3.3 சைவ சமயச் சான்றோர்

    தமிழில் சங்க நூல், நீதி நூல் போல, தத்துவங்களும் இலக்கியச் சுவையுடன் படைக்கப் பெற்றுள்ளன. பக்திப் பனுவல்கள், இறைவன் புகழ்பாடும் அருச்சனைப் பாடல்களாகவும், பக்திமையை வெளிப்படுத்தும் பாசுரங்களாகவும், தத்துவக் கருத்துகளை வெளிப்படுத்தும் பாங்குடனும் படைக்கப்பட்டுள்ளன. அரிய பெரிய சமயச் சிந்தனைகளையும் தத்துவங்களையும் மிக எளிமைப்படுத்தி உலகிற்கு     வழங்கியுள்ளனர் சான்றோர். அவர்களுள்  அருணகிரிநாதர்,     பட்டினத்தார், தாயுமானவர், குமரகுருபரர், சிவப்பிரகாசர், வள்ளல் இராமலிங்க அடிகள், பாரதியார் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவராவர்.

  • அருணகிரிநாதர்

    இவர் இயற்றிய திருப்புகழ் குன்றமெறிந்த குமரக் கடவுளின் புகழினை இன்னிசைப் பாடல்களில் உணர்த்துகின்றது. தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களிலும் எழுந்தருளியிருக்கும் செவ்வேளைச் சந்தப்பாக்களால், சந்த விருத்தப் பெருங்கடலாம் அருணகிரிநாதர் பாடியிருப்பது கொண்டு, அப்பாடல் பெற்ற தலங்கள் எல்லாம்  இன்று சைவர்களால் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றன. நூலின் பெயர் திருப்புகழாய் அமைந்திருப்பதோடு மட்டுமன்றி, நூலில் அமைந்துள்ள 1307 பாடல்கள் ஒவ்வொன்றுமே திருப்புகழ் என்றே வழங்கப்படுகின்றமை இந்நூலின் சிறப்பாகும்.

    1088 க்கு மேற்பட்ட சந்த வேறுபாடுகளை 1307 பாடல்களில் காணலாம் என்று இசைவல்லார் கூறுவர். முதன் முதல் சந்தப்பாவைப் புதிய முறையில் கையாண்டவர் இவரே எனலாம். இவரது காலம் 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்பர்.

    திருப்புகழில் ‘சலாம்’ ‘சபாஷ்’ ‘ராவுத்தன்’ போன்ற  பிறமொழிச் சொற்கள் கலந்திருப்பது நோக்கற்குரியது. இது அக்காலத்து ஆட்சிப் போக்கினையும் மொழிப்போக்கினையும் உணர்த்தும். இதேபோல் அளவுக்கு மீறிய வடசொற்களும் கலந்திருக்கக் காணலாம்.

    கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல்  விருத்தம், மயில் விருத்தம்,  திருவகுப்பு ஆகிய நூல்களைப் பாடிய அருட்கவிஞராவார், அருணகிரிநாதர்.

  • கச்சியப்ப முனிவர்

    கவிராட்சதர் எனப் புகழப்படும் கச்சியப்ப முனிவர், 18-ஆம் நூற்றாண்டில்     வாழ்ந்தவர் இவருடைய புராணக் காதலில் முகிழ்த்தவையே விநாயக புராணமும், தணிகைப் புராணமும், தணிகைப் புராணத்தின் நடை சிறிது கடினமானது. இவர் திருத்தணிகையில் வாழ்ந்தவர் என்பர். தொண்டை நாட்டின்  சிறப்பும், அக்கால மக்களின் வரலாறும், சமயமும், வழிபாட்டு நிலையும், தணிகைப் புராணம்கொண்டு தெளியலாம்.

  • பட்டினத்தடிகள்

    பட்டினத்தடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். வணிக மரபைச்  சார்ந்தவர். தந்தையார் பெயர் சிவநேசர்; தாயார் ஞானகலை,     இவரது இளமைப் பெயர் திருவெண்காடர். ஆசிரியரிடம் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். சிவபூசையில் சிறந்து விளங்கியவர். வாழ்க்கையின் உண்மைத் தன்மையை     உணர்ந்தார்     பட்டினத்தார்.     எல்லாமே  நிலையில்லாதவை எனத் தெளிந்தார். ஆன்ம முன்னேற்றத்திற்குத் துறவைத்     தவிர வேறுவழியில்லை என்பதறிந்து துறவு மேற்கொண்டார். பட்டினத்தார் பாடிய பாடல்கள் நெஞ்சை உருக்க வல்லன.

  • தாயுமானவர்

    திருமறைக்     காட்டில் சைவ வளோளர் குலத்தில்  கேடிலியப்பப்  பிள்ளைக்கும், கஜவல்லி அம்மையாருக்கும்  மகனாகப் பிறந்தார் திருச்சிராப்பள்ளி விசய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் அமைச்சராக இருந்தார் ( 1705 - 1742) வடமொழி,  தென்மொழி இரண்டிலும் வல்லவர். தம் பதவியைத் துறந்து துறவியானவர்.     தாயுமானவர் சைவசித்தாந்தம், அத்வைதம் இரண்டையும் நன்கு உணர்ந்தவர். இவருடைய பராபரக் கண்ணி
அரிய தத்துவங்களை எளிய நடையில் சொல்வதாகும்.

    எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே!
    நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
    மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே!

  • குமரகுருபரர்

    சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரி  அம்மைக்கும், திருநெல்வேலிச் சீமையிலே ஸ்ரீ வைகுண்டத்திலே சைவவளோளர் மரபிலே ஊமையாய்ப் பிறந்து ஐந்தாண்டுகள் வரை பேசாமல் இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் பெற்றார் என இவர் வரலாறு கூறுகின்றது. ‘இவர் பழுத்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்; சிறந்த சிவநேசச் செல்வர்; உயர்குணம் ஒழுங்கமைந்த பெருந்தகை. உலகியல் அறிந்த பேரறிஞர்; தமிழ்மொழியின்பால் இவருக்கிருந்த பக்தி அளவிடற்கரியது. அதனைத் தீந்தமிழ், தெய்வத்தமிழ் என்பார். பாவும் பாவினமும் ஆகிய   செய்யுள்களைப் பாடுவதில் இவருக்கு மிகுந்த வல்லமையிருந்தது.

    இவர் வடநாட்டிலே சைவ சமயத்தைப் பரப்பினார்; அங்கு இந்தி கற்றுச் சொற்பொழிவாற்றினார்; காசியில் ஒரு மடாலயம் நிறுவினார். திருப்பனந்தாளில் காசிமடம் என்னும் பெயரால்   இவர் ஏற்படுத்திய மடம் இன்றும் தமிழ்த் தொண்டாற்றி வருகிறது. இவர் சில இந்துஸ்தானிச் சொற்களைத் தம் பாடலில் ஆண்டுள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் கயிலாயநாதர்  மீது கயிலைக் கலம்பகம் பாடினார். மதுரை மீனாட்சியம்மையை நோக்கிப் பாடியது ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ திருவாலவாயில் உறையும் சோமசுந்தரப் பெருமாள் மீது ‘மதுரைக்கலம்பகம்’ பாடினார். மதுரைத் திருமலை நாயக்க மன்னரின் வேண்டுகோட்படி      ‘நீதிநெறிவிளக்கம்’ என்னும் நூலினை இயற்றினார். இந்நூலில் பழந்தமிழ் நூல்களின் தொடர்களைக் காணலாம். திருவாரூர் நான்மணி மாலை, புள்ளிருக்கு வேளூர் முத்துக்குமாரசுவாமி கடவுளின் மீது ‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்’, சிதம்பர மும்மணிக் கோவை, பண்டார மும்மணிக் கோவை ‘காசிக்கலம்பகம்’ முதலிய நூல்களை இயற்றினார். காசியில் பாதுஷாவின் ஆதரவு தேடச் சென்ற போது பாடிய நூல், சகலகலாவல்லி மாலை.

  • பரஞ்சோதி முனிவர்

    பரஞ்சோதி     முனிவர் திருமறைக்காட்டில் வழிவழிச் சைவர்களாகிய அபிடேகத்தார் மரபில் வந்தவர்; வளோள மரபினர். இவர் வடமொழி, தென்மொழி, திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் இவற்றை ஐயம் திரிபு அறக் கற்றவர். சிவபக்தியும், அடியார் பக்தியும் கொண்டவர். இவர் மதுரைத் தலத்தின் பெருமை பற்றியும், அங்குள்ள சோமசுந்தரப் பெருமானின் பெருமை பற்றியும் பாடிய நூலே திருவிளையாடற் புராணமாகும். இந்நூலில் கடவுள் வாழ்த்து, தலச்சிறப்பு, மூர்த்தி, தீர்த்தச்சிறப்பு ஆகியவற்றுடன 64 திருவிளையாடல்களும் நூல் முடிவில் அர்ச்சனைச் சிறப்பும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திரு ஆலவாய்க்காண்டம் என்னும் மூன்று காண்டங்களையுடையது.  இனிய சந்தங்களுடன் சொற்சுவை, பொருட்சுவை கொண்டதாக இந்நூல் திகழ்கின்றது. தற்போது நமக்குக் கிடைத்துள்ள பாடல்கள் 3363 ஆகும்.

  • சிவப்பிரகாச சுவாமிகள்

    வீரசைவ சமயத்தைச் சார்ந்த இவர் தொண்டை நாட்டுத் துறைமங்கலம் என்னும் ஊரினர். தருமபுர ஆதீன வித்துவான் வெள்ளியம்பலத்  தம்பிரானிடம் கல்வி பயின்றார். அவர்விரோதியினை வென்று, திருச்செந்தூர் முருகன் மீது, ‘நிரோட்டக யமக அந்தாதி’ பாடினார். இதழ்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடப் பெறுவது இந்நூலின் தனிச்சிறப்பாகும். சைவ சமயத் தலைவராய் விளங்கிய நால்வர் பெருமையினை இவர் ‘நால்வர் நான்மணிமாலை’யில் புகழ்ந்துரைக்கின்றார். 

