்களில் ஒரு கூறாகி, பிற்காலத்தில் தனியொரு இலக்கியமாக மலர்ச்சி பெற்றது. உலா இலக்கியத்தில் முற்பகுதியில் உலாவரும் தலைவனது குலம், குடிப்பிறப்பு, மரபு, அழகு, அறிவு, ஆண்மை, அன்பு ஆகியன கூறப்பெறும். பிற்பகுதி உலா வரும் தலைவனைக் கண்டு, ஏழு பருவ மங்கையர்களும்  விரும்பி மயங்கிப் பாடுவதாகும். பெதும்பைப் பருவ மகளிரின் மனநிலையைப் பாடுவது அரிதாகும் என்பதனைப் ‘பேசும் உலாவில் பெதும்பை புலி’ என வழங்கும் வழக்கு மொழியால் அறியலாம்.

        ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கைலாய ஞான உலாவே ஆதி உலா, தெய்விக உலா எனப் புகழ்ப்பெற்ற உலா நூலாகும். இந்நூலில் சிவபெருமானின் காட்சியும் அருள் திறமும் மிக விரிவாகப் பேசப்படுகின்றன.

        பதினொன்றாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் மீது நம்பியாண்டர் நம்பிகள் பாடிய ஆளுடைய பிள்ளையார் திருஉலா மாலையும குறிப்பிடத்தக்கது. சிவப்பிரகாசர் பாடிய திருவெங்கையுலா, இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலா, அந்தகக் கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலா, திருக்கழுக்குன்றத்து     உலா , திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலநாதருலா,     திருக்காளத்திநாதர்     உலா, தத்துவராயரின் சொக்கநாதருலா, திருப்பூவணநாதர் உலா போன்ற நூல்கள் குறிக்கத்தக்கவை.

        சோழர் மூவர் மீது ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா மிகவும் பாராட்டப் பெற்றதாகும் . இது மட்டுமே அரசன் உலாப் போந்ததைப் பாடுகிறது. பிற யாவும் இறைவன் உலாப்பற்றிப் பாடுகின்றன.

  • பரணி
  •     தமிழ்மொழியில் தோன்றிய 96 வகைச் சிறு பிரபந்தங்களுள் பரணியும் ஒன்று. செருக்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனுக்குப் பாடப்படுவது பரணியாகும்.

        ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
        மானவனுக்கு வகுப்பது பரணி - இலக்கண விளக்கம் (4)

    என்று பரணிக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. பரண் மீது இருந்து பறவைகளை விரட்டுதல் போன்று போர்க்களத்தில்  எதிரியை விரட்டியடிப்பதைப் பாடுவது பரணியாகும். பரணி பாடுதற்கு என்று பொருநர் பிரிவு இருந்தது என்பர். ஏர்க்களம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர் என இரு பிரிவு உண்டு என்பர்.

        ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி தக்கனுடைய யாகத்தை வீரபத்திர தேவர் அழித்த வெற்றியைப் பாடுவது. இது புராணக் கதையைத் தழுவியமைந்தது. தத்துவராயரின் அஞ்ஞவதைப் பரணி, ஞானமாகிய இறைவன் மாயாபுரியின் அரசனாகிய அஞ்ஞன் என்பவனை அழித்துத் தம்மைக் காத்த குருவின் மீது பாடப்பட்ட பரணியாகும். காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாம். இவர் மோகவதைப் பரணி என்ற நூலையும் இயற்றியுள்ளார். வைத்தியநாத தேசிகரின் பாசவதைப் பரணி, பண்புகளை உருவகப்படுத்திப் பாடும் தன்மையது. இரணியவதைப் பரணி, கஞ்சவதைப் பரணி, திருச்செந்தில் பரணி போன்ற பலபரணிகளைச் சமய உலகம் பெற்றுள்ளது.