    வேதத்தைக் காட்டிலும் திருவாசகமே சிறந்தது மேலும் திருவாசகத்தைப் படிப்போர் கருங்கல்மனம் கரைந்து கண்களில்  நீர் பெருக இறைவனுக்கு அடியவராவார் என்று கூறுகின்றார்.

    இவர் வீரசைவத்தின் பெருமையினை விளக்கும் அரிய காப்பியமாம் பிரபுலிங்கலீலை என்னும் ஓர் அரிய நூலினைச் செய்துள்ளார். இந்நூலில் சிவப்பிரகாசரின் கற்பனை வளத்தினையும்   சொற்பொருள் நயத்தினையும் காணலாம். நீதி நூல்களில் ஒன்றாய்த் திகழும் ‘நன்னெறி’யும் இவர் இயற்றியதே. திருவண்ணாமலை அருணாசலேசுவரரைக் குறித்து எழுந்த நூல் ‘சோணசைல மாலையாகும்’, ‘மந்திரிக்கோவை’ என்று திருக்கோவையார்க்கு அடுத்த நிலையிலே வைத்து எண்ணப்படும் ‘திருவெங்கைக் கோவை’ இவரது படைப்பேயாகும்.

  • வள்ளல் இராமலிங்க அடிகள்

    இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சமயத்துறையில் ஓர் ஒளிவிளக்காய்த் திகழ்ந்தார். தென்னார்க்காடு மாவட்டத்தில்  மருதூரின் பிறந்த இவர் சென்னையிலும் கருங்குழியிலும் வாழ்ந்து இறுதியில் வடலூரில் தமது ஐம்பத்து ஒன்றாம் வயதில் மறைந்தார். இவருடைய தந்தையார் பெயர் இராமையாப்பிள்ளை. தாயார் பெயர் சின்னம்மையார். நல்ல நாவன்மை வாய்க்கப் பெற்ற இவர், புராண விரிவுரையாற்றுவதில் இளமையிலேயே சிறந்து விளங்கினார். மனுநீதிச்சோழன் வரலாற்றை ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற சிறந்த உரைநடை நூலாக எழுதியுள்ளார். சிவநேச வெண்பா,
நெஞ்சறிவுறுத்தல்,     மகாதேவ மாலை, இங்கித மாலை, தெய்வமணி மாலை
முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். ‘பிள்ளைப்  பெருவிண்ணப்பமாகக்’ கூறுகின்றார்; இறைவனை  நோக்கி மனங்கசிந்து உருகுகின்றார்.

    அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

    என்பதே இவர் இறைவன்பால் வேண்டும் வேண்டுகோள். இவருடைய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.

    எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
    தம்முயிர்போல எண்ணி உள்ளே
    ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
    யாவரவர் உளந்தான் சுத்த
    சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
    இடம் எனநான் தேர்ந்தேன் அந்த
    வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட என்
    சிந்தைமிக விழைந்த தாலோ!

என்ற பாட்டால் வள்ளலார் கண்ட நெறியினை அறியலாம்.

  • பாரதியார்

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வானில் ஓர் எழு ஞாயிறு எனத் தேசிய கவிஞர் பாரதியார் தோன்றினார். இவர் பெற்றோர் சின்னசாமி அய்யர், இலக்குமி அம்மையார் ஆவார். இவர் காலம் 1882 முதல் 1921 ஆண்டு ஆகும். இவர் எழுதியவை கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எனப் பல தொகுதிகளாக
வெளியிடப்பட்டுள்ளன. இவர் பாடல்களில் சமயச் சிந்தனைகளும், சமுதாயச் சீர்திருத்தமும் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக, பக்திப் பாடல்களிலும் புதுமை கண்டவர் பாரதியார். அவருடைய கண்ணன் பாட்டுத் தனிச்சிறப்புடையது. கண்ணனைப் பல நிலைகளில் மிக அருகே கொண்டு வருகிறார். ‘தேவ குலத்தவன் என்றே சேதி தெரியாதவர் சில பேருரைப்பார்’ என்கிறார். சக்தி வழிபாட்டில் தோய்ந்த     அவர்     மனம்,     பாடல்கள் அனைத்திலும்  எதிரொலிக்கின்றது.     பாரதியின் குயில்பாட்டு நகைச்சுவை இழையோடும் மெய்ப்பொருட்பாட்டாகும். ‘சிந்து’ விருத்தம், ஆசிரியம் ஆகியன கலந்து ‘பாஞ்சாலி சபதம் என அவர்  படைத்த குறுங்காப்பியம் நிகரற்றது. பாரத தேச நிலையைப் பாரதக் கதையின் உள்ளீடாக இழையோட விட்ட அக்காப்பியம் தெறிக்கும்  கனல் போலமைந்து, உணர்ச்சியைக் கொட்டுகிறது. ஞானரதம், சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள் ஆகிய நூல்களும் பகவத் கீதை மொழிபெயர்ப்பும் குறிப்பிடத்தக்கனவாம்.