        கலிங்கத்துப் பரணி குலோத்துங்கசோழனின் வெற்றியைப் புகழ்ந்து செயங்கொண்டார் பாடியது. பரணி நூல்களுள் இதுவே மிகச்சிறந்தது.

    3.1.5 பிள்ளைத்தமிழும் தூது நூல்களும்

        ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்று தொல்காப்பியர் பாடாண் திணையைப் பற்றி விளக்கும்போது கூறுகிறார். பாராட்ட வேண்டிய அரசனைக் குழந்தையாகப் பாவித்துப் பாராட்டும் வழக்கம்     தொல்காப்பியர் காலத்திலேயே இருந்ததை இது காட்டுகிறது. பாடவேண்டிய தலைவனை அல்லது தெய்வத்தை ஒரு குழந்தையாகப்     பாவித்து, ஒரு தாய் பாடுவது போல நூறு பாடல்களால்     பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். பத்துப் பருவங்களில், ஒவ்வொரு பருவத்திலும் பத்துப்பாடல்கள் இடம் பெறும் இப்பிள்ளைத்தமிழினைப் பிள்ளைக் கவி, பிள்ளைப்பாட்டு என்றும் கூறுவர் இப்பிள்ளைத் தமிழின் பாட்டுடை நாயகர்கள் கடவுள், ஆசிரியர், வள்ளல், தொண்டர், தலைவர், புலவர் ஆவர்.

        இப்பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற்   பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ்’ என்ற சொல் ‘பிள்ளைத்தமிழ்’ என்ற சிற்றிலக்கியத்தில் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகப்படியான இலக்கிய நூல்கள் வெளியானதும் இந்த ‘பிள்ளைத்தமிழ்’ இலக்கிய வகையில்தான் என்பதும் சிறப்பாகும்.

        குமரகுருபரர் பாடிய மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழும்,   முத்துக்     குமாரசாமிப் பிள்ளைத்தமிழும்பிள்ளைத்தமிழ் நூல்களுள் நிகரற்றவை. பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத்மிழும், பத்துப் பிள்ளைத்தமிழ்  நூல்களைப் பாடிய மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் சேக்கிழார் பிள்ளைத்தமிழும் குறிப்பிடத்தக்கவை.

         அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் முதலான பல நூல்கள் உள்ளன.

    • தூது

        தன்     கருத்தைப் பிறிதொருவருக்குத் தெரிவிக்குமாறு, ஒருவரைத் தன் சார்பாளராக அனுப்புவதே தூது இலக்கியம் எனப்படும். புறம் சார்ந்த தூதுகள் பல. அதியன் தூதனுப்ப,     ஒளவையார் தொண்டைமானிடத்தில் தூது சென்றது புறநானூற்றில் காணப்படும் செய்தியாகும்.

        தலைவன், தலைவி இருவருள் ஒருவர் விரகதாபத்தால் வேதனையுற்ற     ஒருவர், மற்றவருக்குத் தன் துயரினைத் தெரிவிக்குமாறு     உயர்திணை     மனிதரையோ, அஃறிணை உயிர்களையோ, சிலவேளை தென்றல், மேகம் போன்ற உயிரற்ற பொருள்களையோ தூது விடுப்பதாகப் பாடுவது தூது இலக்கியம் ஆகும். இது கலிவெண்பாவால் பாடப்படும். சிற்றிலக்கிய வகைகளுள் தூது பிற்காலத்தது ஆகும். அன்னம், மயில், கிள்ளை (கிளி), மேகம், பூவை, பாங்கி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டுஎன்னும் பத்தும் என அதனைப் பட்டியல் இட்டாலும் இவற்றைக் கடந்தும் தூது இலக்கியங்கள் பிறந்துள்ளன.

        நமக்குக் கிடைக்கின்ற தூது இலக்கியத்தில் முதல் நூலாகப் பதினான்காம் நூற்றாண்டில் தோன்றிய உமாபதி சிவாசாரியர் தமது குருவாகிய மறைஞான சம்பந்தருக்கு அனுப்பிய நெஞ்சுவிடு தூது  அமைகின்றது. தமிழ் விடு தூது என்ற நூலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. தமிழே உணவாய், உணர்வாய், உயிராய்க் கொண்ட தமிழ் அன்பர் ஒருவர், தமிழ் வளர்க்கும் மதுரையில் குடியிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட காரிகை, தமிழைத் தூது விடுவதாய் அமைத்து இயற்றியுள்ளார். தலைவி, தமிழின் பெருமையைச் சொல்லும் பகுதி தமிழ்மொழியின் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது.

        இந்நூல் 268 கண்ணிகளை யுடையது.

         அழகர்கிள்ளை விடு தூதை பாடியவர் பலபட்டடை சொக்கநாதப்  புலவர் ஆவார். திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கண்டு காதலுற்ற பெண்,  கிளியைத் தூது விடுப்பதாக இது அமைந்துள்ளது.

        வண்டு விடு தூதினை இயற்றியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த கச்சியப்ப முனிவர் ஆவார். காஞ்சிபுரத்தில் உள்ள ஆனந்த ருத்திரேசர் மீது காதல் கொண்ட பெண், வண்டினைத் தூது விடுவதாக இது அமைந்துள்ளது. இறைவன் உலா வருதலால் ஏற்படும் நன்மை, தீமைகளைக் குறிக்கும் நயமிகு பாடல் பகுதி:

        அறம்தழைப்ப அன்பர் அகம்தழைப்ப அன்பின்
        திறம்தழைப்பச் செல்வம் தழைப்ப - மறந்தழைத்த
        வேற்கணார் உள்ளம் விடைகொள்ள நல்லுலா
        ஏற்குமா கொள்ள இனிது

    3.1.6 மடல், பள்ளு, குறவஞ்சி

        பெண் ஒருத்தியைக் கண்டு காமமுற்ற ஒருவன் அவளை அடைய முடியாத நிலையில் காதல் கைகூடாத போழ்து, பனைமடல்  கருக்குகளால் குதிரை செய்து அதன் மீதமர்ந்து அப்பெண்ணின் உருவினைப் படமாக எழுதிக் கையில் ஏந்திக் கொண்டு உடல் முழுதும் நீறு பூசி, எருக்கம் பூ, எலும்பு மாலைகளை அணிந்து, நாணம் துறந்து வீதியில் வருவது மடல் ஏறுதல் ஆகும்.

        மடல்     என்பது அகத்திணையில் ஒரு துறையாகும். அகப்பொருள் துறையின் ஒன்றாகிய மடல் படிப்படியே வளர்ந்து கோவையுள் ஒரு கூறாகிப் பின் தனிப்பிரபந்தமாகவே வளர்ந்து விட்டது.

        இவ்வகத்துறையைத்     தனியொரு சிற்றிலக்கியமாகப் பெருக்கியவர் திருமங்கையாழ்வார். திருமால் மீது காதல் கொண்ட பெண் திருமாலை அடையும் பொருட்டு ‘மடலூர்வன் மடலூர்வன்’ என மொழிவதாகச் சிறிய திருமடல், பெரிய திருமடல் என இருமடல்கள் பாடியுள்ளார். நாராயணன் என்னும் பெயருக்கு எதுகை வருமாறு 155 அடிகளில் கலிவெண்பாவால் அமைவது சிறிய திருமடல்; கண்ணன் பெயருக்கு எதுகை அமையும் வண்ணம் 297  அடிகளில் கலிவெண்பாவால் இயன்றது பெரிய திருமடல்.

        தெருவில்     மாலவன் குடக்கூத்தாடுவதைப் பந்தாடிக் கொண்டிருந்த தலைவியும், எல்லோரையும் போல் நோக்கினாள். காதல் மீதூர்ந்தாள் அறிவு அழிய உணர்வு மிகுந்தாள். தலைவி தன்நெஞ்சைத் தூது விடுத்தாள்; அவனிடம் பதில் பெறாமை கண்டு குறை கூறி மடலூர்வாள் என்றது சிறிய திருமடலின் செய்தியாகும்.


    ஊரார் இகழிலும் ஊரா தொழியேன் நான்,
    வாரார்பூம் பெண்ணை மடல்
    ”.

        மடலூர்வேன் என்று அச்சுறுத்தியும் திருமால் வாராமை கண்டு, உலகறிய ஊர்வன்நான், .......... மன்னியபூம் பெண்ணை மடல்’ - என்று பெரிய திருமடல் பாடும். இவ்விரண்டும் இனிய தமிழில் இன் கவிச்சுவை கொண்டவையாம்.

  • பள்ளு
  •     தமிழிலக்கியப் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் பள்ளு நூல்கள்.

        நெல்லு வகையை எண்ணினாலும், பள்ளு வகையை எண்ண முடியாது என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் வரும் பள்ளுவகை என்பதற்குப் பள்ளர்களின் சாதிவகை எனப் பலர்பொருள் கொள்ளினும் ‘பள்ளு’ என்னும் நூல்களின் வகை எனப் பொருள் கொள்ளலே சிறப்பு.

        பள்ளுப் பாடலினை உழத்திப் பாட்டு, மருதநில நந்தா விளக்கம் எனச் சிறப்பிப்பர். இந்நூல் காப்புச் செய்யுள், கடவுள் வாழ்த்து முதல் பள்ளியர் ஏசல், சமாதானமாகி வாழ்த்துதல் வரை பல உறுப்புகளைக் கொண்டது.

        திருவாரூர்ப் பள்ளு இயற்றியவர் கமலை ஞானப்பிரகாசர் ஆவார்.   திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைப்   பாட்டுடைத் தலைவராகக் கொண்டு 72 செய்யுள்களில் பாடியுள்ளார். பிற பள்ளு இலக்கியத்தினின்று இது மாறுபட்டுள்ளது. நாட்டு வளம், பாத்திர வருகை, குயில்கூவ வேண்டுதல், தெய்வம் தொழுதல், ஐவகை நிலத்தில் தெய்வம் தொழுதல், ஐவகை நிலத்தில் ஆற்றுநீர் பரவுதல் ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

        குருகூர்ப்     பள்ளு, ஆண்டவனின் அடியாரான நம்மாழ்வாரைப் பாட்டுடை நாயகராகக் கொண்டது. இதனை இயற்றியவர் சடகோபப் புலவர். வெ. நா. சீனிவாச ஐயங்கார் இந்நூலை 1932-இல் பதிப்பித்தார்.

        திருமலை முருகன் பள்ளு, பெரியவன்     கவிராயர் பாடியதாம். தென் பாண்டி நாட்டில் சிறந்த திருத்தலங்களில் ஒன்று திருமலை. அங்கு எழுந்தருளியிருக்கும் முருகனைப் பாட்டுடைத்   தலைவனாகக் கொண்டு எழுந்ததே திருமலை முருகன் பள்ளு ஆகும். குயில் கூவுதல், தெய்வ நிலை போற்றுதல் எனும் இரு பகுதிக் கிடையில் பள்ளியர் கும்மியடித்தல் எனும் புதிய பகுதி இப்பள்ளுவில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்பாடல்,

         கும்மியடி பெண்ணே கும்மியடி - இரு
        கொங்கைகளுங் காப்புங் குலுங்கத்
        தெம்முனை வேலனைக் கொண்டாடிச்
        சேர்ந்து கும்மியடியுங்கடி

        சின்னத்தம்பி புலவர் என்பவர் பாறாளை விநாயகர் பள்ளு இயற்றியுள்ளார். இந்நூல் இலங்கையில் எழுந்த பள்ளு நூலாகும். தமிழகத்துள் எழுந்த பள்ளு இலக்கியங்கள் விநாயகரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடவில்லை. ஆனால் இந்நூலின் பாட்டுடைத் தலைவர் விநாயகர் ஆவார். திருவிடை மருதூர்ப் பள்ளு, தஞ்சைப் பள்ளு, திருச்செந்தில் பள்ளு, கொடுமாளூர்ப் பள்ளு எனப் பல பள்ளு நூல்களும் உள.

        பள்ளு     நூல்கள்     பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கின்றன.   பள்ளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சித்தரிப்பதோடு வேறு பல செய்திகளையும் புலப்படுத்துகின்றன.  நாட்டுவளம், மன்னர் பெருமை, மக்கள் வாழ்வு, மழைக்குறி, ஆற்று  நீர்ப்பெருக்கு ஆகிய குறிப்புகளையும் பள்ளு நூல்கள் உணர்த்துகின்றன.

    • குறவஞ்சி

        குறவஞ்சி எனும் சொல் குறப்பெண்ணைக் குறிக்கும். குறத்தி குறிசொல்லும் பகுதியே ‘குறவஞ்சி’ நூலின் சுவை மலிந்த பகுதியாகும். எனவே அச்சிறப்பு நோக்கியே நூலும் குறவஞ்சி எனப் பெயர் பெற்றது. பாடப்படும் தலைவர் பெயரைச் சார்ந்தோ, தலைவரின் ஊர்ப்பெயரைச் சார்ந்தோ குறவஞ்சி அமையும். குற்றாலக் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி என்பவை தலைவர் ஊர்ப்பெயரைச் சார்ந்தவை. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி தலைவர் பெயரைச் சார்ந்தது.

        குறவஞ்சி நூல்களுள் திருக்குற்றாலக் குறவஞ்சியே சிறப்புமிக்கதாகும். இதனை இயற்றியவர் திரிகூடராசப்பக் கவிராயர்.

        தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
        திருக்குற்றாலர் தென்ஆரிய நாடே

        என்று திருக்குற்றால நாட்டை வருணிக்கும் இப்பாடலில், இவ்வரிகளில் மக்கள் தேடுவது அறமும், புகழுமே என்று கூறுகிறார்.

        அந்நாட்டு மலைவளத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்த ஆசிரியர்,

         வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
        மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும். (1)

        செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
        தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும் (2)

        என்று பாடுகிறார்.

        குமரேசர் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, திருவாரூர்க் குறவஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி போன்ற பலவும் உள்ளன. ஆயினும் குறவஞ்சி இலக்கியத்தில் காலத்தால் முற்பட்டதும் தலைசிறந்ததும் திருக்குற்றாலக் குறவஞ்சியே. எளிமை, இனிமை, கற்பனை, அழகு, கவிதைச்சுவை, சந்த நலம், செந்தமிழ் வளம் ஆகியன அனைத்தும் கூடியது, திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியேயாகும்.

    3.1.7 மாலையும் பத்தும்

        எண்ணிக்கை அடிப்படையில் அமைந்த இலக்கிய வகைகள் சிலவற்றை முன்பே பார்த்தோம். மேலும் மாலை, பத்து என்னும் இரண்டு வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளுவோம்.

    • மாலை

         ஒரு பொருள் குறித்துப் பல கருத்துப் பேசும் பல செய்யுட்களால் அமைவது மாலையாகும். ஒரே விதமான பூக்களைக் கொண்டும் மாலை தொடுக்கலாம். பல நிறம் கொண்ட பல்வேறு மலர்களாலும் மாலை அமைக்கலாம். அதே போன்று ஒரு பொருளின் பல்வேறு கூறுகளைக் குறித்து ஒரே வகைப் பாவால் பாடல் பாடப் பெறுவதும், பல்வேறு பாக்களால் பாவினங்களால் பாடுவதும் மாலையாகும். இம் மாலை எனும் சிற்றிலக்கியங்கள் சொல்லழகும், பொருள் அழகும் கொண்டவையாக அமையும்.  மாலைப் பிரபந்தம் அனைத்தும் தொல்காப்பியத்தில் ‘விருந்து’ எனும் வனப்பு எல்லையுள் அடங்குவனவாகும்.

        இதன் வகைகள் இரட்டைமணி மாலை, நான்மணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, பன்மணி மாலை, பல்சந்த மாலை, காப்பு மாலை முதலியனவாம்.

        காரைக்காலம்மையார் பாடிய திருவிரட்டை மணி மாலை காலத்தால் முந்தியது. பட்டினத்துப் பிள்ளையார் பாடிய கோயில் நான்மணி மாலையும், சிவப்பிரகாசரின் நால்வர் நான்மணி மாலையும், குமரகுருபரின் மீனாட்சியம்மை இரட்டைமணி மாலை,  சிவகாமியம்மை இரட்டைமணி மாலையும், நம்பியாண்டார் நம்பியின் திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலையும் குறிப்பிடத்தக்கன.

        வெண்பாவும்     விருத்தமும் அல்லது வெண்பாவும் கலித்துறையும் என இருவகைப்பாக்கள் மாறி மாறி வருவது இரட்டைமணி மாலையாக இருபது பாடல்கள் இடம்பெற்றிருக்கும். வெண்பா, ஆசிரியம், கலித்துறை ஆகிய மூன்றும் முப்பது பாடல்களாக மாறிமாறி வரின் மும்மணி மாலையாம். வெண்பா, ஆசிரியம், கலித்துறை, விருத்தம் ஆகிய நான்கும் நாற்பது பாடல்களில் மாறிமாறி வரின் நான்மணி மாலையாகும். இம்மாலை  இலக்கியவகை பக்தி இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது எனில் மிகையாகாது.

    • பத்து

        பத்து, பதிகம் என்பன சிற்றிலக்கிய வகைகளுள் அடங்குவன. ஒருவகைப் பாவினால் பத்துப் பாடல்கள் பாடுவதால் பதிகம், பத்து என்று  அழைத்தனர்.  பத்து எண்ணிக்கையில் சிறிதுகூட்டியோ,     குறைத்தோ வந்தாலும் பதிகம் எனப்பட்டது.  பத்துக்களே வகைமைப் பெயர்களாக மாறும்போது பதிகம் என்று
    பெயரிட்டனர். பதிகங்கள் ஒவ்வொன்றும் பதினொரு பாடல்கள் கொண்டவையாகத் திகழ்கின்றன. பதினோராம் பாடல் பாடியோர் பெயரையும் பத்துப்பாடல்களைப் படிப்பதன் பயனையும் கூறுவதாக அமையும். ஒரு பா ஒருபஃது, இருபா இருபஃது என்பனவெண்பாவினாலோ,     அகவற்பாவினாலோ     பதிகங்கள் அமைவனவாகும்.

        இவ்வகைமைக்குச்     சான்றாக, சங்க இலக்கியத்துள் பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும் பத்துக்களைத் தோற்றுவித்தன. ஐங்குறுநூற்றிலும் திருவாசகத்தினுள்ளும் தெய்யோப் பத்து, அச்சோப்பத்து, பிடித்த பத்து, ஆசைப்பத்து என்று பிரிவுகள் பத்து எனும் பெயரிலேயே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாம். காலத்தால் முந்திய பதிகங்களாக, காரைக்காலம்மையார் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டினையும் குறிப்பிடலாம்.

        பதிகத்தின் வளர்ச்சியே, தசாங்கம் என்பதாம். அரசனுடைய கொடி, குடை, படை முதலிய பத்து அங்கங்களையும் புகழ்வதாக அமைவதே தசாங்கம் ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தசாங்கத்தை மையப்படுத்தியும், புதுமையாகவும், பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி, பாரத தேவியின் திருத்தசாங்கம்   பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.